பாண்டூர் ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் [20.8.2023]


Aadhi Vaithiyanatha Samy Temple, Pandur
பாண்டூர் திருப்பணி குழு
தெற்கு தெரு, பாண்டூர் கிராமம், (வழியாக) நிடூர்,மயிலாடுதுறை மாவட்டம் – 609203
ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் என்பது தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் என்கின்ற கிராமத்தில் குடி கொண்டிருக்கும் சிவஸ்தலமாகும். மூலவர் பெயர் ஆதி வைத்தியநாதர்; அம்பாள் பெயர் பாலாம்பிகை.
சிவனை நாம் ஏன் பிணிநீக்குபவன் என்ற பொருளில் வைத்யநாதன் என்கிறோம். காரணம் அவன் பிறவி பிணியை நீக்குபவர். அதனால் தான் நாம் அவரை வழிபடும் போது “த்ரயம்பகம் யஜாமஹேஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷயீ மா அம்ருதாத்” என்று அவனை வாயாரப் புகழ்ந்து வழிபடுகிறோம்.
ஸ்ரீ ருத்ரம் பத்தாவது அனுவாகத்தில் வரும் ஒரு ஸ்லோகம் பின்வருமாறு கூறுகிறது.
யா தே ருத்ர சிவா தநூ: சிவா விச்வாஹபேஷஜி ।சிவா ருத்ரஸ்ய பேஷஜி தயா நோ ம்ருட ஜவீ ஸே॥
இதுன் பொருள் என்ன?
“ஓ ருத்ர பகவானே! உன்னுடைய வடிவத்தால், என்னுடைய அமைதியும், மங்களமும், எல்லா நாட்களும் மனித நோய்களுக்குப் பரிகாரமாக இருக்கிறது.. அதிக மங்களகரமானது என்றால், ஞானம் மற்றும் ஒளியின் அருளால், அது அறியாமையையும், சம்சாரத்தின் முழுத் துன்பத்தையும் முற்றிலுமாக அகற்றும். உமது கருணை வடிவமே, எங்களை நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வாயாக.” என்பதாகும்.
வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாத சுவாமி கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று இந்தக் கோவில். இது தற்பொழுது சீர்காழி பக்கத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட தலம் என்று கருதப்படுகிறது, எனவே தான் இவருக்கு ஆதி வைத்தியநாதன் என்று பெயர் ஏற்பட்டது.
இது திருவாசகத்தில் கீர்த்தி திருவகவல் என்கின்ற பகுதியில் இந்த ஸ்தலத்தினை பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பார்இரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர் தென்பால் திகழ்தரு தீவில் கோஆர் கோலம் கொண்ட கொள்கையும் … என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

புராண கதைகள்
மகாபாரத யுத்தம் முடிந்தவுடன் துரியோதனாதிகள் 100 பேரும் கொல்லப்பட்டதால் மிகவும் மனம் வருந்திய காந்தாரி பாண்டவர்களுக்கு நீங்கள் பாண்டூ என்கின்ற ரோகத்தால் அவதிப்படுவீர்கள் என்று சாபம் இட்டாள். இதனால் மனம் வருந்திய பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் அதற்கு பரிகாரம் கேட்க… கிருஷ்ணர் நீங்கள் காவேரியின் கரையில் வைத்தியநாதர் என்கின்ற சிவ லிங்கத்தை வழிபட்டால் உங்களுக்கு அந்த ரோகத்தில் இருந்து விடுபடுவீர்கள் என்றார்.
பாண்டவர்களும் அவ்வாறே தெற்கு நோக்கி பயணம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கு உடலில் ரோகம் ஏற்பட்டு அவர்களால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. உடனே அவர்கள் கிருஷ்ணனை வழிபட்டனர். கிருஷ்ணன் அப்பொழுது மகாவிஷ்ணுவாக அவர்களுக்கு காட்சியளித்து இந்த இடத்தில் தான் ஒரு சிவலிங்கம் இருக்கிறது அதை வழிபடுங்கள் என்று கூறினார்.
அதன்படியே அங்கு தேடிய பொழுது ஒரு சிவலிங்கம் காட்சி தந்தது. அதற்கு 45 நாட்கள் பூஜை செய்து வழிபட்டனர். ரோகமும் நீங்கினர். இதனால்தான் இந்த ஊருக்கு பாண்டூர் என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த சிவலிங்கத்திற்கு வைத்தியநாதர் என்கின்ற பெயரும் விளங்கியது. மகாவிஷ்ணுவாக தோன்றிய கிருஷ்ணனுக்கு அங்கு பாண்டவ சஹாய ஸ்வாமி என்ற பெயரில் ஒரு கோவிலும் பாண்டூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் சிவன்கோவில் கிழக்கு பார்த்த கோவிலாக அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு வாயில் ஒரு வளைவுடன் இருக்கும். அந்த நுழைவு வாயிலில் சிவன் மற்றும் பார்வதி நந்தி மற்றும் பூதகணங்கள் போன்றவர்களின் சிலைகள் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் பலிபடீ ம் நந்தி இவைகள் தென்படும். அதைத் தாண்டிச் சென்றவுடன் மகா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை காணப்படும். இந்த கருவறையை சுற்றி பால விநாயகர், பால் முருகன், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரகார கணபதி மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இருக்கிறது.
இதைத் தவிர சனீஸ்வரனுக்கு தனியான சன்னதி கிழக்கு நோக்கி இருக்கிறது. சூரியன் ச்வேத பைரவர் சன்னதிகள் மேற்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி இருக்கிறார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி பாலாம்பிகை கருவறை அமைந்துள்ளது.
கடன் நிவர்த்தி பூஜை
இங்குஹரிச்சந்திரன் இந்த சிவனை வணங்கி தனது கடனை தீர்த்ததாக புராணங்கள் கூறுகிறது. ஆகவே இங்கு கடன் நிவர்த்தி பூஜை ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும்.
நளன் வணங்கிய ஸ்தலம்
சனியின் சாபத்தால் கார்கோடகனால் தீண்டப்பட்ட நளன் அவருடைய ரூபம் மாறுவதற்காக கோடங்குடியில் உள்ள கார்க்கோடக நாதனை வழிபடுவதற்கு முன்பு இந்த ஆதி வைத்தியநாதரை வழிபட்டு சென்றதாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகத்தான் இங்கு நவக்ரக சன்னதி கிடையாது சனீஸ்வர சன்னதி மட்டும்தான் அமைந்திருக்கும்.

திருவிழாக்கள்
பங்குனி பிரம்மோத்சவம், நவராத்திரி, சிவராத்திரி, மாதாந்திர பிரதோஷம், சனிப்பெயர்ச்சி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியவைகள் இங்கு கொண்டாடப்படுகிறது.

பஞ்ச வைத்தீஸ்வரர்
1. வைத்தீஸ்வரன் கோவில்2. பாண்டூர்3. மண்ணிப்பள்ளம்4. ராதா நல்லூர்5. ஐவநல்லூர்.
இந்த ஐந்து ஸ்தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் தீராத நோய்களும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.

கும்பாபிஷேக தகவல்
சோழ வடநாட்டில் காவிரியின் வடபாகத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச வைத்தியநாத தலங்களில் ஒன்றான பாண்டூர் என்கின்ற ஆதி வைத்தியநாத சுவாமியின் திருத்தலத்தில் நாளது ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருஷம் ஆவணி மாதம் மூன்றாம் தேதி 20.8.2023 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதிஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை மணி 8:30 மேல் 9:30-க்குள் கன்னியா லக்னத்தில் ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி மற்றும் பரிவாரங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஆகம சாஸ்திர நியமப்படி பகவத் கிருபையை முன்னிட்டு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாம் பரம்பராகத மூலாம்நாய ஸர்வக்ஞ படீ ம் ஸ்ரீ காஞ்சி காமகோடி படாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடனும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படியும் கிராமவாசிகளின் ஒத்துழைப்புடனும் மேற்படி ஆலயங்களில் கும்பாபிஷேகம் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. அது சமயம் பக்த கோடிகள், மெய் அன்பர்கள் கிராமவாசிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இயன்ற நிதி உதவி அளித்து பகவானின் பரிபூரண அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாக ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் அனைவரும் தாராளமாக பங்களித்து விழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பாண்டூர், ஆதி வைத்தியநாத சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேரலை:

மேலும் விவரங்களுக்கு:
திரு.ராதாகிருஷ்ணன் தலைவர் பாண்டூர் சிவன் கோவில் +91 9444533738திரு.ராமநாதன் செயலாளர், பாண்டூர் சிவன் கோவில் +91 9282233044

பொதுமக்கள் மற்றும் வாசகர்களின் தகவலுக்காக உங்கள் எஸ்டீமீட் செய்தித்தாளில் தயவுசெய்து செய்தியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜி ராதாகிருஷ்ணன்குழு ஜனாதிபதி.
Aadhi Vaithiyanatha Samy Temple Address
4JM5+HR9, Pandur, Tamil Nadu 609203

No comments

Leave a Reply