திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் – Thiruvallam Vilvanatheswarar


Sri Valambigai Sametha Sri Vilvanatheswara Swamy Temple Thiruvalam

திருத்தலம்
அருள்மிகு ஸ்ரீ வல்லாம்பிகை உடனுறை ஸ்ரீ வில்வநாதேஸ்வர சுவாமி கோவில், திருவலம்

மூலவர்
வில்வநாதேஸ்வரர், வல்லநாதர்

இறைவியார்
தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை, தீக்காலி அம்பாள் (ஜடாகலாபாம்பாள்)

ஆகமம்
சிவாகமம்

தலத்தின் புராண பெயர்
திருவல்லம், வில்வவனம் வில்வாரண்யம், தீக்காலி வல்லம்

தலத்தின் வேறு பெயர்கள்
திருவலம்

பாடியவர்கள்
திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், அருணகிரி நாதர்

தீர்த்தம்
கௌரி தீர்த்தம், நீவா நதி

வழிபட்டோர்
கௌரி, மஹா விஷ்ணு, சனக முனிவர்  சம்பந்தர், சேக்கிழார், அருணகிரி நாதர் முதலியோர்

ஸ்தல விருக்ஷம்
வில்வம்

பழமை
1000 –  வருடங்களுக்கு முன்

அருள்மிகு திருவல்லாம்பிகை சமேத திருவல்லநாதர் திருக்கோவில், திருவல்லம்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் திரு வல்லம் (திருவலம்) தொண்டை நாட்டில் உள்ள திருத்தலங்களில் பத்தாவது திருத்தலம்.
ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் ‘வில்வவனம்’ – ‘வில்வாரண்யம்’ எனப்படுகிறது. அக்காட்டில் ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் நாடொறும் பசு ஒன்று வந்து அச் சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்று சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் ‘தீக்காலி அம்பாள்’ (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

திருவல்லம் கோவில் அமைப்பு
நிவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம், அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு “நீ, வா” என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. “நீ, வா” நதி நாளடைவில் நிவா நதியாயிற்று என்கின்றனர். இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலதுபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது.

உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது.
ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோவிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.
வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது. முன்னுள்ள நந்தியைப் போலவே பெரியதாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையார் மீது மூலவர் வில்வ நாதேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் “பிராமி” உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்நிதிக்குள் நுழைய தெற்கு நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன.
பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது.
மூலவர் வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ முத்திரையுடன் விளங்குகின்றது.

சனகரின் ஜீவ சமாதி
இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.
இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தலம்
தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.அதேபோல் முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை ஈசனிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து ஈசனையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் திருவல்லம் சுற்றி (வலம்) வந்ததை உணர்த்துவதால், இத் திருத்தலம் திரு வலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருவல்லம் என்றாகியுள்ளது.
இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூரு மீது அமர்ந்திருப்பது காண்பதற்கரிய அரிய காட்சியாகும்.
முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் வினாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர் பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது. கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது.

Thiruvallam Vilvanatheswarar Temple History in Tamil
தல வரலாறு: இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. அது தற்போது ‘காஞ்சனகிரி’ என்று வழங்குகின்றது. இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் தீர்த்தம் இக்கோவிலுக்கு மிகப்பழங்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு கொண்டு வருவதைக் ‘கஞ்சன்’ தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, நந்தியெம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அடித்து அழித்தார்.
அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின், லலாடம் (நெற்றி) வீழ்ந்த இடம் தற்போது லாலாபேட்டை என்றும், சிரசு வீழ்ந்த இடம் சீகராஜபுரம் என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் வடகால் என்றும், தென்கால் வீழ்ந்த இடம் தென்கால் என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் மணியம்பட்டு என்றும், மார்பு வீழ்ந்த இடம் மருதநல்லுர், குடல் வீழ்ந்த இடம் குகையநல்லூர் மார்பு, நரம்புகள் வீழ்ந்த இடம் நரசிங்கபுரம் என்றும் வழங்கப்படுகிறது. இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு 3 கி. மீ. தொலைவில் உள்ளன. சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல், காவலுக்காகக் கிழக்கு நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம். சிப்காட் தொழிற்பகுதி வழியாகச் சாலையில் செல்லும் போது இம்மலையைப் பார்க்கலாம். (லாலாப்பேட்டைக்குப் பக்கத்தில் இம்மலை உள்ளது. லாலாபேட்டைக்கு ஆற்காட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.)
தவப்பெருந்திரு சித்தர் சிவானந்த மவுனகுரு சுவாமிகள் பல காலம் தங்கியிருந்து, திருநீறும் வில்வமும் அளித்தே, வரும் அன்பர்களின் அரிய நோய்களைத் தீர்த்து, திருக்கோவில் பலவற்றிற்குத் திருப்பணி செய்த பெருமையினை உடைய தலம். சுவாமிகளின் சமாதிக் கோவில், திருக்கோவிலின் முன்புறம் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் பதிகத்திலும், பெரிய புராணத்திலும், “திருவல்லம்” திருப்புகழில்திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

வில்வ பிரசாதத்தின் மகிமை
சிவபெருமானின் பெயர் வில்வ நாதேஸ்வரர் என்பதால் இங்கு வில்வம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதை உட்கொண்டால் மந்த புத்தி நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஞானமும் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் ஈஸ்வரன் அம்பாள் இருவருக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
திருஞானசம்பந்தர் திருவல்லம் தலம் குறித்து இயற்றிய திருப்பதிகங்கள்
பெரிய புராணப் பாடல் எண். 1003
திருமாற்பேறு உடையவர்தம் திருவருள்பெற்று எழுந்துஅருளிக்கருமாலும் கருமாவாய்க் காண்புஅரிய கழல்தாங்கிவரும்ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி, தம்பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்பிணையல் அணிவித்தார்.
பொழிப்புரை: திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிச் சென்று, கரிய நிறம் கொண்ட திருமால் பன்றி வடிவு எடுத்தும் காண இயலாத திரு அடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய விடையை உடைய இறைவரின், திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சார்த்தியருளினார்.
1.113 திருவல்லம்
பண் – வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எரித்தவன் முப்புரம் எரியின்மூழ்க,தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்,விரித்தவன் வேதங்கள், வேறுவேறுதெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 2
தாய்அவன் உலகுக்கு, தன்ஒப்புஇலாத்தூயவன், தூமதி சூடி, எல்லாம்ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும்சேயவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 3
பார்த்தவன் காமனைப் பண்புஅழிய,போர்த்தவன் போதகத் தின்உரிவை,ஆர்த்தவன் நான்முகன் தலையைஅன்றுசேர்த்தவந் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 4
கொய்தஅம் மலர்அடி கூடுவார்தம்மை,தவழ் திருமகள் வணங்கவைத்துப்பெய்தவன் பெருமழை உலகம்உய்யச்செய்தவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 5
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம்நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தேசேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 6
பதைத்துஎழு காலனைப் பாதம்ஒன்றால்உதைத்து,எழு மாமுனிக்கு உண்மைநின்று,விதிர்த்துஎழு தக்கன்தன் வேள்விஅன்றுசிதைத்தவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 7
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பாடல் எண் : 8
இகழ்ந்துஅரு வரையினை எடுக்கல்உற்றுஆங்குஅகழ்ந்தவல் அரக்கனை யடர்த்தபாதம்நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தேதிகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 9
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்யஅரியவன் அருமறை அங்கமானான்கரியவன் நான்முகன் காணஒண்ணாத்தெரியவன் வளநகர் திருவல்லமே.
பொழிப்புரை: எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.
பாடல் எண் : 10
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்குன்றிய அறவுரை கூறாவண்ணம்வென்றவன் புலன்ஐந்தும் விளங்கஎங்கும்சென்றவன் உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை: கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல் எண் : 11
கற்றவர் திருவல்லம் கண்டுசென்றுநல்தமிழ் ஞானசம் பந்தன்சொன்னகுற்றம்இல் செந்தமிழ் கூறவல்லார்பற்றுவர் ஈசன்பொன் பாதங்களே.
பொழிப்புரை: கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
நம்பியாரூரர் பெருமான் திருவல்லத்திற்கு எழுந்தருளியதாகப் பெரிய புராணத்தின் வாயிலாக அறிகின்றோம். திருப்பதிகம் கிடைக்கப் பெறாதது நமது தவக்குறைவே.

பெரியபுராணம் – ஏயர்கோன் கலிக்காம நாயனார்
பெரிய புராணப் பாடல் எண். 195
மன்னு திருமாற்பேறு அணைந்து வணங்கிப் பரவி, திருவல்லம்தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய், சாரும் மேல்பால் சடைக்கற்றைப்பின்னல் முடியார் இடம்பலவும் பேணி வணங்கி, பெருந்தொண்டர்சென்னி முகில்தோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
பொழிப்புரை: அதன்பின், நிலைபெற்ற திருமாற்பேறு என்னும் திருப்பதியை அடைந்து வணங்கிப் போற்றி, திருவல்லம் அடைந்து வணங்கிப் போய், மேற்குப் புறமாக உள்ள கற்றையாய சடைமுடியையுடைய பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் விருப்புடன் வணங்கிச் சென்ற பெரிய தொண்டரான நம்பிகள், முடியின் மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார்.
கல்வெட்டு சான்று
திருவல்லம் கோவிலின் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக அங்கு 30-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ‘தீக்காலி வல்லம்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவ்வூர்க் கோவில் வழிபாட்டிற்குப் பல்லவ மன்னர்கள், கங்க மன்னன் பிருதிவீபதி, பாண அரசர்கள் ஆகியோரின் காலம் முதல் சோழ மன்னர்களான முதலாம் இராஜராஜர், முதலாம் இராஜேந்திரர், முதலாம் குலோத்துங்கர், மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர், பாண்டிய மன்னர் வீரபாண்டியன் மற்றும் விஜயகண்ட கோபாலன் முதலான மன்னர்களின் காலம் வரை பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டுள்ளமையை கல்வெட்டுக்களின் வழி அறியமுடிகிறது (ARE 300, 301, 302, 303 304 of 1897).
திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவிலுக்கு எப்படி செல்வது?
இந்த சிவஸ்தலம் சென்னையில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ளது.சென்னை – காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.
Thiruvallam Temple Festival
திருவிழா: கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேசுவரர், தைப் பொங்கல் கழித்த 10ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது. இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார்.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். இம்மலையின் சிறப்பு அறிந்து மக்கள் தற்போது செல்லத் தொடங்கியுள்ளனர்.

Thiruvalam Temple Timings
ஆலய தரிசன நேரம்: திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை & மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
Thiruvallam Vilvanatheswarar Temple Contact Number: சிவாச்சாரியார் திரு. உமாபதி – 9894922166, 0416 2236088, திரு. சிவன் – 9245446956
Thiruvallam Vilvanatheswarar Temple Address
அருள்மிகு ஸ்ரீ வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்,திருவலம் அஞ்சல், வழி இராணிப்பேட்டை, காட்பாடி வட்டம், வேலூர் மாவட்டம் – 632 515

No comments

Leave a Reply