உள்ளடக்கம்
Sri Kanthimathi Samedha Panchavarneswarar Temple, Uraiyur
அருள்மிகு காந்திமதி உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், உறையூர்
சிவஸ்தலம்
திரு மூக்கீச்சரம் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்
மூலவர்
பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்
அம்மன்
காந்திமதியம்மை, குங்குமவல்லி
தீர்த்தம்
சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்
திரு முக்கீச்சரம்
தல விருட்சம்
வில்வம்
ஊர்
உறையூர்
மாவட்டம்
திருச்சி
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🛕 காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் ஊரில் 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட ஒரு மிகப் பழமையான சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
Panchavarnaswamy Temple History in Tamil
பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் வரலாறு
🛕 உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு:
🛕 சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, “அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது”.
🛕 கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காணலாம்.
பஞ்சவர்ணசுவாமி கோவில் அமைப்பு
🛕 கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கல் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். “காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும்” காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.
🛕 உதங்க முனிவரின் சந்நிதி இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். மூலமூர்த்தி மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு உள்ளங்கையளவே உள்ளது. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்” உள்ளது.
🛕 இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள காந்திமதியம்மை நாகலோகத்தில நாககன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழ மன்னனால் கொண்டு வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம். இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்ணு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
🛕 அர்த்த மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் சுமார் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. கருவறையின் தென்புற வெளிச் சுவற்றில் தட்சிணாமூர்த்தியும், வடபுற வெளிச் சுவற்றில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர். பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன் திகழ்கின்றது. சிறியது சோழர் காலத்தியது. பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக் கோட்டை நகரத்தார் தம் திருப்பணியில் செய்து வைத்தார்கள். 4 அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரரின் உருவச் சிலையும் காணவேண்டிய ஒன்றாகும்.
🛕 திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன. உறையூர்க் கோவிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பதுபோல, கருவறையின் வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன. சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன.
🛕 ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி வாய்ந்தவள். இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்று.
🛕 பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
🛕 மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.
🛕 புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். “தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான்”. 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனான்.
பிரார்த்தனை: கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
நேர்த்திக்கடன்: சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.
Uraiyur Panchavarneswarar Temple Festivals
திருவிழா: சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
Panchavarnaswamy Temple Timings
திறக்கும் நேரம்: இவ்வாலயம் தினந்தோறும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலுக்கு எப்படிப் போவது?
🛕 திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர். தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
🛕 திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் `சாந்தம் வெண்ணீறென’ (தி.2 ப.120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.
திருமூக்கீச்சரம் பண் – செவ்வழி
சாந்தம்வெண்ணீறு எனப்பூசி வெள்ளம்சடை வைத்தவர்,காந்தள்ஆரும் விரல்ஏழை யொடுஆடிய காரணம்ஆய்ந்துகொண்டாங்கு அறியந் நிறைந்தார் அவர்ஆர்கொலோ,வேந்தன்மூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றதுஓர் மெய்ம்மையே. 1
வெண்தலைஓர் கலனாப் பலிதேர்ந்து, விரிசடைக்கொண்டல்ஆரும் புனல்சேர்த்து உமையாளொடும் கூட்டமாவிண்டவர்தம் மதில்எய்தபின் வேனில் வேள்வெந்துஎழக்கண்டவர் மூக்கீச்சரத்துஎம் அடிகள் செய் கன்மமே. 2
மருவலார்தம் மதில்எய்ததுவும், மால் மதலையைஉருவுஇல் ஆர எரியூட்டியதும், உலகு உண்டதால்செருவில்ஆரும் புலிசெங்கயல்ஆனை யினான்செய்தபொருஇல் மூக்கீச்சரத்துஎம் அடிகள் செயும்பூசலே. 3
அன்னம் அன்ன நடைச்சாய லாளோடு அழகுஎய்தவேமின்னைஅன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்,தென்னன்கோழி எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்மன்னன்மூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்மாயமே. 4
விடம்முன்ஆர் அழல்வாயது ஓர் பாம்புஅரை வீக்கியேநடம்முன்ஆரவ் அழல்ஆடுவர் பேயொடு நள்இருள்,வடமன்நீடு புகழ்ப்பூழி யன்,தென்ன வன்,கோழிமன்அடல்மன்மூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்அச்சமே. 5
வெந்தநீறு மெய்யில் பூசுவர், ஆடுவர் வீங்குஇருள்,வந்துஎன்ஆரவ் வளைகொள்வதும் இங்குஒரு மாயமாம்,அந்தண்மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கியஎந்தைமூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்ஏதமே. 6
அரையில்ஆரும் கலைஇல்ல வன்,ஆணொடு பெண்ணுமாய்உரையில்ஆரவ் அழல்ஆடு வர்,ஒன்றுஅலர் காண்மினோ,விரவலார்தம் மதில்மூன்று உடன்வெவ்அழல் ஆக்கினான்அரையன்மூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்அச்சமே. 7
ஈர்க்குநீர்ச்செம் சடைக்குஏற் றதும், கூற்றை உதைத்ததும்,கூர்க்கும்நல் மூவிலைவேல்வலன் ஏந்திய கொள்கையும்,ஆர்க்கும்வாயான் அரக்கன் உரத்தை நெரித்த, அடல்மூர்க்கன்மூக்கீச் சரத்துஅடிகள் செய்யாநின்ற மொய்ம்புஅதே. 8
நீர்உளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்சீர்உள்ஆருங் கழல்தேட மெய்த்தீத் திரள்ஆயினான்,சீரினால்அங்கு ஒளிர்தென்ன வன்,செம்பி யன்,வில்லவன்சேருமூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்செம்மையே. 9
வெண்புலால்மார்பு இடுதுகிலினர், வெற்றுஅரை உழல்பவர்,உண்பினாலே உரைப்பார் மொழி ஊனமது ஆக்கினான்ஒண்புலால்வேல் மிகவல்லவன் ஓங்குஎழில் கிள்ளிசேர்பண்பின்மூக்கீச் சரத்துஅடிகள் செய்கின்றதுஓர் பச்சையே. 10
மல்லைஆர்மும் முடிமன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தனசொல்லவல்லார் அவர்வானுலகு ஆளவும் வல்லரே. 11
திருச்சிற்றம்பலம்
Image Source: Dinamalar
Uraiyur Panchavarneswarar Temple Address
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோவில்,உறையூர் அஞ்சல்,திருச்சி மாவட்டம். PIN – 620003
Panchavarnaswamy Temple Contact Number: +91-4312768546, +91-9443919091, +91-9791806457
Leave a Reply