12 ஆழ்வார்கள் – 12 Alwars [Names & Birth Story in Tamil]


பன்னிரு ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
12 Alwars Names List in Tamil
12 ஆழ்வார்கள் பெயர்கள்

வ.எண்
பன்னிரு ஆழ்வார்கள்

1
திருப்பாணாழ்வார்

2
ஆண்டாள்

3
பொய்கையாழ்வார்

4
தொண்டரடிப்பொடி ஆழ்வார்

5
திருமழிசை ஆழ்வார்

6
பூதத்தாழ்வார்

7
பேயாழ்வார்

8
நம்மாழ்வார்

9
மதுரகவி ஆழ்வார்

10
குலசேகர ஆழ்வார்

11
பெரியாழ்வார்

12
திருமங்கை ஆழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்றுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.
இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது. ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார்.
பொய்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் மொத்தம் 6 கோவில்களைப் பற்றி பிற ஆழ்வார்களுடன் இணைந்து மங்களாசனம் செய்துள்ளார். (மங்களாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்றுவது ஆகும்.) இவர் கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் ஆகிய வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார். உலக வாழ்க்கையில் இன்புறாமல் திருமாலிடத்தில் நீங்கா பக்தி கொண்டவர். திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார். அவை இரண்டாம் திருவந்தாதி எனப் போற்றப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
பேயாழ்வார்

பேயாழ்வார் ஆழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவர் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர். இவர் திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி தினமும் போற்றுவார். அப்போது அவர் கண்களில் ஆனந்த வெள்ளம் வழிந்தோடும். பாடல்கள் பாடும்போது ஆடிப் பாடி அழுது தொழுவார். இறைபக்தியினால் இவர் பித்தர் போலும் பேயர் போலும் திரிந்ததினால் பேயாழ்வார் என்றழைக்கப்பட்டார். திருக்கோவிலூர் மிருண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் இருந்த போது இவரே முதலில் இறைதரிசனம் கிடைக்கப் பெற்றார். இவர் தனியாக ஒரு கோவிலிலும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களிலும் மங்களாசனம் செய்துள்ளார்.

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.
ஆண்டாள்

ஆண்டாள் தமிழத்தில் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு ‘விப்ர நாராயணர்‘ என்பது இயற்பெயர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.
திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.
பிறப்பின் அற்புதம்: பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர்.
என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.
மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798 க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வாரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். இவர் பிறந்த ஊர் கொல்லி நகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை “கொல்லிநகர்” அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில் இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர்.
பெரியாழ்வார்

பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். ‘விஷ்ணு சித்தர்‘ என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.
திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ‘கலியன்’. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் “திருமங்கை” நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் “திருமங்கை மன்னன்” என அழைக்கப்பட்டார்.

No comments

Leave a Reply