Vijayasana Perumal Temple History in Tamil


உள்ளடக்கம்

Natham Vijayasana Perumal Temple History in Tamil

திருத்தலம்
திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில்

மூலவர்
விஜயாசனப் பெருமாள் (பரமபத நாதன்)

உற்சவர்
எம்மடர் கடிவான்

அம்மன்
வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கை

தீர்த்தம்
அகநாச தீர்த்தம் (தேவ புஷ்கரணி), அக்னி தீர்த்தம்

புராண பெயர்
திருவரகுணமங்கை

ஊர்
நத்தம்

மாவட்டம்
தூத்துக்குடி

விஜயாசனப் பெருமாள் கோவில், நத்தம்
🛕 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோவிலும் ஒன்றாகும். நவதிருப்பதியில் இது 2-வது திருப்பதி. வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் இந்தத் திருக்கோவில், நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும். வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம் காட்டுகிறார்கள்.
Thiruvaragunamangai Temple History in Tamil
திருவரகுணமங்கை கோவில் வரலாறு
🛕 நத்தம் அருள்மிகு விஜயாசன பெருமாள் கோவில் அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித் என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாஸனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சி தந்த தலம்.
🛕 வரகுணவல்லி, வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுணமங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்த தலம். தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அமர்ந்து அருள்புரிகிறார்.

முக்தி அளித்த தலம்
🛕 ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். “சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்” என்று கூறினார்.
🛕 வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
விஜயாசனப் பெருமாள் கோவில் அமைப்பு
🛕 ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன. இத்தல பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
🛕 இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். மனிதர்கள் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வேண்டி வழிபட்டால், பூலோகத்தில் வாழும் காலம் வரை சவுகரியமான வாழ்க்கையைப் பெறலாம். வைகுண்டத்திலும் பெருமாளின் கருணைக்கு பாத்திரமாகலாம். மேலும் ஒரு சிறப்பாக இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Natham Perumal Temple Festivals
திருவிழா: சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
விஜயாஸனர் கோவிலுக்கு எப்படி போவது?
🛕 அருள்மிகு விஜயாசன பெருமாள் கோவில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
Vijayasana Perumal Temple Timings
திறக்கும் நேரம்: திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில் காலை 09:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை திறந்திருக்கும்.
Natham Vijayasana Perumal Temple Puja Timings
🛕 தினமும் மூன்று கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், வைகானச ஆகமப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமை தோறும் சந்திரன் வழிபாடும், செவ்வாய்க்கிழமையில் நரசிம்மர் வழிபாடும், சனிக் கிழமை, பவுர்ணமி, பிரதோஷங்களில் பெருமாள் வழிபாடும் சிறப்புக்குரியதாக உள்ளது.

Vijayasana Perumal Temple Address
🛕 அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோவில் நத்தம் (வரகுணமங்கை) – 628 601 தூத்துக்குடி மாவட்டம்.
Vijayasana Perumal Temple Contact Number: +914630256476
 

No comments

Leave a Reply