திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோவில்: Thiruppanandal


Thiruppanandal Arunajadeswarar Temple
திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவில்

சிவஸ்தலம்
திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் [செஞ்சடையப்பர்] கோவில்

மூலவர்
அருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்

அம்மன்
பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி

தீர்த்தம்
பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள்.

தல விருட்சம்
பனைமரம்

ஆகமம்
காமிய ஆகமம்

புராண பெயர்
தாடகையீச்சரம்

ஊர்
திருப்பனந்தாள்

மாவட்டம்
தஞ்சாவூர்

Thiruppanandal Temple History in Tamil
திருப்பனந்தாள் கோவில் வரலாறு
தாடகை மகப்பேறு விரும்பித் தவம் இயற்றுங்கால் பிரமதேவன் தோன்றி, ‘நீ தாலவனம் சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய்’ எனப் பணித்தனன். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாது விதிப்படி, இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை நெகிழச் செய்தனன்.
தாடகையும் ஆடையை இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டு ‘அண்ணலே! யாது செய்வேன்; எவ்வாறாயினும் இம்மாலையை ஏற்று அடியேனை ஆதரித்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இறைவனும் தனது திருமுடி சாய்த்து மாலையினை ஏற்றுக் கொண்டனன். உடனே அவளுக்குப் பதினாறு கரங்கள் தோன்றின. அவளும் பெருமானது கருணையை வியந்து தோத்திரிக்கப் பெருமானும் இடபாரூடராய்க் காட்சி தந்தனன். அப்போது அவள் பணிந்து வணங்கி, ‘அடியேனுக்கு மகப்பேறு அளிப்பதோடு அடியேனுக்குத் தேவரீர் அருள் பாலித்ததை யாவரும் நினைவு கூர்தற்காக இத்தலத்துக்கு அடியேன் பெயர் வழங்கி வர வேண்டும்? என விண்ணப்பித்தனள், பரமனும் ‘அவ்வாறே ஆகுக’ எனப் பணித்து மறைந்தனன்.
தாடகையும் ஆலயத்திற்கு வடபால் ஓர் தீர்த்தமைத்துத் தென் கரையிலே வீரியம்மனையும், கீழ்க்கரையில் வைரவரையும் காவலாகப் பிரதிட்டித்து வணங்கி மகப்பேற்றையும் அடைந்தாள்.
இத்தலத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சோழ அரசனாகிய வீரசேனனென்பவன், இத்தலத்திறைவன் தாடகையின் அன்புக்காகத் திருமுடி சாய்ந்திருப்பதைக் கேள்வியுற்று இறைவன் திருமுடியை நிமிர்த்தி வழிபட எண்ணினான். யானை, குதிரை முதலியவைகளைக் கட்டி இழுப்பித்தான், முயற்சி பயனளிக்கவில்லை கவலைக்கடலில் ஆழ்ந்தான். இச்செய்தி திருக்கடவூர் குங்குலியக்கலய நாயனாருக்கு எட்டியது. அவரும் இத்தலத்திற்கு வந்தார்.
தாமும் அத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். யானைகளை அவிழ்க்கச் செய்து தம் கழுத்தில் அரிகண்டமும் இறைவர் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுத்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. உடனே பெருமான் தமது திருக்கரத்தைத் தோற்றி சிரசின் மீது வைத்தருள, அறுபட்ட சிரசும் பொருந்தியது. இறைவன் திருமுடியும் நிமிர்ந்தது. அது கண்ட அரசன் அன்புக் கயிற்றால் நாயனார் இழுத்து நிமிர்த்ததைக் கண்டான். வணங்கினான்.
தன்னுடைய முயற்சிக்குத்தலை நிமிராது, குங்குலியக்கலயனார் அன்புக்குத் தலை நிமிர்ந்த இறைவனின் செயல் கண்ட சோழ மன்னன் மனம் வருத்தமடைந்தாகவும், அதனால் செஞ்சடையப்பரை வழிபடுதலைத் தவிர்த்து, திருப்பனந்தாளின் மேற்கே ஒரு இடத்தில் இதே போன்ற ஒரு பெருஞ் சிவாலயத்தை எழுப்பி வழிபட்டதாகவும் ஒரு செவிவழிக் கதை வழங்கி வருகிறது. பிறகாலத்தில் ஏற்பட்ட மண்மாரியால் அச்சிவாலயம் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பனந்தாள் கோவில் அமைப்பு
ஊரின் நடுவில் அமைந்துள்ள இக்கோவிலின் பரப்பு ‘இருமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நாலுமா நிலம்’ எனக் கல்வெட்டு கூறுகின்றது. மேற்கு நோக்கிய மிகப் பொலிவுடனும், சித்திர வேலைப்பாட்டுடனும், 7 அடுக்குகளுடனும் வானுற ஓங்கி நிற்கிறது. இராசகோபுரத்தையடுத்துள்ள பதினாறு கால் மண்டபமும், வடபால் உள்ள வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தையடுத்துள்ள வெளவால் நெற்றி மண்டபமும், சிற்ப ஓவிய மேம்பாடு உடையனவாய்த் திகழ்கின்றன. கோவிலில் மேற்பால் ஒரு கோபுரமும் உண்டு. சுவாமி சந்நிதியைச் சுற்றி உள் பிராகாரங்களும், அதனை அடுத்து வெளிப் பிராகாரங்களும் செம்மையுற அமைக்கப் பெற்றுப் பொலிவுடன் விளங்குகின்றன.

தலப்பெருமை
கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.
தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம்.
தேவாரப்பதிகம்:
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்சஎரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும்பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.
– திருஞானசம்பந்தர்
தீர்த்தங்கள்: பிரமதீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம், மண்ணியாறு முதலாகிய பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

கல்வெட்டு வரலாறு: இத்திருக்கோவிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோவிலின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோவிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது.
கல்வெடுக்களில் இறைவன் பெயர், திருத்தாடகையீச்சரத்து மஹாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது. இறைவியின் கோவிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி, இக்கோவில் மஹா மண்டபத்து வாசலில் தென்பாலுள்ள கல்வெட்டால் புலனாகிறது.
வழிபட்டோர்கள்: பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சந்திரன், சூரியன், ஆதிசேடன், நாககன்னிகை, தர்மசேனன், எக்ஞகுப்தன், தாடகை குங்குலியக்கலய நாயனார், சங்குகன்னன், நாகுன்னன் முதலியோர் பலரும் வழிபட்டுப் பேறு பெற்றார்கள்.

சுற்றுக் கோவில்கள்: ஆலயத்திற்குத் தென் மேற்கு மூலையில் ஊருடையப்பர் கோவில் இருக்கிறது. மேலும் ஐயனார், மாரியம்மன் முதலிய தெய்வங்களுக்கும் சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன. ஊருடையப்பர் ஆலயம் பிரமதேவன் வழிபட்டது. இது பிரமனால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு சாப விமோசனத்தை விரும்பிய ஐராவதம் வழிபட்டு வந்தது. அதனைக் கண்டு கலக்கமுற்றான் பிரமன், திருமாலைக் குறித்துத் தவம் இயற்றி அவன் அருளால் சிங்கமுகத்துடன் இம்மாடக கோவிலை அமைத்து வழிபட்டு வேண்டியன் பெற்றான். இந்த ஐதிகத்தில் இதன் மேற்கில் விஷ்ணு ஆலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

திருஞானசம்பந்தர் பதிகம் ‘கண்பொலி நெற்றியினான்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தாடகையீச்சரத்தின் சிறப்பு பேசப்படுகிறது:
கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.
பிரார்த்தனை: சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Thiruppanandal Arunajadeswarar Temple Festivals
திருவிழா: சித்திரை மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, ஆடிப்பூரம், நவராத்திரி முதலிய விழாக்களும் நடத்தப் பெறுகின்றன.
Thiruppanandal Arunajadeswarar Temple Timings
திருப்பனந்தாள் அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை திறந்திருக்கும்.
Thiruppanandal Temple Pooja Timings
பூஜை கால அட்டவணை

பூஜை
நேரம்

திருவனந்தல் காலை மணி
காலை 05.30 மணிக்கு

கால சந்தி
காலை 09.30 மணிக்கு

உச்சிக்காலம்
மதியம் 12.00 மணிக்கு

சாயரட்சை
மாலை 05.30 மணிக்கு

இரண்டாங்காலம்
இரவு 07.30 மணிக்கு

அர்த்த ஜாமம்
இரவு 09.00 மணிக்கு

Thiruppanandal Temple Contact Number: +91-435256422, +91-4352456047, 9443116322, 9965852734
Thiruppanandal Arunajadeswarar Temple Address
அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம் – 612 504

No comments

Leave a Reply