Velliangiri Temple History in Tamil


Velliangiri Andavar Temple History in Tamil

உள்ளடக்கம்

🛕 கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளியங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
🛕 கோவிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோவிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.
Velliangiri Hills History in Tamil
வெள்ளியங்கிரி மலை வரலாறு: நாட்டின் தென்கோடி முனையிலே சிவனையே மணப்பேன் என விடாப்பிடியாய் நின்ற ஒரு பெண், தன்னை ஈசனுக்கே உரியவளாய் ஆக்கிக்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொண்ட பெண், ஈசன் இந்நாளுக்குள் தன்னை அடைய வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்ட பெண், “ஈசன் வராது போனால், நான் உயிர் துறப்பேன்” என சூளுரைத்திருந்தாள். இதனை அறிந்த சிவன் அவளைத் தேடி தென்னிந்தியா நோக்கி வர, இடையில் சதி செய்யப்பட்டு, சிலதூரத் தொலைவில் அவளை அடைய முடியாமல் போனார். அந்தப் பெண்ணும் நின்றபடியே உயிர் துறந்தாள். இன்றுகூட அவள் கன்னியாகுமரியாய் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதுவே, இந்தியாவின் தென்கோடியில் கன்னிகோவிலாய் உயர்ந்து நிற்கிறது.
🛕 தன்னால் குறித்த நேரத்தில் சென்றடைய இயலவில்லையே என மனஞ்சோர்ந்த சிவனுக்கு, தன் விசனத்தைக் கரைக்க ஓர் இடம் தேவைப்பட்டது. வெள்ளியங்கிரி மலை மீது ஏறியவர், அதன் உச்சியிலே வந்தமர்ந்தார். இங்கு அவர் ஆனந்தத்தில் அமரவில்லை, தியானத்தில் அமரவில்லை, ஒருவித கோபத்திலும் மனச்சோர்விலும் வந்தமர்ந்தார். இங்கு கணிசமான நேரத்தை அவர் செலவிட்டார். எங்கெல்லாம் சிவன் அமர்ந்தாரோ அவ்விடத்தையெல்லாம் மக்கள் கைலாயம் என அழைத்தனர். அதனாலேயே, வெள்ளியங்கிரியை மக்கள் தென் கைலாயம் என அழைக்கத்துவங்கினர்.

வெள்ளியங்கிரி ஆண்டவர்
🛕 கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோவில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வனப்பகுதி ஆகும். வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கோவிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன.
🛕 வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம். ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சுமவடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம் செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம்!
🛕 வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது. மலை ஏறும்போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன.
🛕 இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15-ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம்மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமியன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன், அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது.
🛕 மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலை ஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச்சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.
ஏழுமலை என்று எதனால் சொல்கிறார்கள்?
🛕 ஏழு மலைகளைக் கொண்டது வெள்ளியங்கிரி. இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி. இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. மலையேற்றம் செய்யும்போது, ஏழு ஏற்ற – இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஏழுமலை என்றார்கள்.
🛕 தென்னாடுடைய சிவனே போற்றி! என்று போற்றப்படும் சிவனுக்கு, தென்னாட்டில் உள்ள கயிலைதான், தென் கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை!
முதல் மலை
🛕 முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடி முதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலை ஏறும்போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை.
🛕 மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1 1/2 கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது.

இரண்டாவது மலை
🛕 இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.

மூன்றாவது மலை
🛕 மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு கைதட்டிச்சுனை என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.
🛕 மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு பாம்பாட்டிச்சுனை என்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலை தான். அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

நான்காவது மலை
🛕 ஒருவிதமான கோரைட் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, ஒட்டர் சமாதி என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். இம்மலையை திருநீர் மலை எனவும் கூறுவர்.

ஐந்தாவது மலை
🛕 ஐந்தாம் மலைக்கு பீமன் களியுருண்டை மலை என்று பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் “அர்ச்சுனன் தலைப் பாறை” போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதிவேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும்.
🛕 ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது மலை
🛕 ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை ஆண்டிசுனை. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு திருநீற்றுமலை என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.

ஏழாவது மலை
🛕 சுவாமி முடி மலை என்று பெயர் கொண்ட ஏழாவது மலைமேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது. இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது. இதைத் தோரண வாயில் என்று அழைக்கிறார்கள். இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.

🛕 இக்கோவிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது.
🛕 உமையவள் இறைவன் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திருநடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து “பலகாரமேடை” என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.
🛕 கரிகால சோழனிடம் சமய முதலிகள் “வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!” என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளியங்கிரி செல்லும் வழி
🛕 கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் 40 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து இருட்டுப்பள்ளம் (32 கி.மீ.) சென்று அங்கிருந்து வலதுபுறம் (8 கி.மீ.) சென்றால் கோவிலை அடையலாம். காந்திபுரத்திலிருந்து பூண்டிக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ்வசதி உள்ளது.
Velliangiri Temple Address
 
Sources: https://temple.dinamalar.com/New.php?id=1614 , https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/velliangiri-malai-yen-yerugirom 

No comments

Leave a Reply