63 Nayanmargal History in Tamil


63 Nayanmargal History in Tamil
63 நாயன்மார்களின் வரலாறு
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.
63 நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைப்போரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
63 Nayanmars Name List in Tamil

வ.எண்
பெயர்
குலம்
பூசை நாள்

1
அதிபத்தர்
பரதவர்
ஆவணி ஆயில்யம்

2
அப்பூதியடிகள்
அந்தணர்
தை சதயம்

3
அமர்நீதி நாயனார்
வணிகர்
ஆனி பூரம்

4
அரிவட்டாயர்
வேளாளர்
தை திருவாதிரை

5
ஆனாய நாயனார்
இடையர்
கார்த்திகை ஹஸ்தம்

6
இசைஞானியார்
ஆதி சைவர்
சித்திரை சித்திரை

7
இடங்கழி நாயனார்
வேளிர்[4]
ஐப்பசி கார்த்திகை

8
இயற்பகை நாயனார்
வணிகர்
மார்கழி உத்திரம்

9
இளையான்குடிமாறார்
வேளாளர்
ஆவணி மகம்

10
உருத்திர பசுபதி நாயனார்
அந்தணர்
புரட்டாசி அசுவினி

11
எறிபத்த நாயனார்
மரபறியார்
மாசி ஹஸ்தம்

12
ஏயர்கோன் கலிகாமர்
வேளாளர்
ஆனி ரேவதி

13
ஏனாதி நாதர்
ஈழக்குலச்சான்றார்
புரட்டாசி உத்திராடம்

14
ஐயடிகள் காடவர்கோன்
காடவர்,பல்லவர்
ஐப்பசி மூலம்

15
கணநாதர்
அந்தணர்
பங்குனி திருவாதிரை

16
கணம்புல்லர்
செங்குந்தர்
கார்த்திகை கார்த்திகை

17
கண்ணப்பர்
வேட்டுவர்
தை மிருகசீருஷம்

18
கலிய நாயனார்
செக்கார்
ஆடி கேட்டை

19
கழறிற்றறிவார்
சேரர்-அரசன்
ஆடி சுவாதி

20
கழற்சிங்கர்
பல்லவர்-அரசன்
வைகாசி பரணி

21
காரி நாயனார்
மரபறியார்
மாசி பூராடம்

22
காரைக்கால் அம்மையார்
வணிகர்
பங்குனி சுவாதி

23
குங்கிலியகலையனார்
அந்தணர்
ஆவணி மூலம்

24
குலச்சிறையார்
மரபறியார்
ஆவணி அனுஷம்

25
கூற்றுவர்
களப்பாளர்
ஆடி திருவாதிரை

26
கலிக்கம்ப நாயனார்
வணிகர்
தை ரேவதி

27
கோச்செங்கட் சோழன்
சோழர்-அரசன்
மாசி சதயம்

28
கோட்புலி நாயனார்
வேளாளர்
ஆடி கேட்டை

29
சடைய நாயனார்
ஆதி சைவர்
மார்கஇசைழி திருவாதிரை

30
சண்டேசுவர நாயனார்
அந்தணர்
தை உத்திரம்

31
சக்தி நாயனார்
வேளாளர்
ஐப்பசி பூரம்

32
சாக்கியர்
வேளாளர்
மார்கழி பூராடம்

33
சிறப்புலி நாயனார்
அந்தணர்
கார்த்திகை பூராடம்

34
சிறுதொண்டர்
மாமாத்திரர்
சித்திரை பரணி

35
சுந்தரமூர்த்தி நாயனார்
ஆதி சைவர்
ஆடிச் சுவாதி

36
செருத்துணை நாயனார்
வேளாளர்
ஆவணி பூசம்

37
சோமசிமாறர்
அந்தணர்
வைகாசி ஆயிலியம்

38
தண்டியடிகள்
செங்குந்தர்
பங்குனி சதயம்

39
திருக்குறிப்புத் தொண்டர்
வண்ணார்
சித்திரை சுவாதி

40
திருஞானசம்பந்தமூர்த்தி
அந்தணர்
வைகாசி மூலம்

41
திருநாவுக்கரசர்
வேளாளர்
சித்திரை சதயம்

42
திருநாளை போவார்
புலையர்
புரட்டாசி ரோகிணி

43
திருநீலகண்டர்
குயவர்
தை விசாகம்

44
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
பாணர்
வைகாசி மூலம்

45
திருநீலநக்க நாயனார்
அந்தணர்
வைகாசி மூலம்

46
திருமூலர்
இடையர்
ஐப்பசி அசுவினி

47
நமிநந்தியடிகள்
அந்தணர்
வைகாசி பூசம்

48
நரசிங்க முனையர்
முனையரையர்
புரட்டாசி சதயம்

49
நின்றசீர் நெடுமாறன்
பாண்டியர் அரசர்
ஐப்பசி பரணி

50
நேச நாயனார்
சாலியர்
பங்குனி ரோகிணி

51
புகழ்சோழன்
சோழர்- அரசர்
ஆடி கார்த்திகை

52
புகழ்த்துணை நாயனார்
ஆதி சைவர்
ஆனி ஆயிலியம்

53
பூசலார்
அந்தணர்
ஐப்பசி அனுஷம்

54
பெருமிழலைக் குறும்பர்
குறும்பர்
ஆடி சித்திரை

55
மங்கையர்க்கரசியார்
பாண்டியர்-அரசர்
சித்திரை ரோகிணி

56
மானக்கஞ்சாற நாயனார்
வேளாளர்
மார்கழி சுவாதி

57
முருக நாயனார்
அந்தணர்
வைகாசி மூலம்

58
முனையடுவார் நாயனார்
வேளாளர்
பங்குனி பூசம்

59
மூர்க்க நாயனார்
வேளாளர்
கார்த்திகை மூலம்

60
மூர்த்தி நாயனார்
வணிகர்
ஆடி கார்த்திகை

61
மெய்ப்பொருள் நாயனார்
குறுநில மன்னர்
கார்த்திகை உத்திரம்

62
வாயிலார் நாயனார்
வேளாளர்
மார்கழி ரேவதி

63
விறன்மிண்ட நாயனார்
வேளாளர்
சித்திரை திருவாதிரை

1. அதிபத்த நாயனார்

நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் அதிபத்தர். அவர் அக்குலத்தின் தலைவராக இருந்தார். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை நடமாடும் எம் பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். தொடர்ந்தாற்போல் பல நாள் போராடியும் ஒரு மீன் கூட வலையில் சிக்கவில்லை. அனைவரும் சோர்ந்து போனர்கள். அதிபத்தர் இறைவனுக்கு அமுது படைக்க மீன் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.
ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து என்னை ஆளும் சிவனுடைய பொன்னடிகள் போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட பெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.
நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபக்திநாயனார் கோவில் என வழங்கப்படுகிறது.
2. அப்பூதியடிகள் நாயனார்
திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர். பொய், களவு, காமம், கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர்.
ஒருநாள் திங்களூர் வந்த அப்பரடிகள் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அப்பூதியடிகள் என்று தெரியவந்ததும் அவரைச் சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றார். அப்பூதியடிகள் யார் என்றார். எதிரில் வந்த அப்பூதியடிகள் அடிகளார் என நினைத்து வீழ்ந்து வணங்கி எழுந்தருளிய காரணம் கேட்டார். திருப்பழநாதனை வழிபட்டு வரும் வழியில் உம் தண்ணீர் பந்தல் பார்த்தோம். தாங்கள் புரியும் அறங்கள் கேட்டு உம்மைக் காண வந்தோம் என்றார். உங்கள் பெயரை எழுதாமல் வேறு ஒரு பெயர் எழுதக் காரணம் யாது என்றார்.
தவச்செல்வர் என வணங்கியவர் காதில் வேறு ஒருவர் என்பது பேரிடியாகக் கேட்டது. மிகுந்த வருத்தத்துடன் சமணர்களும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினை தம் தொண்டினாலே வென்ற பெயர் வேறு ஒரு பெயரா. அதுவே என் தாரக மந்திரம். அது எனக்கு முக்தி தரும் ஐந்தெழுத்து. எப்படி புரியாமல் சொன்னீர்கள் என்றார். கடலிலே மிதந்த பெருமான், அவரை தெரியாதா? நீர் என்ன சமணர் கூட்டத்தினரா, நீர் யார் என்றார்?.
அப்பூதியடிகளே, என்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணது அதிகைப் பெருமான் கொடுஞ்சூலையினால் ஆட் கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியோன் நான் என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாது. யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் எனக் கருதி தவம் புரிந்தாரோ, மந்திரம் ஜெபித்தாரோ அப்பெருமான் முன்னிற்க செய்வது தெறியாது திகைத்தார். ஆடினார். பாடினார், எல்லோரையும் பெருமான் காலடியில் வீழச் செய்து வழிபட்டார். வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாத பூசை செய்தார். வீட்டில் அமுது உண்ண வேண்டினார்.
நாவுக்கரசர் அமுது செய்ய இசைந்தார், நல்ல சுவையான தூய அமுது தயாரானது. தன் மூத்த பிள்ளை திருநாவுக்கரசை வாழை இலை கொண்டுவரப் பணித்தார். நல்ல குருத்திலையைத் தேடி அறுக்கும்போது அங்கு குடியிருந்த நாகம் தீண்ட அடியவர் அமுது உண்பது தன்னால் காலதாமதம் ஆகக்கூடாது என்று ஓடிவந்து தாயினிடம் இலையைக் கொடுத்து காலடியில் வீழ்ந்தான். வீழ்ந்த மகனைப் பார்த்த தாயும் தந்தையும் நீலம்பாய்ந்த உடலைக் கண்டு உண்மையறிந்து, அதனால் அடியவர் அமுது செய்வது தடைபடக்கூடாது என்று மகனை ஒரு பாயில் சுற்றி கட்டி வைத்துவிட்டு நாவுக்கரசர் திருவடியில் வீழ்ந்து அமுது செய்ய அழைத்தனர்.
வணங்கியவருக்கு திருநீறு கொடுத்துவிட்டு மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனுக்கும் திருநீறு பூச வேண்டும் என்றார். தன் குருமுன் சென்று உண்மையை உரைத்தால் அவர் அமுது செய்வது தடைப்படும் என்று அப்பூதியடிகள், ‘இப்போது அவன் இங்கு உதவான்’ என்றார். இந்த பதிலை என் உள்ளம் ஏற்கவில்லை. அவன் எங்கே என்றார். இனி மறுக்க இயலாமல் உண்மையை உரைக்க, பாயில் இருக்கும் பாலகனை கொண்டுவரச் சொல்லி, நீலகண்டன் அருள் தரும் படியான பத்து பாடல்களைப் பாட பாலகன் உறங்கி எழுபவன் போல் எழுந்தான். அவனுக்கு திருநீறு வழங்கினார் அப்பரடிகள்.
அனைவரும் அமர்ந்து அமுது உண்டனர். பலநாள் அங்கு தங்கியிருந்து அருகிலிருந்த தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடினார்.
3. அமர்நீதி நாயனார்
கும்பகோணத்தின் ஒரு பகுதியாகிய தாராசூரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார். வணிகர் குலத்தில் அவதரித்தவர் வணிகம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்தார். அவர் சித்தத்தில் கொண்டிருந்த கொள்கைகள் இரண்டு. ஒன்று சிவன் சிந்தனையை சித்தத்தில் பதித்து வழிபாடு செய்வது. மற்றது சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து கீழுடை மற்றும் கோவணம் விரும்பியதை அளித்து வணங்கி மகிழ்வது.
பக்கத்தில் உள்ள நல்லூரில் கோவில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று மடம் அமைத்து அன்பர்களுக்கு அமுது படைத்து அளித்து வந்தார். அப்படிக் கோவணமும் சீருடையும் அன்பர்களுக்குத் தந்து தொண்டு செய்துவரும் அமர் நீதியாருக்கு கோவணத்தின் பெருமைகாட்டி அருள்கொடுக்க எம்பெருமான் மறையவர் குலத்து பிரம்மச்சாரி வேடம் தாங்கி வந்தார். அவரை மனத்திலும் முகமிக மலர்ந்து வரவேற்றார் அமர்நீதியார்.
ஐயா, நான் தெய்வத்தன்மை மிகுந்த காவிரியில் நீராடி வருகின்றேன். மழைவரினும் வரும் தண்டிலே உள்ள இந்த உலர்ந்த கோவணம் ஒன்றினை உம்மிடம் கொடுக்கின்றேன். கோவணம் என அலட்சியமாக இருக்க வேண்டாம். நான் குளித்துவரும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்ட அமர்நீதியாரும் ஒப்புக்கொண்டார்.
அமர்நீதியார் அடியவர் முக்கியத்துவம் கொடுத்த கோவணத்தை மற்றவைகளிடையே வைக்காமல் தனியாக பத்திரமாக வைத்தார். இறைவன் கோவணத்தை போக்கிவிட்டு மழையையும் பொழிய வைத்தார். அடியவர் மழையில் நனைந்து வந்து, என் கோவணம் நீரில் மூழ்கியதாலும், தண்டில் இருந்த கோவணம் மழையாலும் நனைந்து விட்டது, நான் கொடுத்த கோவணத்தை தாருங்கள் எனக் கேட்டார். அமர்நீதியார் உள்ளே சென்று பார்த்தபோது வைத்த இடத்தில் அந்த கோவணம் இல்லை. பதறிவிட்டார். இந்த அதிசயம் என் வாழ்நாளில் கண்டதில்லை. தங்களுக்கு வேறு ஒரு கோவணம் புதியதாகத் தருகின்றேன் என்றார்.
அமர்நீதியாரே. உமது செயல் நன்றாக இருக்கின்றது! நல்ல கோவணம் தருகின்றேன் என்று பல நாளும் பலரைச் சொல்ல வைத்தது என்னுடையதை வைத்துக்கொள்ள நாடகமா? பழையதாக இருந்தாலும் பரவாயில்லை. என்னுடையதுதான் வேணும் என்றார். அமர்நீதியார் அடியவரே அதற்குப் பதிலாக பொன்னும் மணியும் தருகிறேன் என்றதையும் மறுத்து கோவணமே வேண்டும் என்றார் அடியவர். என்னிடம் காணாமற் மறைந்த கோவணத்தைக் கேட்டால் எப்படி. அதற்கு மாற்று சொல்லுங்கள் என்றார் அமர்நீதியார்.
நான் உடுத்தியிருக்கின்ற கோவணம் தவிர, உம்மிடத்திலே கொடுத்து நீர் தொலைத்த கோவணம் தவிர அதற்கு நிகரான தண்டிலே உள்ள இந்தக் கோவனத்திற்கு சமமான கோவணம் வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்த அமர்நீதியார் தன்னிடமிருந்த எல்லா கோவணத்தையும் வைத்தும் தராசு சமநிலை அடையவில்லை. அதிசயப்பட்ட நீதியார் தன்னிடமிருந்த பொன் பொருள் அனைத்தையும் வைத்தார். அப்போதும் தராசு சமநிலைக்கு வரவில்லை.
வேறுவழி தெரியாமல் அமர்நீதியார் அந்த தராசை மனைவி மகனுடன் வலம்வந்து நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய்யடியில் தவறு செய்யவில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க எனச் சொல்லி நல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்து ஓதி தராசில் ஏறி நின்றார். தராசு துலை நேர் நின்றது. இறைவன் உமையோடு காட்சிதந்து தம்முன் எப்போதும் தொழுதிருக்ககூடிய இன்ப பேற்றினை அருளினார்.
4. அரிவாட்டாய நாயனார்
கணமங்கலம் என்ற புள்ள மங்கலம் ஊரில் தாயனார் தோன்றினார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட் செல்வம் உடையவர். ஆண்டன்மேல் மாறாத அன்பு கொண்டவர். அவர்தம் துணைவியரும் கணவர் குறிப்பறிந்து நடக்கும் தன்மையானவர். இருவரும் திருக்கோவிலுக்குச் சென்று செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் வைத்து அமுதூட்டி வணங்குவார்கள். அவர்களின் பணி செம்மையாக நடைபெற்று வந்தது.
தாயரின் தொண்டின் சிறப்பு உலகறியவும் அவரை ஆட்கொள்ளவும் கருதினார் சிவபெருமான். அதன் விளைவாக தாயரின் செல்வம் நாளுக்கு நாள் குறந்தது. செல்வம் இல்லா நிலை ஏற்பட்டபோது, தாயனார் நெல் அறிந்து தரும் கூலி வேளைக்குச் சென்றார். கூலியாகப் பெற்ற நெல்லில் செந்நெல்லை பெருமான் வழிபாட்டிற்கும், கார்நெல்லைத் தனக்கும் பயன்படுத்தினார். ஊரில் எங்கும் செந்நெல்லே விளந்தது. கார் நெல்லே இல்லை. கார் நெல் கிடைக்காமையால் உணவுக்கு தட்டுப்பாடு வந்தது. கிடைக்கும் கீரைகளை சமைத்து சாப்பிட்டனர். எப்படியிருப்பினும் இறை வழிபாட்டிற்கு செந்நெல் கிடைக்க மகிழ்வுடன் தொடர்ந்து அமுது படைத்து வழிபட்டார்.
நாட்கள் கடந்தன. கீரையும் கிடைக்கா நிலை. கணவன் மனைவி இருவரும் தண்ணீரையே அருந்தி வாழ்ந்தனர். பலநாள் உணவு இல்லாமையால் உடல் சோர்ந்தது. உள்ளம் தளராமல் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் பஞ்ச கவ்வியமும் எடுத்துக் கொண்டு கோவில் நோக்கி சென்றனர். வயல்வெளி குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி தாயனார் கீழே சாய்ந்தார். வயல் வெளியில் ஆண்டவனுக்கு வைத்திருந்த செந்நெல்லும் செங்கீரையும் சிதறிக்கிடந்தது.
இனி கோவிலுக்குப் போய் என்ன செய்யப் போகின்றோம் என் வழிபாடும் திருத்தொண்டும் இன்றோடு முற்றுப் பெற்றது. இனி வாழ்ந்து என்ன பயன் எனக் கருதிய தாயனார் அரிவாளைக் எடுத்து தன் கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது ஒருகரம் தாயரின் கையைத் தடுத்தது. பெருமான் விடைமேல் தோன்றி “நீ புரிந்த செயலால் நாம் மகிழ்வுற்றோம், நீயும் உன் மனைவியுடன் என்றும் நம் உலகில் வாழ்வாயாக” என அருள் செய்து அருளினார். அரிவாளால் தன் ஊட்டியை அரிந்ததால் அரிவாட்டாய நாயனார் என்ற பெயர் உண்டாயிற்று.
5. ஆனாய நாயனார்
மழவநாட்டின் ஒரு பகுதியான திருமங்கலம், லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து பச்சைப் புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது எம்பெருமானை புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்து தானும் இன்புறுவார்.
உள்ளம் ஒன்றிய இசையால் பெருமானோடு தினமும் ஒன்றிப்போவார் ஆனாயர். தினமும் ஆநிரைப்பணியும் குழல் வழிபாடும் இனிது நடந்தது. ஒருநாள் கொன்றை மரம் ஒன்றைப் பார்த்து அவ்விடம் சென்றார். கொன்றைமலர் ஐந்து இதழ்களைக் கொண்டது. அதன்மேலிருக்கும் மலர்குழல் ஓங்காரம் போலிருக்கும். அது கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கியிருப்பதை பார்த்த ஆனாயர் அந்த மரத்தை சிவமாகக் கருதினார்.
தான் சிவமாக கருதிய கொன்றை மரத்தின் முன் நின்று ஒன்றிய மனத்துடன் தன் அன்பையும் இசையையும் இணைத்து மடைதிறந்த வெள்ளம்போல் புல்லாங்குழலால் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். அப்பகுதி எங்கும் இசை வெள்ளம் பரவியது. வலியவரும் மெலியவரும் தம் முன் பகை விடுத்து அன்புடன் நட்பு பாராட்டியது. அப்பகுதி உயிரினங்கள் தன்னை மறந்தன. அந்த இசை எம்பெருமான் செவி அருகேயே செல்ல பெருமான் விடைமீதேறி அவ்விடம் வந்து சேர்ந்தார். “இந்நிலையிலேயே நம் உலகை அடைவாய் அங்கும் உன் குழல் ஒலிக்கட்டும்” என அருள் செய்தார்.

6. இசைஞானி நாயனார்
திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
7. இடங்கழி நாயனார்
கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்.
அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள் இல்லாமையால் என்ன செய்வது என தடுமாறினார். மன்னர் இடங்கழியார் பண்டாரத்தில் நிறைய நெல் மூட்டைகள் உள்ளது எனத்தெரிந்து, அதை திருட முடிவு செய்தார். திருத்தொண்டு செய்ய திருடுவதைத் தவிர வேறில்லை என்ற நிலையில் நடு இரவில் பொக்கிஷ அறையில் புகுந்து நெல் மூட்டையை திருட முயற்சித்தார்.
வீரர்களிடம் மாட்டிக்கொண்டார். மன்னர் முன் நிறுத்தப்பட்டார். உம்மைப் பார்த்தால் திருடுவதை தொழிலாகக் கொண்டவன் போல் இல்லை, எதற்காக இவ்வாறு செய்தீர்? என்றார். அடியார் மன்னிடம் தான் அடியவர்க்கு மகேசுவரபூசை செய்திட போதிய பொருள் இல்லாததால் திருட வந்தேன் என்றார். மன்னன் “இவரல்லவா எனக்கு பொக்கிஷம். வேறு பொக்கிஷம் எதற்கு” என தன் பண்டாரத்தை திறந்து உங்களுக்கு எவ்வளவு நெல், பொன், பொருள் வேண்டுமோ அனைத்தையும் எடுத்துச் சென்று தொண்டு செய்யுங்கள் என்றார். மற்ற அடியவர்களும் வேண்டியது பெற பறையறிவிப்பு செய்தார். பல ஆண்டுகள் அடியவர் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
8. இயற்பகை நாயனார்
பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர்.
இவ்வடியவரின் திறத்தை உலகுக்கு அறியச் செய்ய நினைத்து காமுகன் வேடம் பூண்டு புறப்பட்டார். இயற்பகை இல்லம் வந்தார். இயற்பகையாரே நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்கினும் இல்லை எனக் கூறாது வழங்கும் உம் வள்ளல் தன்மை பற்றித் தெரிந்தபின் உன்னிடம் ஒன்று வேண்டி வந்தேன் என்றார். அடியவரே என்ன தயக்கம். யாதாயிருந்தாலும் என்பக்கம் இருந்தால் அது எம்பிரான் அடியவர் உடமை. வேண்டியது கேள் என்றார்.
அடியவர் நீங்கள் தரலாம் என்றால் நான் கேட்கலாம் என்றவரிடம் கேளுங்கள் என்றார். ‘உன் காதல் மனைவியைத் தா’ என்றார் அடியவர். தன்னிடம் இருப்பதைக் கேட்டார் என மகிழ்வுற்று நான் தந்தேன் என்ற இயற்பகை, மனையிடம் சென்று ‘இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு கொடுத்தனம்’ என்றார். செய்தி கேட்ட மங்கை கலங்கினார். கணவரின் மனநிலை அறிந்து தெளிந்தார். அம்மையார் கணவன் சொல்லைக் காக்க முனைந்து தன் கணவரை வணங்கினார். அடியார் இவளை அழைத்துபோக பயமாயிருக்கின்றது ஊர் எல்லைவரை வழித்துணையாக வர இயற்பகையாரிடம் வேண்டு கோள் விடுத்தார். அவ்வறே வருகிறேன் என உடைவாளை எடுத்துக் கொண்டு துணைக்குச் சென்றார்.
இச்செயலை அறிந்த சுற்றத்தாரும் ஊர் மக்களும் அதை தடுக்க முடிவு கொண்டனர். தன் முடிவை சொன்ன இயற்பகையார் ஏற்றுக் கொள்ளாமல் தடுத்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியவரிடம் நீங்கள் புறப்படுங்கள் என்றார். அடியவரும் அம்மையாரும் ஒரு திசையிலும் இயற்பகையார் ஒருதிசையிலும் சென்றனர். எந்தவிதக் கவலையோ துன்பமோ இன்றிப் போகின்ற இயற்பகையாரைக் கண்ட அடியவர் வியந்து சொன்னார். “பொய்தரும் உள்ளம் இல்லான், பார்க்கிலன் போனான்” அவரின் பற்றற்ற உள்ளத்தை பாராட்டுகிறார்.
இயற்பகை முனிவா நீவா! என குரல் கேட்டுத் திரும்பினார் இயற்பகையார். பெருமான் வானில் வெள்ளிவிடைமீது தோன்றி உம் துனைவியோடு நம்முடன் வா என அருள் புரிந்தார்.
9. இளையான்குடி மாற நாயனார்
இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் பாலிப்பு செய்வதை தன் பெருந்தொண்டாக கருதினார். ஆண்டவன் வழிபாடு ஆராதனை. அடியவர் வழிபாடு சமாராதனை என்பர். சம்-நன்றாக. விட்டை விட்டு வெளியில் வந்து பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.
பெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.
தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட பெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார்,
நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவருக்கு உணர்த்த அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குழிநிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார்.
அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.
10. உருத்திர பசுபதி நாயனார்
சோழநாட்டில் திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம் அதர்வன என்ற நான்கில் அதர்வன மற்ற மூன்றின் தொகுப்பு. அதனால் வேதம் ‘த்ரயா’ என்பர். மூன்றினுள் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதமாகும். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் மையத்துள் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களை உடையது திரு உருத்திரம் என்பது. அது 101 வரிகளை உடையது. 51 வரியில் ‘சிவாய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும். இவ் உருத்திரத்தை ஜெபித்ததால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார். அந்த ஊரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் இந்த உருத்திர ஜபம் செய்து சிவ புரியை அடைந்தார்.
11. எறிபத்த நாயனார்
அமராவதியாற்றின் கரையில் உள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர். அங்குள்ள ஆநிலைக் கோவிலின் பசுபதீசுவரரை நாளும் மூன்று முறை வணங்கி வந்தார். இத்தலப்பெருமானை வழிபடின் மீண்டும் ஒரு கருவில் பிறக்க வாய்ப்பு ஏற்படாது. எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார்.
அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற அடியர் வைகறைப்பொழுது எழுந்திருந்து நீரில் மூழ்கி குளித்து திருநீறு அணிந்து வாயினைக் கட்டி நந்தவனத்தில் மலர் பறித்து ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு மலர்களை மாலையாக்கி தினமும் இறைவனுக்குச் சூட்டி மகிழ்வார். ஒருநாள் அப்படி அவர் துய்மையுடன் மாலையை இறைவனுக்குச் சூட்ட எடுத்து வரும்போது மன்னனுக்கு பிரியமான பட்டத்துயாணை பட்டவர்த்தனத்துக்கு மதம் பிடித்து ஓடிவந்து சிவகாமி ஆண்டாரின் கையிலிருந்த மாலையை வீசி எறிந்து நாசம் செய்தது. பூக்கள் புழுதியில் பட்டு நாசமாயின. தன் மலர்த் தொண்டுக்கு ஏற்பட்ட சோதனை கண்டு கதறினார். தரையின் மீது விழுந்து ‘சிவதா சிவதா’ என அழுது பெருமானிடம் முறையிட்டார்,
அப்போது அங்கு வந்த எறிபத்தர் சிவகாமி ஆண்டவரின் முறையீட்டைக் கேள்விபட்டு கோபத்தினால் கொதித்து எழுந்தார். எம் அடியார்க்கு இவ்யானை பகையா எனக் கூறி யானை சென்ற வழியில் சென்று அந்த மதம் பிடித்த யானையின் துதிக்கையை வெட்டினார். பாகர்களையும் வெட்டினார்.
கேள்விப் பட்ட மன்னர் யானையை வெட்டிய பகைவரை எதிர்பார்த்து அவ்விடத்தே அடியார் ஒருவர் இருப்பதைக் கண்டார். நடந்தவற்றை அறிந்தார். சிவபக்தி மிக்க மன்னன் அடியவரே சிவத் தொண்டுக்கு இடையூறு செய்த யானையும் பாகனையும் வெட்டியது சரி. இவற்றை சரியாக நிர்வகிக்காத தானும் குற்றவாளியே, என்னை தாங்கள் என் வாளினால் தண்டியுங்கள் எனத் தன் வாளினை எடுத்து தந்தான்.
எறிபத்தர் புகழ்ச்சோழரின் பக்தியைக் கண்டு என்னால் இவ்வடியவரின் மனம் எவ்வளவு புண்பட்டு விட்டதே. நான் இருப்பதில் பயன் இல்லையென்று தன்னை வெட்டிக்கொள்ள முயன்றார். புகழ்ச் சோழர் பதறிப்போய் தடுத்தார். வானிலிருந்து ‘அன்பர்களே உங்கள் இருவரது அன்பினையும் உலகறியச்செய்யவே நாம் இவ்வாறு செய்தோம்’ என்று ஒலித்தது. யானையும் பாகரும் உயிர் பெற்றனர். சிவகாமி தொண்டர் மலர் தொண்டினை தொடர்ந்து செய்து வந்தார். எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகணத் தலைவராக ஆனார்.
12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பிஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.
இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.
ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர்மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல்சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ள போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.
13. ஏனாதிநாத நாயனார்
கும்பகோணத்திற்கு தென் கிழக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள எயினனூர் தற்போது ஏனநல்லூர் என்ற ஊரிலே ஏனாதிநாதர் பிறந்தார். ஏனாதி என்றால் படைத்தளபதி என்றாகும். மன்னர்களுக்கு போர் பயிற்சி தரும் பணியை மேற்கொண்டார் ஏனாதிநாதர். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடியவர்கட்கு வேண்டியவற்றை வழங்கி வழிபடுவது அவர் கொள்கையாகும்.
ஏனாதிநாதர் வாள் வலிமையும், தோள் வலியும் அஞ்சா நெஞ்சமும் உடையவராய் திகழ்ந்தார். ஊரில் வாட்படைப் பயிற்சிக்கூடம் அமைத்துப் பயிற்சி கொடுத்து வந்தார். திறமையான பயிற்சியால் செல்வமும் செல்வாக்கும் பெருகியது. அவர் பெற்ற செல்வம் எல்லாம் அடியவர்கட்கே பயன் பட்டது. அவர் புகழ் அதிகரித்தது. பகைவர்கள் உட்பட அனைவரும் அவர் திறமையைப் புகழ்ந்தார்கள்.
அவ்வூரில் வாழ்ந்த வாட்பயிற்சி தரும் அதிசுரன் அவர்மேல் அழுக்காறு கொண்டான். அவனது திறமையின்மையால் அவனால் பெயர் பெற முடிவில்லை என்பதை உணர முடியாதவன் ஏனாதி நாதர்மேல் பொறாமை கொண்டான். ஒருநாள் அதிசூரன் ஏனாதிநாதர் இருக்கும் இடம் தேடிவந்தான். நான் பயிற்றுவித்தவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன், நீங்கள் பயிற்றுவித்தோரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். இருவரும் சண்டை யிடுவோம். யார் வெற்றி பெறுகிறோமோ அவரே இனி இவ்வூரில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு ஏனாதி நாதரும் உடன்பட குறித்த நாளில் போர் தொடங்கியது. ரத்தக் களாமாகிய இடத்திலிருந்து அதிசூரன் ஆட்கள் ஒடி ஒளிந்தனர்.
தோற்ற அதிசூரன் போரில் ஏனாதிநாதரை வெல்வது கடினம் என உணர்ந்தான். வஞ்சனையால் வெல்ல நினைத்தான். மீண்டும் ஏனாதி நாதரைச் சந்தித்தவன் நம்மால் ஏன் பலர் மடியவேண்டும். நாமிருவரும் வாட்போர் செய்யலாம். வெற்றி பெற்றவர் பயிற்சி சொல்லித்தரலாம் என்றார். அதற்கு இசைந்தார் ஏனாதிநாதர். போர் குறிப்பிட்ட நாளில் நடந்தது.
தோற்கும் நிலையடைந்த அதிசூரன் தான் திட்டமிட்டபடி தன் நெற்றியில் உள்ள திருநீற்றை மறைத்திருந்த மறைப்பை விலக்க, நெற்றியில் திருநீற்றை கண்ட ஏனாதிநாதர் அடியவரைக் கொல்வதா என வாளை எறிந்துவிட எண்ணினார். அதனால் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்தார். அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்ற மண்ணில் சாய்ந்தார்.
நெற்றியில் திருநீறு கண்டமைக்காக அடியவர் என நினைத்து கொல்லாமை தவிர்த்து தன் உயிரைக் கொடுத்த ஏனாதிநாதருக்கு அருள் வெளியில் பெருமான் காட்சி கொடுத்து அருளினார்.
14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும், கலியையும் பகைவரது வலியையும் அடக்கி சைவநெறியை எங்கும் பரவச் செய்து நீதி நெறி தழுவாது அரசு புரிந்தார். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் வல்லவர், காலக்கிரமத்தில் உலகத்தை அரசு புரிவது துன்பம் எனக் கருதினார், மனம் சிவனடியார்கள்பால் லயித்தது. உலகயியலில் மனம் ஒட்டவில்லை. எனவே அரசாட்சியை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு திருத்தொண்டு செய்வதில் ஈடுபட்டார்.
பெருமான் கோவில்கள் தோறும் சென்று பல பணிகள் செய்து உள்ளம் உருக வெண்பா பாடல் பாடி வழிபட்டு வந்தார். பூமாலையை விட பாமாலை உயர்ந்தது. ஞான வாசனை வீசுவது. உள்ளத்தை உருக்கி அன்புத்தேனை பெருக்கி நம்மை உய்விப்பது. ஒரு கோவிலுக்கு ஒரு வெண்பா என யாரும் எளிதில் உய்யும் பொருட்டு பாடும் நியமம் கொண்டிருந்தார். பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு தன் தேக யாத்திரையையும் முடித்து இறையடி சேர்ந்தார்.
15. கணநாத நாயனார்
சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். சைவ சமயம் தழைத்தோங்க பயிற்சிப்பள்ளி அமைத்தார். சைவத்திற்கு அடிப்படை தொண்டு. சமயம் வளர தொண்டர்கள் தேவை. தொண்டர்கள் இல்லா அமைப்பு வளராது. நீண்ட நாள்வாழாது என்ற நுட்பத்தைப் புரிந்து கொண்ட கணநாதர் நல்ல தொண்டர்களை உறுவாக்கினார்.
நந்தவனம் அமைப்பது, மலர்கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது. காலையும் மாலையும் கோவிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கு தொண்டர்களை உருவாக்கினார்.
திருஞானசம்பந்தரைப் போற்றி அவரை தன் குருவாகக் கொண்டவர். அந்தப் பெருமானின் திருவடிகளே தனக்கு காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறையடி சேர்ந்தார்.
16. கணம்புல்ல நாயனார்
வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு வந்தார்.
வறுமை அவரை வாட்டியது. தில்லைசென்று ஆடலரசை பலகாலம் வழிபட்டு வந்தார். வீட்டில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று திருப்புலீச்சுவரம் கோவிலில் விளக்கு ஏற்றி வந்தார். விற்பதற்கு அவரிடம் ஒரு பொருளும் இல்லை. அயலாரிடம் சென்று இரஞ்சுவதற்கு அஞ்சினார். உடல் உழைப்பால் அரிந்த கணம் புல்லைக் கொண்டுவந்து விற்று அதனால் கிடைக்கும் பெருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு செய்தார்.
ஒருநாள் அரிந்து கொண்டு வரும் கணம் புல் எங்கும் விற்காமல் அவதிப்பட்டார். அதனால் விளக்கு எரிக்க அந்த புல்லையே திரித்து எரித்தார். தொடர்ந்து எரிக்க புல் இல்லை என்ற நிலையில் அன்புருகும் சிந்தையுடன் அவ்விளக்கில் தன் தலையை வைத்து எரிக்க முயன்றார்.சிவபெருமான் தடுத்து அருள் புரிந்து சிவலோகப் பதவிதந்தார்.
17. கண்ணப்ப நாயனார்
ஆந்திரமாநிலம் பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேடமன்னன் நாகன் – தத்தை இருவருக்கும் முருகப்பெருமானை வேண்டி மகனாகப் பிறந்தார். குழந்தையின் உடல் திண்மையாக இருந்ததால் திண்ணன் எனப் பெயர் வைத்தனர். தம் குலத்தொழில் படி வில் வித்தைகளைக் கற்று தேறினார். திண்ணப்பருக்கு வயது பதினாறாகியது. நாகன் முதுமை அடைந்தான். காட்டில் மிருகங்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இளவரசர் திண்ணப்பர் தலைமையில் வழி நடக்க முடிவெடுக்கப்பட்டது.
தலைமைப் பொறுப்பு ஏற்க வேடர் தலைவன் கன்னி வேட்டைக்குச் செல்ல வேண்டும். அதன்படி திணணப்பர், நாணன், காடன் என்ற இருவருடன் கன்னி வேட்டைக்குப் புறப்பட்டார். வழியில் ஒரு காட்டுப்பன்றி வலையை அருத்துக் கொண்டு ஓடியதைப் பார்த்தவர்கள் அதைத் துரத்தி கண்ணப்பர் தன் வாளினால் குத்திக் கொன்றார். நீண்டதூரம் ஓடிவந்த களைப்பால் நாணா தண்ணீர் தாகமாக உள்ளது என்றார் திண்ணப்பர். இந்த தேக்குமரக்காட்டைக் கடந்ததும் பொன்முகலி ஆறு ஓடும். அதில் சுவையான நீர் பருகலாம் என்றான் நாணா.
அவர்கள் செல்லும் வழியில் ஒரு மலை தென்பட்டது. மலையை நோக்கிச் செல்ல செல்ல திண்ணன் புதியதோர் உணர்வு பெற்றார். அதை உணர்ந்த திண்ணன் அந்த மலையைக் காணவும் அங்கு உள்ள குடுமித்தேவரையும் பார்க்கவும் ஆவலுற்றான். படிகளைக் கடந்து காளத்தியார் திருமுன் நின்றான்.
அந்தப்பெருமானைப் பார்த்தவுடன் பரவசமானார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஓடினார். தழுவினார். உச்சு மோந்தார். சிலையாக நமக்குத் தெரிந்த காளத்தியர் திண்ணனுக்கு உயிர்புடைய பொருளாகக் காட்சி கொடுத்துள்ளார். திண்ணன் நாணனை இறைவனுக்கு வேண்டுவது யாது என வினவ. நாணன் நானும் உன் தந்தையும் ஒருமுறை இக்கோயிலுக்கு வந்தோம். அப்போது ஐயர் ஒருவர் பெருமானுக்கு தண்ணீர் ஊற்றிப் பூப்போட்டு உணவு படைத்தான் எனத் தாங்கள் பார்த்ததை கூரினார்.
அதைக்கேட்ட திண்ணன் இவர் எப்போது சாப்பிட்டாரோ என மனம் கலங்கினார். உடனே ஓடிச்சென்று தான் கொன்ற பன்றி கறியைப் பக்குவப்படுத்தி எடுத்துக்கொண்டு, மலர்களைப் பறித்து தன் தலையில் வைத்து, ஆற்று நீரை வாயிலே நிரப்பிக் கொண்டு வந்து காளத்தியர் முன் நின்று அவர்மேலிருந்த அந்தணர் முன்பு பூசித்த மலர்களையெல்லாம் தன் செருப்புக் காலால் அகற்றிவிட்டு வாயில் உள்ள நீரை பெருமான்மேல் உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை பெருமான்மீது உதிர்த்தார். பெருமானே நானே நன்கு ருசித்துப் பார்த்த இறைச்சி நல்லூன் இதனை உண்ண வேண்டுமென வேண்டினார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் வந்த அந்தணர் இறைச்சியின் கழிவுகள் இருப்பதைப் பார்த்து கலங்கினார். துப்பரவு செய்து மலரிட்டு வழிபட்டுச் செல்வார், இப்படியே சில நாட்கள் சென்றது.
அந்தணர் தினமும் இப்படி நடப்பது பற்றி இறைவனிடம் புலம்பினார். அன்று அவர் கனவில் இறைவன் தோன்றி நீ தீண்டத் தகாதன் மூடன் என யாரை நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அவன் செயலை நாளை நீ மறைந்து பார் என்றார். அந்தணர் சிவகோசரியார் அதிகாலை எழுந்து வழிபாடு செய்தார். பின் ஒருபுறம் மறைந்து நின்றார்.
திண்ணன் ஓடோடி வருகின்றார். அவருக்கு சகுனங்கள் சரியில்லை. எம்பிரானுக்கு எதோ தீங்கு எனக் கவலையுற்றார். அவர் பார்க்கும்போது பெருமான் கண்ணில் உதிரம் சிந்தியது. பார்த்த கண்ணப்பர் கவலையுற்றார். யார் செய்தது என அங்குமிங்கும் தேடினார். என் செய்வேன் என கலங்கினார். அருகில் உள்ள தனக்குத் தெரிந்த பச்சிலைகளை ஓடிக் கொண்டுவந்து கண்ணில் பிழிந்தார். உதிரம் நிற்கவில்லை.
அவருக்கு தன் குலத்தில் ஊனுக்கு ஊன் இடல் என்ற மருத்துவ முறை நினைவிற்கு வர தன் கண்ணை தன் அம்பினால் பெயர்த்தார். பெருமான் கண்ணில் அப்பினார். அதுபொருந்தி குருதி நின்றது. தன் கண்ணில் இரத்தம் பெருகியும் பெருமான் கண்ணில் இரத்தம் நின்றதே என மகிழ்வுற்றார். அந்த மகிழ்ச்சி சிறிது நேரம்கூட இருக்கவில்லை. பெருமானின் மற்றொரு கண்ணிலும் குருதி வந்தது. திண்ணன் கவலையில்லை மருந்து கண்டேன்! என தன் செருப்புக் காலால் பெருமானின் இடது கண்ணை அடையாளமாக வைத்து தன் மற்ற கண்ணையும் எடுக்க முயன்றார். அப்பொது பெருமான் திருமேனியிலிருந்து ஓர் கரம் தோன்றியது. நில் கண்ணப்பா! என்று அவரை தடுத்தது.
‘உன்னுடைய உண்மையான அன்பால் நான் மனம் உருகினேன். கண்ணை கொடுத்ததால் கண்ணப்பர் என்றும், என்றும் எனது வலப்பக்கம் இருப்பாயாக’ என அருள் புரிந்தார். இதைக் கண்ட அந்தணர் ஆனந்தம் அடைந்து தொடர்ந்து வழிபட்டு வந்தார்.
18. கலிக்கம்ப நாயனார்
விருதாசலம் அருகில் உள்ள பெண்ணாடகத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்பர் பிறந்தார். இறைவனுடைய திருஅடியை மறவாதவர். தூங்கானைமடம் என்ற அவ்வூர் திருக்கோவிலில் தொண்டுகள் பல புரிந்தார். சிவன் அடியார்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் உள்ளவர்.
ஒருநாள் தமது மாளிகையில் அமுது செய்யவந்த அடியார்களை அழைத்து துனைவியார் நீர்விட பாதபூசை செய்வார். கலிக்காமரிடத்தில் வேலைசெய்த அடியாள் ஒருவர் வேலையைவிட்டு விலகி சிவனடியாராகி திருநீறும் கண்டிகையும் அணிந்து அக்கூட்டத்தில் இருந்தார். அடியவர்களின் முன்னைய நிலையை நோக்காமல் அன்புடன் அவர் திருவடிகளை தொட்டு பூசை பண்ணினார். நாயனாரின் துனைவியார் அந்த புதிய அடியவரின் முகத்தைப் பார்த்து நம்வீட்டில் பணி புரிந்தவன் தானே என்று நீர் வார்க்காமல் நிறுத்தினார்.
சிவனடியார் நிலை குறித்து ஆய்வதற்கு நாம் யார். அவர் முந்தைய நிலை எதுவாயினும் இப்போது அவர் சிவனடியார். அவரை இழிவு செய்வது பெரும் பிழை. அவர் திருவடிக்கு நீர்வார்க்க மறுத்த மனைவி மீது சினம் கொண்டு தன் வாளினால் அவள் கரத்தை வெட்டினார். குடத்தை வாங்கி தானே நீர் வார்த்து பூசித்தார். பெருமான் தோன்றி மனைவியின் கை மீண்டும் பெற அருள் புரிந்தார். கலிக்கம்பர் பல ஆண்டுகள் பணி செய்து இறையடி சேர்ந்தார்.
19. கலிய நாயனார்
திருவொற்றியூரில் எண்ணெய் வணிகம் செய்யும் வணிககுலத்தில் கலியர் பிறந்தார். மிக்க செல்வம் படைத்தவர். திருவருள் நெறியில் திளைத்தார். பெருமானுக்கு விளக்கு ஏற்றி தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையிலும் தொண்டு செய்யும் செம்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர் செல்வம் மறைந்தது. கலியருடைய அசையும் அசையா சொத்துக்கள் அவரை விட்டு நீங்கின.
கலியர் தங்கள் உறவினர்களிடம் எண்ணெய் வாங்கி விற்று அதில் கிடைக்கும் பணத்தில் விளக்கேற்றி வந்தார். காலப்போக்கில் அவர்கள் எண்ணெய் தரமறுத்ததால் அந்த வருவாய் நின்றது. மனம் தளர்ந்தார். எண்ணெய் ஆட்டியும், செக்கு மாட்டை ஓட்டியும் வரும் கூலியைப் பெற்று தொண்டினைத் தொடர்ந்தார். தொழிலில் போட்டி ஏற்பட்டதால் தொழிலும் கிடைக்கவில்லை. வீட்டுப் பொருள்களை எல்லாம் விற்று விளக்கெரித்தார். அதுவும் தீர்ந்தது.
தன் மனைவியை பெற்று பணம் தருவோரைத்தேடினார், ஒருவரும் கிடைக்கவில்லை. படம்பக்க நாதர் கோவில் வந்தார். விளக்கிட ஒரு சாதனமும் இல்லை. விளக்கிடும் தொண்டு இல்லையெனில் நானும் இல்லை என்று அகல் விளக்குகளை வரிசையாக வைத்தார். தம் வாளை எடுத்து எண்ணெய்க்குப் பதில் தன் இரத்தத்தை நிரப்ப எண்ணி கண்டத்தை அறுத்தார்.
சிவபெருமான் தோன்றி கையைப்பிடித்து அருள் தந்தார். விடைமீது காட்சி கொடுத்தார். அவருடன் சிவபதம் அடைந்தார்.
20. கழற்றறிவார் நாயனார் (சேரமான்)
சேரநாட்டில் பெருமாக்கோதையார் வாழ்ந்து வந்தார். அஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தொண்டு செய்து வந்தார். காலை புனித நீராடி திருவெண்ணீறு அணிந்து பணிசெய்து மலர்கொய்து பெருமானுக்கு மாலை சூட்டு மகிழ்ந்திருந்தார். சேரநாட்டை ஆண்ட செங்கோற்பொறையன் அரசும் அதிகாரமும் நிலையல்ல. இறைவன் திருவடியடைந்து தவஞ்செய்வதே சிறந்தது என்று கானகம் சென்றார். அடுத்த அரச உரிமையுள்ளவர் பெருமாக் கோதையர் என அறிந்து அவரிடம் பொருப்பை ஏற்க சொல்கின்றனர்.
திருத்தொண்டைவிடவா அரசபதவி இன்பம் தருவது. இறைவன் திரு உள்ளம் என்ன நினைக்கின்றது என அறிந்து செயல்பட நினைத்து இறைமுன் தொண்டு செய்ய என் உள்ளம் விரும்பினாலும் இவர்கள் அரசு பொறுப்பைத் தருகின்றார்கள். நான் எதை மேற்கொள்வது என வேண்ட இறைவன் அரசு புறத்தலே உன் கடன் என்றார். அப்படியென்றால் எல்லா உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற ஆற்றலும் வேண்டும் என வேண்டினார். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமைக்கு கழறுதல் எனப்படும். எனவே கழற்றறிவார் எனப் பெயர் பெற்றார்
கழற்றறிவார்க்கு முடி சூட்டும் விழா நடந்தது. கோவிலில் பெருமானை வழிபட்டு பட்டத்து யானைமீதேறி அரண்மனை சென்றபோது எதிரில் ஓர் வண்ணான் எதிர்பட்டான் அவன் மேனியெல்லாம் உவர்மண் ஒட்டி நீறுபூசிய முனிபோல் தென்பட்டான். மன்னர் யானைமீதிருந்து கீழிறங்கி வணங்கினான். என்னை யாரோ என நினைத்துள்ளீர் நான் வண்ணான் என்றான். மன்னர் நான் அடியேன் அடிச்சேரன் என்றார். நாம் பிடிசாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வுடன் செயல்பட்டார் மன்னர். பெருமான் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வண்ணம் நாள்தோறும் இறைவன் பாதச்சிலம்போசை அளிப்பார். அதன்பின்னர்தான் வழிபாட்டை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.
ஒருநாள் வழிபாடு செய்யும்போது பாதச் சிலம்பொலி கேட்கவில்லை. வழிபாட்டை இறைவன் ஏற்கவில்லை என வருத்தத்துடன் இனி நான் வாழ்ந்து என்ன பயன் என உயிர்துறக்க முற்பட்டார். அப்போது வழக்கத்துக்கு மாறாக இறைவன் வேகமாக சிலம்பொலி எழுப்பினார். சுந்தரரின் பதிகச் செஞ்சொல்லில் ஒன்றியதால் சிலம்பொலிக்க சற்றுதாமதம் ஆயிற்று என்றார்.
இறைவனை மகிழ்வித்த சுந்தரரை ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். ஆரூராரை கொடுங்காளூர் அழைத்துச் சென்றார். சேரமானை ஆரூர் அழைத்துச் சென்றார் ஆரூரார். இருவரும் மாற்றி மாற்றி அவர் இங்கு வந்து தங்குவதும் இவர் அங்கு சென்று தங்குவதுமாய் இருவரின் நட்பு ஒன்றியது. இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார் சேரமான். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.
இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் சேரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.
இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.
நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களத்தில் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பி சுந்தரரை அதில் ஏறி கையிலை வரும்படி பணித்தார். அப்போது தன் நண்பன் சேரமானும் உடன் இருந்தால் நன்றாயிருக்கும் என எண்ணினார். சுந்தரர் இப்படி நினைப்பது உடனே சேரமானுக்கு தேரிந்தது.. உடன் குதிரைமீதேறி திருவஞ்சைக்களம் செல்ல அங்கு சுந்தரர் ஐராவதத்தில் ஏறி விண்ணில் செல்வதைப் பார்த்தவர் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத அது விண்ணென்று விண்ணில் பறந்து ஐராவதத்தை வலம் வந்து அதன் முன் சென்றது.
சேரமான் ஆரூரருடன் கயிலை சென்றார். அங்கு வாயிலில் பூதகணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் சேரமான். உள்ளே சென்ற சுந்தரர், சிவபெருமானை வணங்கி சேரமான் வாயிலில் நிற்பதைத் தெரிவிக்க ஈசன் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைத்தார். சுந்தர மூர்த்தி நாயனார் திருவடிகளைப் பற்றி ஐந்தெழுத்து மந்திரம் ஓதியே இங்கு வந்ததாக கூறி திருக்கயிலாய ஞான உலாப் பற்றி ஓர் கவியாகப் பாடி சிவன் மனம் குளிரவைத்தார். சிவகணநாதராகிச் சிவபெருமானின் தொண்டரானார்.
21. கழற்சிங்க நாயனார்
பல்லவ குலத்தில் பிறந்தவர் கழற்சிங்கர். சிவன் திருவடியை அன்றி வேறு ஒன்றையும் அறிவில் குறிக்கோளாக கொள்ளாது நாட்டை செவ்வனே அரசு புரிந்து வந்தான். சிவனுடைய கருணையால் வடநாடு சென்று பகைத்து நின்ற வடபுல மன்னரை வென்று நவநிதிகளை கைப்பற்றி அதன் மூலம் அரனுக்கு ஆலயங்கள் திருப்பணிசெய்து நைமித்தங்கள் அமைத்து திருத்தொண்டு புரிந்து வந்தார்.
திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார். பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாரை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருக தரிசனம் செய்து வழிபட்டார். அவரின் மனைவி கோவிலை வலம் வந்து பெருமைகளை ரசித்துக் கொண்டிருந்தார். வழியில் இறைவனுக்கு மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தில் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்ததை கண்ட செருத்துனையர் என்ற அடியவர் அவரின் செயல் சிவ அபராதம் எனக்கருதி தன்னிடமுள்ள வாளினால் நுகர்ந்த மூக்கை அறுத்து விட்டார்.
உதிரம் பெருக சோர்ந்து தரையில் வீழ்ந்து அழுது கொண்டிருந்த துனைவியரைப் பார்த்து யார் இதனைச் செய்தது எனக் கேட்ட மன்னனிடம், அங்கிருந்த செருத்துனையர், அரசே, இவர் தம்பிரானுக்குடைய மலரை எடுத்து மோந்ததால் இக்கருமம் யானே புரிந்தேன் என்றார்.
இந்தக் குற்றத்திற்கு ஏற்றதண்டனையை செய்தீரில்லை என வாளை எடுத்து மலரை எடுத்த கையன்றோ முதல் குற்றவாளி எனக் கையை வெட்டினார். கை எடுத்திருக்காவிடில் நாசி நுகர்திருக்காது என்பது அவர் எண்ணம். அவளுக்கு இத்தண்டனைவழங்காவிடில் மறுபிறப்பில் இக்குற்றத்திற்காக ஆயிரம் மடங்கு பெரிய தண்டனையை அனுபவிப்பர் அதை தவிர்க்கவே மன்னன் தண்டனை அளித்தான் என்பர். அப்போது இறைவன் தியாகராசர் காட்சி கொடுத்து மன்னனின் மாண்பு பாராட்டி துணைவியரை முன்புபோல் அருள் செய்தார். தன் தொண்டினைத் தொடர்ந்து பல ஆண்டு புரிந்து இறையடி சேர்ந்தார்.
22. காரி நாயனார்
திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும்படி பாடி உரியையும் விளக்குவார். மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பரிசினை கொண்டுவந்து சிவபெருமானுக்கு கோவில்களில் திருப்பணி செய்தார். அடியார்க்கு உதவிசெய்தார்.
வட கயிலையை மறவாது தியானம் புரிந்தார். அந்த தொடர் தியானத்தால் சிவபெருமான் அருள் துணைபுரிய உடம்புடன் கயிலைசேர்ந்து இன்புற்றார். சுவர்கத்துக்கு சென்றவர் அங்கு ஒளி உடம்பு பெற்றார்.
23. காரைக்கால் அம்மையார்
புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழைந்தையாய் வீடு கட்டி விளையாடும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்வார். வளர்ந்து திருமணப்பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நீதிபதி என்பவரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்வித்தார். தனது மகளுக்குத் தன் வீட்டறுகே வீடு ஒன்று தந்தார். இல்லறம் சிறப்பாக நடந்தது. புனிதவதியார் வீடுதேடிவரும் அடியார்க்கு புத்தாடைகள் கொடுத்து வழிபட்டு வந்தார். இறைவன் நம் நெஞ்சில் இருக்கின்றான் என்ற கருத்துக் கொண்டவர்.
பரமதத்தனுக்கு வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனியைக் கொடுக்க அதை அவர் வீட்டிற்கு அனுப்பினான். வீட்டிற்கு மாம்பழம் வந்த சிறிது நேரத்திலேயே அடியவர் ஒருவர் பசியுடன்வர அம்மையார் சாதமும் தயிருடன் மாம்பழம் ஒன்றையும் தந்துவிட்டார். அடியவர் வாழ்த்தி சென்றார்.
சிறிது நேரத்தில் பரமதத்தன் வந்தார். உணவு பரிமாரப்பட்டது, மாம்பழமும் வைக்கப்பட்டது. மாம்பழம் மிகவும் ருசியாக இருக்க கண்டவர் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டார், உள்ளே சென்ற புனிதவதியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அடியவர்க்கு கொடுத்தேன் என்றால் கணவர் கோபிப்பார் என்றும் உண்மை சொல்லாமல் இறைவனிடம் விண்ணப்பிக்க அவர் கருணைகொண்டு இன்னொரு மாம்பழம் தற புனிதவதியார் அதைக் கணவரிடம் கொடுக்கின்றார். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் அந்தப்பழம் முன் சாப்பிட்டதைவிட அதீத சுவையுடன் இருப்பது அறிந்து இம்மாங்கனி நான் அனுப்பியது அல்ல. இதுபோன்று எங்கும் கிடையாது. இதன் ருசியோ சிறப்பு என்றான். இது ஏது என்றான்
புனிதவதியார் பொய் உரைக்காமல் உண்மை சொன்னார். கடவுள் அருளால் கிடைத்தது என்றால் இன்னொரு கனியை வரவழை பார்க்கலாம் என்றார். அம்மையார் கண்ணீர்விட்டு, ‘ஈங்கிது அருளீரேல் என்னுரை பொய்யாம்’’ என வேண்டியபொழுது அவள் கரங்களில் ஒர் மாங்கனி வந்தது. அதை அவர் பரமதத்தனிடம் தந்தார். அக்கனி சப்பிட அல்ல, சந்தேகத்தை தீர்க்க வந்தது. வந்தபின் மறைந்தது. அதுகண்ட பரமதத்தன் புனிதவதி சாதாரணப்பெண் அல்ல தெய்வப்பெண் அவளுடன் இனி வாழமுடியாது எனத் தீர்மானித்தான்.
பொருள் ஈட்டி வருகிறேன் என சென்று பாண்டிநாட்டின் தூத்துக்குடியில் வேறொரு பெண்னை மணம் புரிந்து பெண் குழந்தை ஒன்றையும் பெற்று அதற்கு புனிதவதி என்றும் பெயரிட்டு வாழ்ந்து வந்தான், இதை அறிந்த தனதத்தன் புனிதவதியை அங்கு அனுப்பி வைத்தான். உறவினர்களுடன் பொது இடத்தில் இருந்து கொண்டு பரமதத்தனை வரச் சொன்னார்கள். அங்கு மனைவி குழைந்தையுடன் வந்தவன் மூவரும் புனிதவதி காலில் விழுந்து இவள் தெய்வம் .அவளின் அருளைப்பெற வணங்குகிறேன். என்றான்.
இதைக்கேட்ட புனிதவதியார் இறைவா என் கணவருக்காக இவ்வுடலை தாங்கியிருந்தேன், அவரே என்னை தெய்வமாக்கியபடியால் என் உடம்பிலுள்ள சதைகள் நீக்கி பூதவடிவான சிவகணங்களுள் பேய் வடிவினை தர வேண்டினார். ஈசன் அருள் புரிந்தார். இப்பூதவடிவுடன் கயிலைசென்று கயிலை நாதனைக் கண்டு வழிபட தலையினாலே நடந்து சென்றார். அங்கு ஈசனைக் கண்டு ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்‘ எனப் பாடினார். ஈசன் அம்மையே என அருள்புரிந்தார். சமயக் குரவர்கள் சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்பதால் அம்மையார் பாடியது ‘மூத்த திருப்பதிகம்’ எனப்படும்.
24. குங்குலிக்கலய நாயனார்
திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர். காலையும் மாலையும் பெருமானுக்கு குங்குலியம் என்ற மணப்பொருளை நெருப்பில் இட்டு தூப பணியாற்றினார். கோவில் முழுக்க சிவமணமும் குங்குலிய மணமும் நிறைந்திருந்தது.
செல்வமிக்க அந்தணர் குடியில் பிறந்தவர். சிவபெருமான் இவ்வடியவரின் திருத்தொண்டினை உலகறியச் செய்ய நினைத்தார், அதன் விளவாக கலயர் நிலங்களை விற்பனை செய்தார். வீடு மனை இவற்றின்மீது கடன் பெற்று தன் குங்குலியப் பணியை தவறாமல் செய்து வந்தார். வறுமை வாட்டியது. சுற்றமும் மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். அனைவரும் பட்டினியாய் கிடந்து துன்பமுற்றனர். அதைக் காணச் சகியாத அவர் மனைவி தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு தாலியைக் கழற்றி கொடுத்து அதில் நெல் வாங்கிவரச் சொன்னாள்.
கலயரும் நெல் வாங்கி வரப் புறப்பட்டார். நெல் வாங்கச் செல்லும்பொது வழியில் குங்குலிய மூட்டையுடன் வணிகன் ஒருவனைப் பார்த்தார். குங்குலியத்தைப் பார்த்தவுடன் குழைந்தைகள் மனைவி நெல் எல்லாம் மறந்தார். அருமையான குங்குலியம் இதனைப் புகைத்தால் கோவில் எப்படியிருக்கும் என எண்ணினார். வணிகரே என்னிடம் பணமில்லை அதற்குப் பதில் தங்கம் தருகிறேன் எனக்கூறியதற்கு அவ்வணிகன் சம்மதித்தான். அவ்வளவுதான் குங்குலியம் கலயரின் கைக்கு வந்தது. அப்படியே வேகமாக எடுத்துச் சென்று கோவில் பண்டாரத்தில் வைத்தார். கொஞ்சம் எடுத்து தூபம் போட்டார். பின் பசி மயக்கத்தில் மயங்கினார்.
அவ்வேளை எம்பெருமான் ஆணையினால் குபேரன் கலயர் வீட்டில் செல்வச் செழிப்பினை உருவாக்கினார். அனைவரும் பசியாறி கலயர் வருகைக்கு காத்திருந்தனர். மயங்கிய கலயர் செவியில், ‘கலயரே நீர் பசியில் இருக்கின்றீர் உம் வீடு சென்று அன்னம் உண்டு மகிழ்ந்து பின் வருக’ என்ற குரல் கேட்டு நனவிற்கு வந்தபிந்தான் தான் செய்தது நினைவிற்கு வந்தது. குழைந்தைகளின் பட்டினி நினைவுக்கு வந்தது. இருப்பினும் பெருமானின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தளர் நடையுடன் வீடு வந்து சேர்ந்தார்.
வீடு தான் விட்டு வந்த நிலையிலிருந்து மாறி செல்வ செழிப்புடன் இருப்பதக் கண்ட கலயர் வியப்புடன் மனைவியைக் கேட்க அவர் எல்லாம் இறைவன் செயல் என்றார். மேலும் அளவுகடந்த பக்தியுடன் தன் தொண்டினை செய்து வந்தார்.
அப்போது அருகில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரில் தடாகை என்ற சிவபக்தை இருந்தார். அவர் தினமும் பெருமானுக்கு குடநீர் கொண்டுவந்து உற்றி மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தார். ஒருநாள் தாடகை மலர்சூட்ட முனையும்பொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையை கீழேவைக்கவும் முடியாமல், சேலையையும் விடவும் முடியாமல் சேலையை தன் இரு முழங்கையினாலும் பிடித்துக் கொண்டு மாலை சூட்ட அம்மையார் அவஸ்திபடுவதைக் கண்ட பெருமான் அம்மையின் அன்பிற்கு இரங்கி குனிந்து மலர் மாலையை ஏற்றுக் கொண்டார். அதைக் கவனியாமல் தடாகை அம்மையார் வழிபாடு முடித்துச் சென்றுவிட்டார்.
பின்னர் வழிபாடு செய்ய வந்த அந்தணர்களும் மற்றவரும் பெருமான் சாய்ந்திருப்பதக் கண்டு பதைத்தனர். என்ன கேடு நிகழுமோ என வருத்தமுற்று மக்கள் கூடி பெருமானை நிமிர்த்த முடிவு செய்தனர். மன்னரிடம் சொன்னார்கள். அனைவரும் சேர்ந்து இரும்பு சங்கிலி, குதிரை, யானை என்று இழுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் அயர்ச்சியடைந்தனர். இதனைக் கேள்விப்பட்ட கலயரும் திருப்பனந்தாள் சென்றார்,
இறைவனை நிமிர்த்தும் பணியில் மன்னனும் மக்களும் ஈடுபட்டு துன்புறுவதால் அப்பணியில் தானும் ஈடுபட்டு அத்துன்பத்தை அடைய நினைத்தார். பெருமான் மீது இருந்த இரும்பு சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு வாழை நாறினை எடுத்தார். பெருமான் மீதும் தன் கழுத்தின் மூதும் இனைத்து பூட்டி இழுத்தார். கலயரின் கழுத்து அறுபடும் என்று பெருமான் நேரே நின்றார். பெருமான் பலத்திற்கு மசியவில்லை, அன்பிற்கு கட்டுப்பட்டார்.
கலயர் மீண்டும் கடவூர் வந்து பெருமானுக்குத் தூபத்தொண்டு பல காலம் செய்து சிவபதம் அடைந்தார்.
25. குலச்சிறை நாயனார்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மணமேற்குடி என்ற ஊரில் குலச்சிறை பிறந்தார். இறைவனைச் சென்றடைய,
1. சிவலிங்கத் திருமேனியை வழிபடுதல்2. குருவை சிவமாக வழிபடுதல்3. அடியார்களை சிவமாக வழிபடுதல்
என்ற குரு லிங்க சங்கம வழிபாட்டை வகுத்தனர். இதில் சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.
பாண்டியநாட்டில் மங்கையர்கரசியார் சைவம் வளர்க்க துணை நின்றார். சம்பந்தர் பெருமானோடு சொந்த ஊரில் சிவ வழிபாடு செய்தார், சொக்கலிங்கப் பெருமானை நாளும் வழிபட்டார்.மதுரை நின்ற சீர் நெடுமாறன் மன்னரிடம் அமைச்சராக இருந்தார். அப்போது மன்னனுக்கு வெப்ப நோய் கண்டு வருந்த குலச்சிறையார் ஞான சம்பந்தரை வரவழைத்து மன்னரை வெப்ப நோயிலிருந்து காப்பாற்றினார்.
அடியார்கள் ஒவ்வொருவராய் வந்தாலும் கூட்டமாக வந்தாலும் அவர்களை வணங்கி அன்பு குறையாமல் வேண்டியன வழங்கி தொண்டாற்றினார். ஆண்டவனைத்தவிர யாரையும் தனியாக பாடாத ஞானசம்பந்தர் குலச்சிறையாரை தம் பதிகத்தில் பாடியுள்ளதே அவரின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். பெருநம்பி எனப் பெயர் பெற்றார். அமைச்சராக பல்லாண்டு இருந்து அடியவர்களுக்குத் தொண்டு செய்து இறைவன் அடி சேர்ந்தார்.
26. கூற்றுவ நாயனார்
களந்தை என்ற ஊரில் கூற்றுவனார் என்ற அடியவர் வாழ்ந்திருந்தார். பகைவர்களுக்கு எமன் போன்று இருப்பதால் கூற்றுவர் எனப் பெயர் பெற்றார். சிறந்த வாள் வலியும் தோள் வலியும் பெற்று மாவீரராக விளங்கியவர். சிற்றரசராக இருந்து பல மன்னர்களை வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். தும்பைப் பூமாலையணிந்து வெற்றி பெற்றார் இப்பல்லவ மன்னர்.
சோழர்களின் மணிமுடி தில்லை கருவூலத்தில் இருந்தது. சோழமன்னர்களுக்கு தில்லைவாழ் அந்தணர்கள் முடிசூட்டுவார்கள். சோழநாடு தன் ஆளுகைக்கு கீழ் வந்தபடியால் கூற்றுவனார் தனக்கு முடி சூட்டும்படி தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டார். அவர்கள் சோழ மன்னரன்றி வேறு யாருக்கும் முடி சூட்டமாட்டோம் என்றனர். தீட்சதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மகுடத்தைக் கொடுத்து சேரநாடு சென்றனர். கூற்றுவனார் அதிகாரத்தைப் பயன் படுத்தி மகுடம் சூட்ட விரும்பவில்லை.
கூத்தபிரானிடத்தில் உன்னுடைய திருமுடியையே மணிமுடியாக சூட்டி அருள் புரிய வேண்டினார். இறைவன் அவரது கனவில் தோன்றி தலைமீது திருவடியைச் சூட்டி அருள் புரிந்தார். கூற்றுவனாரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரசு செல்வத்தை பெருமான் கருணையினால் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்து இறைப்பணிக்கும் அடியவர் பணிக்கும் பயன்படுத்தி தொண்டு செய்து இறையடி எய்தினார்.
27. கோச்செங்கட்சோழ நாயனார்
சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன் இராணியின் கருவில் திருவானைக்காவில் பெருமானுக்கு பந்தல் இழைத்து வழிபட்ட சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பேறு வேலை வந்தபோது இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூன்றுலகம் அரசாளும் என சோதிடர்கள் கூறினார்கள்.
அச்சொல் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கும்படி என் காலைப் பிணித்து தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துக என்று சொல்ல அவ்வாறே செய்து ஒரு நழிகை கழித்துக் ஆண் குழந்தை பிறந்தது. காலநீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையைக்கண்ட தாய் என் கோச்செங்காணானோ என அழைத்து உயிர் நீக்கினாள். மன்னன் குழந்தையை வளர்த்து உரிய பருவத்தில் மணிமுடி சூட்டி தான் தவநெறியை சார்ந்து சிவலோகம் சென்றான்.
அவ்வாறு பிறந்த கோச்செங்கட் சோழர் திரு அருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சைவத்திருநெறி தழைக்க நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டும் திருப்பணியை மேற்கொண்டார். வெண்ணாவல் மரத்தினூடே பெருமான் வீற்றியிருந்தருளும் நிலையில் அதனை கோவிலாக மாற்றினார். சோழநாட்டில் சிவபெருமான் திருக்கோவில்கள் பலவற்றை அமைத்து நிகழும் பூசனைக்கு பெரும் பொருள் வகுத்து செங்கோல் ஆட்சி நடத்தினார். தமிழ் நாட்டில் எழுபது மாடக் கோவில்களை அமைத்தார். திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடம் என்ற கோவிலைக் கட்டினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டுவித்து இறுதிவரை திருவடித்தொண்டு செய்து இறைவன் திருவடி அடைந்தார்.
28. கோட்புலி நாயனார்
திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளான் குடியில் கோட்புலியார் பிறந்தார். சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று வெற்றி பெற்று புகழடைந்தவர். மன்னன் தரும் நிதிக் குவியலை சிவபெருமானுக்கு திருஅமுதுக்குரிய செந்நெல் கொடுத்து மகிந்தார். நெல்லைக் குவித்து திருக்கோவில்களில் உள்ளபெருமான் அமுது படிக்கு அளித்து மகிழ்வார்.
ஒரு சமயம் மன்னன் ஆணைபடி போர்முனைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிவபெருமான் அமுது படிக்காக தாம் திரும்பி வரும் அளவும் போதுமான நெல் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது குடும்பத்தினரை அழைத்து இது சிவனுக்குரியது நான் திரும்பும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டினார்.
ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றத்தார்கள் அமுதுபடிக்காண நெல்லை இறைவனுக்கு படைக்காமலேயே எடுத்து உண்டனர். போர்முனையில் வெற்றி பெற்று மன்னன் கொடுத்த பொற்குவியலுடன் ஊருக்கு வந்தவர் சிவனுக்குரியதை எடுத்து சுற்றத்தார் நைவேத்தியம் செய்யாமல் உண்டதையறிந்து சினம் கொண்டு உறவினர்களை அழைத்து ஒவ்வொருவராய் வெட்டிக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையையும் வெட்ட வாளை ஓங்க காவலன் ஐயா இச்சிறுகுழந்தை என்ன செய்தது. கொல்லாதீர் என்றதற்கு இது உணவு உண்ணவில்லை. உணவு உண்ட அதன் தாயின் பாலை அருந்தியதுதான் குற்றம் எனக்கூறி வாளினால் வெட்டினார்.
சிவபெருமான் தோன்றி உன்வாளினால் வெட்டுண்ட சுற்றத்தினர் பாவத்தினின்றும் விடுபெற்று பொன்னுலகில் இன்புறுவர். நீயும் சிவபதம் அடைவாயாக என்றார்.
29. சடைய நாயனார்
திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
30. சண்டேசுவர நாயனார்
வேதங்களைத் தானம் ஈதல் ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும் ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர்கள் வாழும் ஊரான சேய்ஞலூரில் எச்சத்தச்சன்- பவித்திரை தம்பதிகளின் மகனாக விசாரசர்மா பிறந்தார். ஐந்து வயதினிலேயே வேதங்களின் உட்பொருளில் ஈடுபாடு கொண்டார். உள்ளத்தில் இருந்து சிவாகம உணர்வு வெளிப்பட்டது. ஏழு வயதில் உபநயனம் நடந்தது. வேதம் ஓதுப் பயிற்சியில் ஆசிரியர் கூறுமுன் அதன் பொருள் இவருக்கு விளங்கியது.
ஒருநாள் தன் நண்பனுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு பசுங்கன்றை ஈன்ற பசுவானது ஆயனை முட்டியது. சினம் கொண்ட அவன் அதை பிரம்பால் அடித்தான். அதனைக் காணப் பொறுக்காத விசாரசர்மா பசுவினைக் காத்தார். கருணையில்லாமல் பசுவை அடிக்கின்றாயே. இனிமேல் நானே மேய்க்கின்றேன் என்று தினமும் மேயவைத்து நீர்பருகச் செய்து மாலை அவரவர் இல்லத்தில் சேர்த்தார். பசுக்களும் நிறைய பால் கொடுத்தன. ஆநிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் மகிழ்வு அடைந்தனர்.
பசுவின் பாலைப் பார்த்ததும் சிவபூஜை செய்ய ஆசை ஏற்பட்டது, மண்ணியாற்றங்கரையில் வெண்மணலால் லிங்கம் அமைத்தார். மலர்களைச் சேகரித்து பசுவின் பாலால் திருமுழுக்காட்டி மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டார், இது நாளும் நடக்க ஒருவன் பார்த்து அந்தணர்களிடம் சொல்லிவிட்டான். ஊர்ச்சபை கூடியது. எச்சதத்தனிடம் அதைக் கூறி நடவடிக்கை எடுக்க முடிவுசெய்தனர்,
வழக்கம்போல் விசாரசர்மா மாடுமேய்க்கப் புறப்படார். எச்சதத்தன் பின் தொடர்ந்தார். விசாரசர்மா தன்னை மறந்து உலகியல் உணர்வு இன்றி வழிபட்டுக் கொண்டிருந்தார். மலர் பொய்து பால் ஊற்றி வழிபட்டார். எச்சதத்தன் தனது மகனை அடித்து பால் குடத்தையும் உடைத்தார், மணற் லிங்கத்தை உதைத்தார்.
உலக நினைவற்று வழிபட்ட அச்சிறுவர் சிவபூசைக்கு ஊறு விழைவித்ததைச் சகியாமல் அருகிலிருந்த கோலை எடுத்து வீச அதுமழுவாக மாறி அவர் தந்தையின் காலை வெட்டியது. சிவபெருமான் விடைமீது தோன்றி, ‘நம்பொருட்டு ஈன்ற தந்தையென்றும் பாராது மழு எறிந்தாய், நமே அடுத்த தந்தை, நாம் உண்பனவும் உடுப்பனவும் உனக்கே உரியது. உமக்கு சண்டீசன் எனும் பதம் தந்தொம்’ என அருள் செய்தார்.
31. சத்திய நாயனார்
கீழையூர் அருகிலுள்ள விரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தியர் பிறந்தார். அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில் தண்டித்தால் அப்பாவம் மறுமையில் தொடராது. அப்படி தண்டிக்காதிருப்பின் செய்த பாவம் ஒன்றுக்கு ஆயிரமாக வளர்ந்து மறுமையிலே துன்புறுத்தும். எனவே அதை முளையிலேயே களைவது நன்று.
அடியார் நிந்தனை செய்பவரை இம்மையிலேயே கருணை கொண்டு தண்டித்து வந்தார் சக்தியர். அடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து உரைப்பாரேல் அவர் நாவை குறட்டினால் பிடித்து இழுத்து கத்தியால் அரிவர். அதனால் அவர் சக்தியர் எனப்பட்டார். தன் திருத்தொண்டினை பல ஆண்டுகள் செய்துவந்து இறவன் அடி சேர்ந்தார்.
32. சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளன் குலத்தில் பிறந்தார் சாக்கியர். கல்வி கேள்விகளில் சிறந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவராயிருந்தார். எங்கே இருந்து வந்தேன், எங்கே போகிறேன், பிறப்பு, இறப்பு ஆகியவைகள் உள்ளத்தை குடைந்தன. சாதலையும் பிறத்தலையும் தவிர்க்க நினைத்தார். காஞ்சிநகர் சென்றார். நன்கு கற்றறிந்து அறிஞர் ஆனார். ஈர்ப்பால் சாக்கியமதத்தைச் சார்ந்தார். பின்னர் சிவநெறியே உயர்ந்தது எனச் சிந்தைக் கொண்டார். புறத்தே சிவ வேடம் மேற்கொள்ளவில்லை. சிவலிங்க வழிபாடு சிறந்தது. தெளிந்தது சாக்கியர் உள்ளம்.
தினமும் சிவலிங்கத்தைக் கண்டபின்னரே உணவு உண்பார். ஒர்நாள் வழியில் ஓர் சிவலிங்கம் இருக்க கண்டர். வழிபட நினைத்தார். மலர்கள் இல்லை. அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மலராக நினைத்து போட்டார், இறைவனும் கல்லை மலராக்கி ஏற்றுக்கொண்டார். அடுத்தநாள் அங்கு வந்தவர் முதல் நாள் நான் ஏன் அப்படி நடந்தேன். ஈசன் செயல். அதேபோல் இன்றும் செய்வேன் என மீண்டும் செங்கல்லால் பூஜித்தர். அன்பு நெறியால் தொண்டர்கள் செய்யும் செயல் இறைவனுக்கு உகந்த பூசையாகிறது.
ஒருநாள் வழிபடமறந்து உணவு உண்ண அமர்ந்தார். அப்பொது கல்லெறியாமல் சாப்பிடுகிறோமே எனக்கூறி எழுந்தார். கல்லை எடுத்துக் கொண்டு பேரன்புடன் ஓடிவரும் சாக்கியர்முன் சிவலிங்கம் இருக்க வில்லை. உமாதேவியருடன் சிவன் இருந்து அருள் புரிந்தார். சாக்கியர் சிவலோகம் அடைந்தார்.
33. சிறப்புலிய நாயனார்
திருஆக்கூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சிறப்புலி பிறந்தார். தன்னிடம் உள்ள பொருள்கள் யாவும் சிவன் தந்தது என எண்ணி அடியவர்கள் கேளாமுன்னமே அடியவர்கட்கு கொடுத்து மகிழ்பவர். அடியவர்களிடமும் ஆண்டவனிடமும் அளவற்ற பக்தி கொண்டு பல திருத்தொண்டுகள் செய்து வந்தார்.
பக்தியின் முதற்படி தம்மிடம் இருப்பதை பிறர்க்கு கொடுப்பதே. சிறப்புலியார் தன்னை நாடிவந்தவர்களுக்கு எல்லாம் மாரிபோல் வாரி வழங்கும் தன்மையர். ஆதி மந்திரமாகிய ஐந்தெழுத்தோதி சிவவேள்வி செய்பவர். சிவ புண்ணியங்கள் பல செய்து இறைவன் இதயத்தில் நிறுத்தி அடியவர்பால் அன்பு கொண்டு அவர்கட்கு வேண்டியன வேண்டியாங்கு கொடுத்து அம்பலவாணர் திருவடி நிழலில் கலந்தார்.
34. சிறுத் தொண்ட நாயனார்
திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபிலே பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி நூல்களையும் மருத்துவ நூல்களையும் கற்று விளங்கினார். யானை எற்றம், குதிரை ஏற்றம், வாட்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனை நாளும் வணங்கி வந்தார். அவர் சோழநாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் போர்த்தளபதியாய் இருந்தார்.
இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வென்று அங்கிருந்து பொன்னும் மணியும், யானைகளையும் குதிரைகளையும் கொணர்ந்தார். நரசிங்கவர்மனின் அன்பிற்கு உகந்தவரானார். அவர் வீரர் மட்டுமல்லாமல் சிறந்த சிவபக்தராகவும் இருப்பதால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று அனைவரும் கூறியதைக் கேட்ட மன்னன் அவருடைய பெருமை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. சிவனடியாரை போர்முனைக்கு அனுப்பினேனே என வருத்தமுற்று இனி நீங்கள் என்னிடம் பணி செய்யலாகாது. நிறைந்த நிலங்களையும் நிதிகளையும் பொன்னும் நவமணியும் கொடுத்து தங்கள் ஊர் சென்று விரும்பிய வண்ணம் தொண்டு செய்யுங்கள் என அனுப்பினார். பரஞ்சோதியார் திருச்செங்காட்டாங்குடி வந்தார்.
வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டை தன் வெற்றிச்சின்னமாக விநாயகரைப் தமிழகத்திற்கு கொண்டுவந்து கணபதி ஈச்சுவரம் என்று தலம் நிறுவி விநாயகரை நிறுவினார். திருவெண்காட்டு நங்கை எனும் பெண்ணை மணம் புரிந்தார். இல்லறம் இனிது நடந்தது. அடியவர்களிடம் மிகவும் அடக்கமாய் வழிபடும் பண்பினர், அதனால் அவரை சிறுத்தொண்டர் என அழைத்தனர். அடியவர்களை அழைத்துவந்து அவருக்கு திருஅமுது அழித்து பின்னேதான் உண்ணும் பழக்கம் மேற்கொண்டார்.
அவர்க்கு சீராளன் என்றமகன் பிறந்தான். ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர் வீட்டில் சிலநாள் தங்கியிருந்தார். சிறுதொண்டருடைய அன்பை நுகர்வதற்கு சிவன் பைரவர் கோலத்தில் வந்தார். அன்று அடியார் யாரும் இல்லத்திற்கு வராததால் சிருத்தொண்டர் அடியாரைத்தேடி வெளியில் சென்றார். அப்போது பைரவர் அவர் வீட்டிற்கு வந்தார். அவரது துணைவியார் என்ன சொல்லியும் கேளாமல் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். நான் வடநாட்டிலிருந்து அவர்பெயர் கேட்டு வந்தேன். கணபதி ஈச்சுவரத்தில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருகின்றோம். அவர் வந்தால் கூறுவீர் என்றார்.
அடியவர் யாரும் காணமல் வீடு வந்த சிறுத்தொண்டர் விபரம் அறிந்து கணபதி ஈச்சுவரம் அடைந்து பைரவர் காலில் வீழ்ந்து வணங்கினார். வீட்டில் அமுது உண்ண அழைத்தார். பைரவர் எனக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தான் பசு உண்ணுவது. அந்த நாள் இன்றுதான். நான் உண்ணும் பசு ஐந்து வயதிற்கு உட்பட்ட மனிதப்பசு என்றார். அதுவும் ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாய் இருக்க வேண்டும். தாய் பிடிக்க தந்தை அறிய வேண்டும். இருவரும் மனம் உவந்த கறியைத்தான் நாம் உன்பது என்றார். அடியார் அமுது உண்ண இசைந்தாரே என்ற மகிழ்வில் எதுவும் அரியது இல்லை என்றார்.
இல்லம் வந்தார். பைரவர் என்ன சொன்னார் எனக்கேட்டார் துனைவியார். அனைத்தும் சொல்லி சிறுதொண்டர் தம் மகனை அழைத்தார். அணிகலன் அணிவித்து முத்தம் இடப்போனாள் துனைவி. தடுத்தார் தொண்டர். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராள தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்றார். தாதியர் கறியைப் பலவேறாக சமைத்தனர். பைரவரிடம் சென்று அவர் விருப்பப்படியே பசு தாயாரக இருக்கின்றது என்றார்.
பைரவரை ஆசனத்தில் இருத்தி மலர் சார்த்தி பாதப்பூசை செய்தார். பின் அமுது உண்ண அழைத்தார். பைரவர் சிறுதொண்டரே நான் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் சுவையாக கறிசமைத்தீரா என்று கேட்டார். நங்கையார் தலக்கறி அமுதுக்காகாது என கழித்தோம் என்றார். பைரவர் அதுவும் நாம் உண்பேம் என்றார். சிறுத்தொண்டரும் மனைவியாரும் சிந்தை கலங்கி திகைத்து அயர்ந்தனர்.
தாதியர் அதையும் தாம் சமைத்தோம் என கொண்டு வந்தார். அப்போது தனியாக சாப்பிடமுடியாது யாரேனும் அடியார் இருந்தால் கூப்பிடுங்கள் என்றார். அடியார் கிடைக்காமல் வருத்தப்பட்டவருக்கு இன்று என்னதான் சோதனையோ. நானும் ஓர் அடியார் எனக்கூற, சரி அப்படியானல் இவருக்கும் ஓர் இலைபோடச் சொன்னார். வந்த பைரவர் இன்னும் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடக்கூடாதே என்ற எண்ணத்தால் சிறுத்தொண்டர் விரைவாக சாப்பிட உட்கார்ந்தார். சிறுத்தொண்டரே ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடும் எனக்கு முன் நீர் உன்பது முறையோ என்றார். நாம் தனியாக எப்படி உண்பது. முன்பு நான் பார்த்த உம் மைந்தனை அழையுங்கள் உடன் வைத்து உண்ணலாம் என்றார்.
சிறுதொண்டர் மிகவும் தளர்ந்தார். பிள்ளையைத்தான் கறி சமைத்தேன் என்றால் அடியவர் அமுது செய்வாரோ மாட்டாரோ புரியவில்லை. ஏதாவது பொய் சொல்லவும் மனமில்லை. எனவே அவன் இப்போது உதவான் என்றார். பைரவர் தாம் இங்கு உணவு உண்பது அவன் வந்தால்தான் போய்க்கூப்பிடும் என்றார். கணவன் மனைவி இருவரும் வாயிற்புறத்தே சென்று என் செய்வது என்று புரியாமல் மகனே சீராளா வருவாய் என்று அழைத்தனர். அடியவர் அமுது உண்ண அழைகின்றோம் வா என்றனர்.
எம்பெருமான் அருளாளே பள்ளியிலிருந்து ஓடிவருபவன்போல் வந்த சீராளதேவரை தூக்கி கணவரிடம் கொடுத்தார். மகனைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் பைரவரைக் காணாமல் திகைத்தார். கலத்தில் இருந்த கறியமுதம் ஒன்றுமில்லை. அப்போது விடைமீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிகொடுத்தார்.
35. சுந்தரமூர்த்தி நாயனார்
திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். எப்போதும் போல் நந்தவனத்திற்கு மலர் கொய்யச் சென்ற சுந்தரர், உமையின் சேடியர்களான கமலினி, அனிந்தை இருவரும் பூக்கொய்ய வந்து திருப்பும்போது சுந்தரர் காட்சியில் வந்தனர். மனத்தைப் போக்கிய சிவனே மாதர்மேல் மனம் வைத்தனை என்று கூறி அந்த பெண்களுடன் காதல் இன்பம் களித்துவர பணிந்தார். இறைவனைப் பிரிய மனமின்றி வேறு வழியில்லாததாலும் இறைவா, உன் ஆணைப்படி மண்ணுலகில் பிறக்கின்றேன், உலகம் மாய அறிவு கொண்டது. உலக மயக்கத்தில் நான் இருக்கும்போது எனைத் தடுத்து ஆட் கொள்ளவேண்டும் என வேண்டி சிவனின் அருள் பெற்றார்.
மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருக்க ஒரு பெரியவர் வீட்டில் படுத்திருந்தார். அப்போது ஒரு குரல் மழை அதிகமாக இருக்கின்றது உள்ளே வரலாமா என்றது. அந்தப் பெரியவர். ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம், உள்ளே வாருங்கள் என்றார், அந்தச் சமயம் இன்னொரு குரல் உள்ளே வரலாமா என்றது. அவ்விருவரும் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம் வாருங்கள் என்றனர். என்னே அன்பு. மனித நேயம். அப்போது நான்காவதாக ஒருவர் தோன்றி மூவரையும் நெருக்கினாராம். மூவரில் ஒருவர் விளக்கேற்றிப் பார்க்க நாராயணன் சங்கு சக்ரதாரியாக அங்கு இருக்க கண்டனர். இவர்கள் வழிபாடு நடத்திய மண்டலம், நாடு நடுநாடு.
அந்த நடுநாட்டில் திருநாவலூரில் வாழ்ந்த ஆதிசைவக் குடும்பத்தின் சடையனார் – இசைஞானியார் ஆகிய இருவரின் மகப்பேறு வேண்டிய தவத்தினால் சிவன் அருளால் திரு அவதாரம் செய்தார் ஆலால சுந்தரர். சேடியர்களில் கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் பிறந்தார். அனிந்தை ஞாயிறு என்ற ஊரில் வேளாள குலத்தில் பிறந்தார்.
சடையானாரும் இசைஞானியாரும் தம் குழந்தைக்கு நம்பியாரூரர் எனப் பெயர் வைத்து அன்பைக் கொட்டி வளர்க்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை பேரழகு உடையவனாக வளர்ந்தது. ஒருநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழி சென்ற மன்னன் குழந்தையின் அழகில் மயங்கி தனக்கு அக்குழந்தையை மகனாகக் கொடுக்க வேண்டினார். அந்த வேண்டுகோள் சடையனாரின் மனத்தைக் கரைத்துவிட நம்பியாரூரர் சுவீகாரம் மூலம் மன்னர்மகன் ஆனார், பெறாமல் அன்பினால் மகமை கொண்டார் நரசிங்கமுனையர் என்ற அந்த மன்னன்.
அரண்மனையில் வளர்ந்தாலும் அந்தனர்குரிய முறைகளையும் பயின்றார் நம்பியாரூரர். அந்தக்கால முறைப்படி 16 வயதினில் அவருக்கு அந்தனர் வழியிலே பெண் பார்த்து குணநலன் மிக்க சடங்கவி என்ற அந்தணன் இல்ல மகளை பேசி மணம் முடிக்க முடிவாயிற்று. ஆயிரம் பேரைப் போய் விசாரித்துப் பேசி திருமணம் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப விசாரனை முடிந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
ஆரூரருக்கு மங்கல நீராட்டு நடைபெற்று குதிரை ஏறி வலம் வந்து மணமேடையில் அமர்ந்ததும் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்த்தனர். மணப் பெண் மேடைக்கு வரும் வேளையதில் ஒரு பெரியவர் நெற்றியிலே திருநீற்றுடன் கழுத்திலே உருத்திராசமாலையுடன் கைத்தடியூன்றி மேடையருகினில் வந்தார். அக்கூடத்தில் இருந்தவர்கள் அனைவரின் பர்வையையும் அவர் கவர்ந்தார். அவர்கள் இதுவரை இளமைதான் அழகு என எண்ணியவர்கள். இப்போது ஒரு முதியவர் தோற்றம் அதைவிட அழகாக இருக்க கண்டு வியந்தனர். முதுமையே பேரழகு என்றனர்.
அப்போது அந்தப் பெரியவர் மேடை அருகே நின்று நான் சொல்லுவதைக் கேளுங்கள் என்றார். மேளதாள ஓசை முதல் அனைத்தும் நின்றது. எல்லோரும் அவரையே பார்த்தனர். அவர், மணமகனைப் பார்த்து ஆரூரா, உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்ளது. அதனை முடித்துவிட்டு திருமண வேள்வியைச் செய் என்றார். மேலும் திருநாவல்நகர் ஆரூரர் என் அடிமை என்பதுதான் என் வழக்கு என்றார். உலகத்தில் இல்லாத செய்தியாக, குற்றமற்ற அந்தணர்கள் வேறு ஒரு அந்தணருக்கு அடிமை என்று சொல்லும் முதல் ஆள் நீ, இதனை நம்ப மாட்டேன் என ஆரூரர் தெரிவிக்க பெரியவர் அதற்கான அத்தாட்சி இதோ அடிமைச்சீட்டு என காண்பிக்க, அதைக் கைப்பற்ற ஆரூரர் பெரியவரை மணவறையைச் சுற்றி துரத்தி அதைப் பற்றி கிழித்துவிடுகிறார்.
ஒருவரிடம் உள்ள ஓலையை வாங்கி அதை மற்றவர்கள் படிக்குமுன் கிழிப்பது தர்மமா. என்றும் ஓலையைக் கிழித்ததனால் அடிமை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்றார் பெரியவர். ஊர் பெரியோர்கள் பெரியவரின் சொந்த ஊரான வெண்ணெய் நல்லூருக்குச் சென்று அங்கு அவையில் பேசலாம் என முடிவெடுத்தனர்.
வெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தில் ஆரூரரின் உறவினரும் இரண்டு ஊர் பெரியவர்களும் வந்திருந்தனர். நாவலூர் ஆரூரன் என் அடிமை என்று நான் காட்டிய ஓலையை கிழித்து விட்டான். இதுதான் என் வழக்கு என்றார் பெரியவர். அந்த மன்ற நடுவர் அந்தணரே, அந்தணர் அடிமை என்பது இம்மாநிலத்திலேயே இல்லாத ஒன்று நீர் கூறுவது புதுமையாக இருக்கின்றது என்றார். ஆரூரன் என் மனத்திற்கு எட்டாத மாயையாக இருக்கின்றது இவர் கூற்று என்றார். நடுவர், பெரியவரே நீங்கள் சொல்வதற்கு எந்த சாட்சியும் இல்லை, ஆதாரமும் இல்லை, எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது என்றனர்.
பெரியவர் இவன் கிழித்தது படி ஓலை. மூலம் மடியில் வைத்துள்ளேன். எனக்கு பதுகாப்பு தருவதாக இருந்தால் அதைக் காண்பிக்கின்றேன் என்றார். அவையோர் உறுதியளிக்க அவர் காட்டிய ஒலையைப் படித்து அப்போது அதில் சாட்சியிட்டிருந்தோர் அது தம் கையெழுத்து என ஒப்புதல் அளிக்க. ஆரூரர் அது தன் பாட்டனார் கையெழுத்து என ஒப்பு நோக்கிச் சொல்ல நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
நம்பியாரூராரே நீர் தோற்றீர். அவர் இடும் பணியை ஏற்று அவர் சொல்வழி செயல்படுவது உன் கடன் என்று தீர்ப்பு வழங்கினர். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் பெரியவரே நீங்கள் இந்த ஊர் என்கிறீர்கள் உங்களை நாங்கள் பார்த்தது கிடையாது யாது உங்கள் வீடு என்றனர். அப்பெரியவர் என்னை யாரும் அறியவில்லையெனில் என்பின்னே வாருங்கள் என் வீட்டை காட்டுகிறேன் என முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.
திருவெண்ணெய் நல்லூரில் உள்ளே திருக்கோவிலான திருவருட்துறை கோவிலை அடைந்தார் பெரியவர். உள்ளே சென்று மறைந்தார். ஆரூரர் உட்பட பின் தொடர்ந்து வந்தவர்கள் திகைத்தனர். வான்வழி ஓர் ஓசை எழுந்தது.
மற்று நீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்பெற்றனை நமக்கும் அன்பிற்பெருகிய சிறப்பின் மிகக்அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்செந்தமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார்.
வேதங்களை எந்த வாயால் பாடினாரோ அந்தத் திருவாயால் ஆரூராரைப் பார்த்து ‘எமக்கு விருப்பமான வழிபாடு அர்ச்சனைப் பாட்டேயாகும்’. எனவே நம் செந்தமிழால் பாடு. என்னிடம் வன்மை பேசி வந்த நீ வந்தொண்டன் என்னும் நாமம் பெற்றாய் என்றது அவ்வோசை. என்ன சொல்லிப் பாடுவேன் என்ற ஆரூராருக்கு பித்தன் என்று சொல்லிபாட அருள் பிறந்தது. முதல் பாடல்
பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளாஎத்தா மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைவைத்தாய்ப் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
என்னைக் கோவில் தோறும் சென்று பாடுக என்ற அருள் வாக்கிற்கேற்ப பல தலங்களையும் வழிபட்டு அதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
அது அப்பரடிகள் சூலைநோய் தீர்த்த தலம். அப்பரடிகள் உழவாரப்பணி செய்து பல காலம் இருந்த தலம். இதை தாம் மிதிக்கலாகாது என்று ஊர் எல்லையில் உள்ள சித்தவட மடத்தில் மற்ற அடியார்களுடன் தங்கினார். நள்ளிரவு 2 மணியளவில் நம்பியாரூரார் தலைமேல் ஒரு பெரியவர் கால் நீட்டி உதைத்தார். அய்யா பெரியவரே என் தலைமீது தாங்கள் கால் நீட்டுவது ஏன் என்றார். வயது முதிர்ந்துவிட்டது எந்த திசையில் கால்வைப்பது எனத் தெரியவில்லை எனது மூப்பினால் என்றார். ஆரூரர் வேறு இடத்தில் படுத்தார். சிறிது நேரத்தில் அதே பெரியவர் மீண்டும் காலால் எட்டி உதைத்தார். ஆரூரார் பெரியவரே என் முடிமீது கால் வைக்கின்றீரே என்றார். பெரியவர் பழைய பதிலான திசையறியா வகை செய்தது மூப்பு என்றார். இது அதிகாலை நாலரைமணி வரை நடைபெற்றது. ஆரூரர் சலிப்புற்று என்னை பலகாலும் மிதித்தனை நீர் யார் எனக் கேட்க என்னை அறிந்திலையோ என்று மறைந்தார் பெரியவர். அப்போதுதான் அது சிவன் என உணர்ந்தார். அடியார் திருக்கூட்டச் சாதியைச் சார்ந்த நான் அதன் தலைவனாகிய இறைவனை உணாரவில்லையே என மனம் நொந்து ‘தம்மானையறியாத சாதியர் உளரோ’ எனப்பாடினார்.
தில்லையில் கண், தாது, மூக்கு, செவி, வாய் ஆகிய ஐந்து பொறிகளும் கண்ணிலே நிலைத்து நிற்க வழிபட்டார் ஆரூரர். அந்தக் கராணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் சிந்தையிலே லயிக்க வழிபட்டார். தில்லையிலிருந்து புறப்பட்டு சீர்காழி சென்றார். ஞான சம்பந்தம்பிள்ளை திரு அவதாரம் செய்த ஊர்மண்ணை காலால் மிதிக்கக்கூடாது என எண்ணி ஊர் எல்லையில் தங்கியிருந்து சிவனை வழிபட்ட ஆரூரருக்கு வழியிலே கயிலைக் காட்சியைத் தந்தார் இறைவன். பின் திருவாரூரை நோக்கி சென்றார். அன்றிரவு அடியார்கள் கனவில் பெருமான் தோன்றி ஆரூரன் நாம் அழைக்க இங்கு வருகிறான். அவனுக்கு வரவேற்பு செய்யுங்கள் எனப் பணித்தார். ஊர் எல்லையில் அடியார்கள் பெரும் கூட்டமாக சென்று வரவேற்றனர். அங்கு சில நாட்கள் தங்கி காலையும் மாலையும் வழிபாடு செய்தார்.
ஆரூர் பெருமான் தோழமையாக தம்மை ஆரூரருக்குத் தந்தோம் என்று சொன்ன செய்தி அறிந்த அடியார்கள் நம்பியாரூரரை ‘தம்பிரான் தோழர்’ எனப் புகழ்ந்தனர். அம்பிகையின் சேடியான கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றியவருக்கு இப்போது பரவையார் எனப் பெயர். அவர் இறைவனுக்கு மலர்மாலையை கொண்டுவரும்போது ஆரூரரைப் பார்த்தார். ஆரூரர் அன்று இரவு பரவையரை நினைத்திருந்தார். அதேபோல் பரவையரும் ஆரூரரை நினைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அடியவர்கள் கனவில் தோன்றிய இறைவன் பரவையை நாம் ஆரூரனுக்குத் தந்தோம். அவர்களுடைய திருமணத்தை நடத்துங்கள் என்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இன்பத்தில் திளைத்தனர்.
எப்போதும்போல் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கச் சொல்லும் போது மண்டபத்தில் அடியார்கள் கூடி பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொண்டு செய்வது எப்போது என்று சிந்தித்துக் கொண்டு சுற்றி வரும் ஆரூரைக் கண்ட விறன்மிண்டர் அடியார் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவர் யார் என்றார். ஓலைகாட்டி அடிமையானவர் என்றனர். அடியவர் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவரை திருக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். அருகிலிருந்தவர்கள் அவர் புற்றிடம் கொண்டவருக்கு மிகவும் வேண்டியவர் என்றனர். அப்படியானால் அவரையும் விலக்கி வைக்கின்றேன் என்றார்.
அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே “தில்லைவாழ் அந்தணர்” என்றார்.ஆரூரர் குறிக்கோள் ‘யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்’ என்பதே.
அந்தணர் ஒரு சாதியில் தோன்றியவர் என்று யவரும் இல்லை. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்- அறத்தன்மை பூண்டு எவ்வுயிரும் ஈசன் கோயில் என்று எண்ணி வாழ்வோரே அந்தணர். சத்திய வாழ்வைக் கடைப்பிடிப்பதே அந்தணத் தண்மை.
நம்பி ஆரூரர் அரனையும் அரனடியாரையும் வழிபட்டு பரவையாரோடு இல்லறம் இனிது நடத்திவந்தார். ஆரூர் அருகில் உள்ள குண்டையூரின் குண்டையூர்கிழார் ஆரூரர் பால் கொண்ட அன்பினால் அவருக்கு வேண்டிய நெல்லை அளித்துவந்தார். வறட்சியால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆரூரருக்கு எப்படி நெல் அனுப்புவது என வேதனைப்பட்டார். உணவு உண்ணாது இருந்தார். அவர் கனவில் இறைவன் தோன்றி ஆரூரான் பொருட்டு நெல் கொடுத்தோம் என அருள் பாலித்தார். காலயில் எழுந்து பார்த்தபோது இருந்த நெல்மலையை எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது என் குழம்பி ஆரூர் சென்று நடந்ததை ஆரூரரிடம் சென்னார். ஆரூரர் நெல் மலையைப் பார்த்து இது மனித முயற்சியால் கொண்டு செல்ல முடியாது என்று அருகில் உள்ள கோளிலி இறைவனிடம் ஆள் வேண்டி பாட இறைவனும் அன்று இரவு பரவையார் மாளிகை இருந்த வீதிக்கு தம் பூதகணங்களின் மூலம் எல்லா நெல்லையும் கொண்டு சேர்த்தார்.
நெல் மலையைக்கண்டு அதிசயத்து பரவையார் அடியவர்களிடம் உங்கள் மனை எல்லைக்கு உட்பட்ட நெல் குன்றெல்லாம் அவரவர் வீட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவிப்பை செய்தார். சில நாட்களிந்து ஆரூரர் திருநாட்டியத்தான் குடி என்ற ஊருக்குச் சென்றவரை கோட்புலி என்ற அடியவர் எதிர்கொண்டு அழைத்து கோவிலில் வழிபாடு நடத்தினார். கோட்புலியார் ஆரூரரை வணங்கிய சிங்கடி, வனப்பகை என்ற தம் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டினார். நம்பிஆரூரர் கோட்புலியாரே அவர் இருவரையும் என் மக்களாக ஏற்றுக் கொண்டோம் என்றார். அங்கிருந்து திருவையாற்றுப் பெருமானை வணங்கி திருஆலம்பொழில் சென்று இரவு தங்கினார். இரண்டு தலங்களுக்கிடையில் உள்ள வயிரத்திருமேனிகொண்ட திருமழப்பாடி இறைவன் கனவில் என்னைப் பாட மறந்தனையே என்றார். திடுக்கிட்டு விழித்தவர் மெய்யுருகிப் பதிகம் பாடினார்.
வலிவலம் சென்று பதிகம் பாடுமுன் ‘நான் பாடுகிற பாடல் எதுவானாலும் நானாக சொன்னதில்லை, எனக்குமுன் வாழ்ந்த நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் சொல்லியதே’ எனச் சொல்லி பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாரூர் வந்து உத்திரத் திருவிழாவிற்கு பொருள் வேண்டி திருப்புகலூர் சென்று வழிபாடு செய்து கண் அயர்வில் அங்கிருந்த செங்கல்லை தலைக்கு அனையாக வைத்து படுத்தார், எழும்போது அச்செங்கல் தங்கமாக மாறியிருந்தது,
சிலநாட்கள் சென்றபின் திருச்சி நகர் வந்தார். திரு ஆனைக்கா சிவனை வழிபட்டார். சோழமன்னன் காவிரியில் குளிக்க மூழ்கியபோது அவனுடைய இரத்தின மலை நீரிலே காணாமற்போனது. கவலைப்படாமல் அது சிவனுக்குரியது என்றார். அப்போது சிவனை காவிரியில் இருந்து கொணர்ந்த நீரால் குளிப்பாட்ட மன்னன் சிவனுக்குரியது என்றமாலை சிவன் கழுத்தில் இருந்தது. அது பற்றி பதிகம் பாடினார். அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று கோவிலில் பெருமானை பாடி வழிபட்டார். உத்திரப் பெருவிழாவில் அடியார்க்கு அமுது படைக்க பொருள் தேவை என வேண்ட இறைவன் பதினாறாயிரம் பொற்காசுகளைத் தர அவற்றை என்னாலே எடுத்துக் கொண்டு போகமுடியாது நீங்களே அங்கே கொடுங்கள் என்றார் ஆரூரர். பெருமான் திருமுத்தாற்றிலே போட்டு திருவாரூர் குளத்திலே எடுத்துக் கொள் என்றார்.
பெருமான் கொடுத்ததில் மச்சம் பார்க்க கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை ஆற்றில் போட்டார். திருவாரூர் சென்றார். பரவையார் கேட்டார். பணம் காலையில் வரும் என்றார். காலை வந்தது. குளித்தார். வழிபாடு முடித்து குளக்கரைக்கு பரவையருடன் வந்தார். குளத்தில் மூழ்கி தேடினார். தேடிக்கொண்டே இருந்தார். மாலையாயிற்று, பரைவையார் இன்னும் என்ன குளத்தில் தேடுகின்றீர்கள் என்றதற்கு திருமுத்தாற்றில் போட்டேன் திருவாரூர் குளத்தில் எடுப்பேன் என்றார். பரவையார் ஆற்றில் போட்டு குளத்தில் எடுப்பது என்பதையா என்றார். அதை வைத்தே பதிகம் பாடினார், தான் மச்சம் பார்க்க எடுத்துவைத்தது தவறு என்றாலும் நீ இவ்வாறு செய்யக்கூடாது என்று பாட அருள் பெற்று காசு எடுத்து திருவிழாவில் அடியவர்க்கு அமுது படைத்து இன்புற்றார்.
பெருவிழா முடிந்ததும் தம் தல பயணத்தை அன்பர்களுடன் துவக்கி திருக்கருகாவூர் சென்றார். காலை முதல் உண்ணாமையால் மிகவும் களைபடைந்தனர். வழியில் ஒரு பெரியவர் என் பின்னால் வாருங்கள் என அழைத்து அவர்கொடுத்த கட்டமுதையும் நீரையும் சுவைத்து தங்கள் பசியையும் தாகத்தையும் போக்கினர். அனைவரும் கண்ணயர்ந்தனர். திடிரென்று வெயில் பட்டதும் விழித்தால் சோலையும் தெரியவில்லை பந்தலையும் காணோம் பெரியவரையும் காணோம். இத்தனை மாற்றம் நடந்தும் தெரியாமல் போனேனே என ஒரு பதிகம் பாடினார். பலதலங்களை வழிபட்டு திருக்கச்சூர் மலைக்கோவில் உள்ள மருந்தீசரை வணங்கி வெளியில் அமர்ந்திருந்தார். உணவு சமைப்பவர் வராததால் பசியுடன் இருந்தவர் முன்னால் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் பல இல்லங்களில் இரந்து வந்திருக்கின்றேன் என அமுது ஊட்டினார். அங்கிருந்து காஞ்சி சென்று வழிபட்டு திருவொற்றியூர் சென்றார்.
மாந்தாதா என்ற சிவபக்தர் இமயம் முதல் குமரிவரை பல அறநிறுவனங்களை நிறுவியதன் விளைவாக அவரின் வாழ்நாள்கூட அவரின் வாரிசுகள் இறந்தும் இவர் பன்னெடு நாள் வாழ்ந்தார். அது சலிப்பை ஏற்படுத்த அறிஞர்களை வரவழைத்து ஆலோசனை புரிய அவர்கள் மாந்தாதா செய்த அறங்களையெல்லாம் ரத்து செய்து பத்திரம் எழுதிக்கொடுத்தால் இறந்து விடுவீர்கள் என்றனர். பத்திரம் எழுதியாயிற்று. அன்று இரவு இறந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் படுக்கச் சென்றார். எதுவும் நடக்கவில்லை. பத்திரத்தை பெரியோர்கள் எடுத்து பார்த்தபோது அவர் செய்த அறங்கள் எல்லாம் திருவொற்றியூர் நீங்கலாக என எழுதியிருந்தது கண்டனர். எழுதும்போது திருவொற்றியூர் நீங்கலாக என எழுதவில்லை. அப்படியானால் திருவொற்றியூர் பெருமான் அதைச் சேர்த்துள்ளார். மாந்தாதா இறப்பை அப்போதைக்கு இறைவன் விரும்பவில்லை எனத் தெரிந்தது. இறவன் எழுத்து அறியும் பெருமான் ஆனார்.
அருகில் உள்ள ஞாயிறு என்ற தலத்தில் ஞாயிறுகிழார் என்பவரின் மகள் சங்கிலியார் பருவமடைந்தார். கயிலையில் உமாதேவியரின் சேடிகளில் ஒருவரான அனிந்ததான் இவர். பெற்றோர் அவருக்கு மணமுடிக்க விரும்பினர். அவரை மணம்பேச வந்தவர் இறந்ததால் அந்தச்செய்தி ஊரெங்கும் பரவியது. இறையருள் பெற்ற ஓர் அடியாரைத்தான் மணப்பேன் என்ற சங்கிலியார் விருப்பத்திற்கேற்ப கோவில் அருகே ஒர்வீடு அமைத்துக் கொடுத்தனர். அங்கிருந்து காலையும் மாலையும் வழிபட்டு இறைவனுக்கு மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த நம்பி ஆரூரர் சங்கிலியரைப்பார்க்க அவரும் ஆரூரரைப் பார்த்தார்.
பண்டைவினை தொடர அவரை மணம் செய்ய விரும்பிய ஆரூரர் இறைவனிடம் சென்று வேண்டினர். இறவன் உறுதியளித்தார். சங்கிலியர் கனவிலே வேதியராகச் என்று ஆரூரான் உன்னை மணக்க விரும்புகிறான். நீ உன் சம்மதத்தை கொடு என்றார். சங்கிலியார் அவர் திருவாரூரில் வசிப்பவர் என்றார். இறைவன் ஆரூரா உன்னை விட்டு பிரியேன் என்று ஓர் சத்தியம் செய்வாயானால் நீ அவளை மணந்து கொள்ளலாம் என்றார். ஆரூரர் தலயாத்திரை செய்யும்போது இந்த ஆணை இடையூறாக இருக்கும் என்பதால் பெருமானிடம் சங்கிலியாருக்கு நான் உறுதி செய்யும்போது கருவரையில் உன்திருமேனி இருக்காமல் கோவிலின் புறத்தே உள்ள மகிழமரத்தடியில் இருங்கள் என்றார். அங்கிருந்து புறப்பட்டு சங்கிலியார் கனவில் தோன்றி சங்கிலியாரே நீர் கேட்டவண்ணம் என்நண்பன் ஆரூரர் தரும் ஆணையை நீ என்முன் திருக்கோவிலில் பெறவேண்டாம். மகிழமரத்தடியில் பெற்றுக்கொள் எனக்கூறி மறைந்தார்.
காலையில் எழுந்து சங்கிலி நாச்சியார் இரவு நடந்ததை தன் தோழியரிடம் கூறி கோவில் பணிக்குத் தயாரானார். சுந்தரர் கோவிலுக்கு வந்தார். சிவனின் அருளால் தான் உறுதி செய்து தறுவதைக்கூற தோழியர்கள் ஆணையை மகிழமரத்தடியில் செய்யுங்கள் என்றனர். அப்போதுதான் ஆரூரரருக்கு இறைவன் செய்த சூழ்ச்சி புரிந்தது. வேறுவழியில்லாமல் மகிழமரத்தடியில் உறுதி செய்தார். அடியவர்கள் கனவில் தோன்றி சங்கிலியருக்கும் சுந்தரருக்கும் மணமுடிக்க கட்டளையிட்டிருந்ததால் மணம் சிறப்பாக நடைபெற்றது. இல்லறம் இனிது நடந்தது.
வேனிற்காலம் தொடங்கியது. ஆரூரரருக்கு திருவாரூரின் உத்திரப்பெருவிழா நினைவு வந்து அந்த நினைவாக பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாருரை நோக்கிப் புறப்பட்டார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் சுந்தரரின் கண்பார்வைபோனது. கண்ணுக்கு மருந்து கொடு என திருவொற்றியூர் பெருமானிடம் பதிகம் பாடினார். அடியவர்களின் துணையோடு திருவாரூர் செல்லும் வழியில் திருமுல்லைவாயிலில் பதிகம் பாடி திருவெண்பாக்கம் சென்று பதிகம் பாடினார். அங்கு கருவரயிலிருந்து அவருக்கு ஓர் கைத்தடி வந்தது. அங்கிருந்து திருஆலங்காடு, திருவூரல் தலங்களை வழிபட்டு காஞ்சி ஏகாம்பரை வழிபட்டார். ஏகம்பத்து ஈசன் அவருக்கு இடதுகண் பார்வை கொடுத்தார். திருஆமத்தூர் தலத்தில் வழிபாடு செய்தார். அங்கிருந்து திருஅறத்துறை திருஆவடுதுறை திருத்துருத்தி தலங்களுக்குச் சென்று பதிகம்பாடி வழிபட்டார். அப்போது கோடைக்காலம். வெப்பமிகுதியால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. திருத்துருத்தி இறைவனிடம் பிணிநீக்க பதிகம் பாட குணமாகியது.
திருவாரூரை நோக்கி பயணப்பட்டார். நாரைகளை திருவாரூர் பெருமானுக்கு தூது அனுபினார். பூங்கோவிலில் சென்று பதிகம் பாடினார். மற்றொறு கண்ணைத்தர வேண்டினார். ஆரூர் பெருமான் வலக்கண்ணைத் தந்தார். பரவையார் ஆரூரரை பற்றிய செய்திகளெல்லாம் அறிந்து என்னிடத்தில் சங்கிலியா, இனி இவர் உறவே வேண்டாம் என முடிவு எடுத்தார். அடியார்கள் மூலம் இதை அறிந்த ஆரூரர் புற்றிடங்கொண்ட பெருமானிடம் முறையிடுகின்றார். இறைவன் பாதி இரவில் அந்தணர் வேடம் கொண்டு பரவையார் இல்லக்கதவைத் தட்ட, நடு இரவில் வந்த காரணம் கேட்டு அப்போதும் பரவையர் பிடிவாதமாக இருக்க, அந்தணர் ஆரூராரிடம் சென்று பரவையர் மறுப்பை தெரிவிக்க ஆருரர் இறப்பேன் என்றார். அந்தணர் வடிவிலிருந்த பெருமான் மீண்டும் ஒருமுறை செல்கின்றேன் எனக் கூறி தன் சொந்த வடிவில் பூதகணங்களுடன் பரவையர் இல்லம் சென்று நண்பன் நிலையைச் சொல்ல அவர் இசைவுதந்தார்.
ஆரூரர் மேல்கொண்ட நட்பால் அன்பால் இறைவன் இருமுறை தூது சென்றார். அதனால் அந்தவீதியே சிவமணம் கமழ்ந்தது.
திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பி ஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.
இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.
ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர் மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல் சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ளப் போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.
ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.
இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் செரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.
இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.
நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார்.
சேரமான் நினைவு வர சேரநாடு புறப்பட ஏற்பாடுகள் செய்து ஆரூர் பெருமானிடம் விடைபெற்றார். சோழநாட்டின் பல தலங்களையும் வணங்கி கொங்கு நாட்டின் அவிநாசியை அடைந்தார். அன்பர்களோடு நடந்து செல்லும்போது இரு வேறு உணர்வுகளை கண்டார்
ஓருவீட்டில் வாழைமரம் கட்டி மங்கல ஓசையும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டது. இதன் காரணம் என்ன என்றார். அங்கிருந்தோர் இது அந்தணர்கள் வாழுமிடம். எதிர் எதிர் வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் நண்பர்கள், ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருவனை முதலை காலைக் கவ்வி உள்ளே இழுத்தது. கரையில் இருந்தவனின் மங்கல நிகழ்ச்சி நடைபெறுகிறது. தங்கள் மகனுமிருந்தால் நாமும் தம் மகனுக்கு இப்போது பூணூல் அணிவிக்கலாமே என ஆதங்கத்தில் அழுகிறார்கள்.
நம்பிஆரூரர் வந்து பாதையில் இருக்கின்றார் எனக் கேட்டவர்கள் தங்களின் அழுகையை நிறுத்தி அதன் சுவடே தெரியாமல் வந்து வணங்கினர். அவர்களைப் பார்த்து இன்ப மைந்தனை இழந்தவர் நீரோ என்று அதிசயித்தார். துன்பத்தின் சாயல் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றார். அவர்கள் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட எங்கள் செல்வன் வரப்போவதில்லை. தாங்கள் என்று வருவீர்கள் தங்களை எப்போது காண்போம் என ஏங்கிய எங்களுக்கு வரவே வராத பிள்ளையைவிட வராது போலிருந்து வந்த தெய்வமாகிய உங்கள் வருகை எங்களுக்கு இன்பம் தருவதாகும் என்றனர்.
இவர்களின் பக்தியைக் கண்ட ஆரூரர் அன்பு செலுத்துகின்ற நல்லோருக்குரிய துன்பத்தை நீக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஏரிக்கரைச் சென்று பார்த்தால் அங்கு தண்ணீரும் இல்லை. முதலையும் இல்லை. அங்கேயிருந்து அவிநாசி பெருமானை மனமுருகிப் பாடினார். பாடல் முடிந்தவுடன் ஏரியில் நீர் வந்தது. நீரிலே முதலை வந்தது. முதலை வாயிலேயிருந்து பிள்ளையும் வந்தது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அடியார்கள் இறை நாமத்தை சொல்லினர். ஆரூரர் சிறுவனை அழைத்துக் கொண்டு அவிநாசியப்பர் கோவிலில் பூணூல் அணிவித்தார். அங்கிருந்து சேரநாடு சென்றார்.
சேரமான் எதிர் கொண்டழைத்து இல்லத்திற்குச் சென்று அமுதருந்தி நலம் விசாரித்து இருந்தனர். பல சிவத்தலங்களை வழிபட்டு இன்புற்றிருந்தனர். சுந்தரர் விரைந்து குளத்தில் குளித்து அஞ்சைக்களத்து பெருமானை வணங்க சென்றார். சேரமான் குளத்தில் நிதானமாக நீராடினார்.
இறைவன் முன் பதிகம் பாடப்பாட ஆரூரருக்கு வாழ்வில் வெறுப்பு தொன்றியது. இது கயிலை நாதனுக்கு எட்டியதும் அவர் நம்பி ஆரூரானை வெள்ளானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாரும் என்றார். வெள்ளயானை பூதகணங்களுடன் சுந்தரர் முன் வந்து இறைவன் கட்டளையைத் தெரிவித்தார்கள். ஆரூரர் யானையின் மீதேறும்போது பரவையாரை நினைக்கவில்லை. சங்கிலியாரை நினைக்கவில்லை. நட்பின் உயரவால் சேரமானை நினைக்க அதே நினைவு சேரமான் சிந்தையிலும் சேர்ந்தது.
தோழர் செயலையறியாது குதிரைமீதேறி அதன் கதில் ஐந்தெழுத்தை ஓத அதுவானில் எறியது. வன்தொண்டர் செல்லும் யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றது, பின்னே சென்றார் ஆரூரர். அப்போது இறைவன் கருணையை எண்ணி பத்து பாடல்கள் பாடினார்.
அவரை வரவேற்க இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் வந்தனராம். முனிவர்கள் பெருமான் உலா வரும் வெள்ளையானை ஐராவதத்தில் வருபவர் யார் எனக் கேட்க எம்பெருமான் ‘நந்தமர் ஊரன்’ நம் உறவினன் ஆரூரன் என்றார்.
இருவரும் கயிலைமால் மலையில் பெருமான் வீற்றிருக்கும் மணிவாயிலை அடைந்தனர். சேரமான் அழைப்பின்றி சென்றதால் தடுக்கப்பட்டார். உள்ளே சென்ற ஆரூரரை ஆரூரனே வந்தாயா என்றார், இறைவா அடியேன் செய்த பிழைதனை பொறுத்து என்னைத் தடுத்தாட்கொண்டு நின் திருவடிப் பேற்றை வழங்கினயே எனச்சொல்லி பலமுறை வீழ்ந்து வணங்கி என் நண்பன் சேரலர் திருமணிவாயிலின் புறத்தே உளன் எனச்சொல்ல இறைவனும் சரி அழையுங்கள் என்றார். உள்ளே வந்த சேரமான் இறைவனை வணங்கி நான் வாயிலில் இருந்தபோது பாடிய பாடலை தாங்கள் செவிசாய்க்க வேண்டி அங்கே அரங்கேற்றினர்.
சேரமானின் பாடல் சாத்தனாரகிய ஐயப்பன் திருப்பிடவூரில் வந்து வெளியிட்டார். ஆலால சுந்தரர் பாடிய நிறைவு பதிகம் கடல் அரசன் கொண்டுவந்து திருஅஞ்சைக்களத்தில் வெளியிட்டான். கமலினி, அனிந்திதை இருவரும் மீண்டும் பிராட்டியரின் சேடியர்களாயினர்.

36. செருத்துணை நாயனார்
திருமருகலின் வேளான் குடியில் பிறந்தார் செருத்துணையர். சிவனிடத்தும் சிவ அடியாரிடத்தும் மெய்த்தொண்டு பூண்டு வழ்ந்தார். திருவாரூர் கோவிலின் முன்பு விளங்கும் பணிகளைச் செய்து வந்தார். ஆறு காலமும் பெருமானை வழிபட்டு தன்னால் முடிந்த தொண்டுகளைச் செய்துவந்தார்.
கழற்சிங்க மன்னன் திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார். பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாரை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருக தரிசனம் செய்து வழிபட்டார். அவரின் மனைவி கோவிலை வலம் வந்து பெருமைகளை ரசித்துக் கொண்டிருந்தார். வழியில் இறைவனுக்கு மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தில் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்ததை கண்ட அங்கு மலர் தொடுத்துக் கொண்டிருந்த செருத்துனையர் அவரின் செயல் சிவ அபராதம் எனக்கருதி தன்னிடமுள்ள வாளினால் நுகர்ந்த மூக்கை அறுத்து விட்டார்.
உதிரம் பெருக சோர்ந்து தரையில் வீழ்ந்து அழுது கொண்டிருந்த துனைவியரைப் பார்த்து யார் இதனைச் செய்தது எனக் கேட்ட மன்னனிடம், அங்கிருந்த செருத்துனையர், அரசே, இவர் தம்பிரானுக்குடைய மலரை எடுத்து மோந்ததால் இக்கருமம் யானே புரிந்தேன் என்றார்.
இந்தக்குற்றத்திற்கு ஏற்றதண்டனையை செய்தீரில்லை என வாளை எடுத்து மலரை எடுத்த கையன்றோ முதல் குற்றவாளி எனக் கையை வெட்டினார். கை எடுத்திருக்காவிடில் நாசி நுகர்திருக்காது என்பது அவர் எண்ணம். அப்போது இறைவன் தியாகராசர் காட்சி கொடுத்து துணைவியரை முன்புபோல் அருள் செய்தார். தன் தொண்டினைத் தொடர்ந்து பல ஆண்டு புரிந்து இறையடி சேர்ந்தார்.
37. சோமாசிமாற நாயனார்
அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூரினர். நாளடைவில் அது சோமாசிமாறர் என்றாயிற்று. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசனுக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் எனும் இயல்பினர். சிந்தை தெளிய சிவனின் ஐந்தெழுத்தை ஓதுவார். அடியவர்கள் யாராயினும் அவர்களைப் போற்றி வணங்கினார்.
அடியவர்கள் இறைவனாகவே போற்றத் தக்கவர்கள். அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் இறைவன் குடியிருக்கின்றான். அடியவர்களுக்குள் ஜாதி, இனம் பார்ப்பது கூடாது. சிவனை அவர்கள் உருவில் கண்டு வணங்க வேண்டும் என்ற கொள்கைதனை சோமாசிறார் கடைபிடித்து வந்தார். நம்பியாரூரர் பால் அன்பு கொண்டு திருவாரூர் அடிக்கடிச் சென்று அவர் திருவடியை வணங்கி வந்தார். அவருக்கு இனிய நண்பரானார். குரு அருளும் திரு அருளும் பெற்று இறைவன் திருவடி நிழலை எய்தினார்.
38. தண்டியடிகள் நாயனார்
திருவாருரில் பிறந்தவர் தண்டி. சிவனின் சிந்தனையைத்தவிர வேறு எதையும் நினையாதவர். அகம் நோக்குவதைத் தவிற புறம் நோக்கி அறியா இவ்வடியாருக்கு பிறவியிலேயே கண் தெரியாது, திருவாரூர் மேற்குப்பகுதியில் உள்ளது கமலாலயம் திருக்குளம். தண்டியார் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டு கோவிலை வலம் வருவார். கமலாலயக் குளம் அடியவர்கள் குளிப்பதற்கும் பெருமானுக்கு தீர்த்த குளமாகவும் இருந்தது. சமணர்கள் அந்தக் குளத்தில் பாழிகளும் பள்ளிகளும் அமைத்தனர். குளத்தின் அளவு குறைந்தது.
இதை உணர்ந்த தண்டியார் குளத்தைத் தோண்டி அகலப்படுத்த எண்ணினார். செயலை செய்வதற்காக குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியை நட்டார். குளக்கரையில் ஒன்றை நட்டார். இரண்டையும் கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஓரு கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றின் துணையுடன் மேல்வந்து கரையில் கொட்டினார். உடல் பணி செய்யும்போது உள்ளம் ஐந்தெழுத்தை ஓதியது.
தண்டியாரின் இப்பணி குறித்து சமணர்கள் ஐயா மண்ணைக் கிண்டாதீர்கள் அதில் உள்ள சிற்றுயிர்கள் மாண்டு போகும் என்று தடுத்தனர். சிவனுக்குரிய திருப்பணி என்றார். நாங்கள் சொல்வது காதில் விழவில்லையா. கண்தான் தெரியவில்லை காதுமா கேட்கவில்லை என்றனர். எனக்கு கண் தெரிந்தால் என்ன செய்வீர்கள் எனக்கேட்ட தண்டியரைடம் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம் எனக் கூறி தண்டியரிடம் இருந்த மண்வெட்டியையும் கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.
தண்டியார் பெருமானிடம் முறையிடுகின்றார். தூர்வாரும் திருப்பணியை செய்யும் என்னை அவமானப்படுத்தினர். என மனம் நொந்தது. இந்த இடரை நீக்கி அருள் புரிய வேண்டும் என வேண்டி திருமடத்தில் தங்கினார். அன்று இரவு கனவில் இறைவன் தோன்றி தண்டியாரே உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன்னை இழிவாகப் பேசியவர்கள் ஒளி இழப்பர். அஞ்சாதே. எனக் கூறி மறைந்தார், சோழமன்னன் கனவில் தோன்றி நம் தொண்டன் நமக்கு குளம் வெட்ட சிலர் அப்பணிக்கு இடர் செய்து இழிவு படுத்தியுள்ளனர். அதை சரிசெய்க என்றார்,
மன்னன் தண்டியாரிடம் சென்று நடந்தவைகளை தெரிந்தார். அரசன் சமணர்களையும் அழைத்து கேட்க அவர்கள் முதல் நாள் கூறியபடி சம்மதம் தெரிவித்தனர். தண்டியார் இறைவன் முன் வணங்கி திருக்குளத்தில் மூழ்கி எழுகையில் அவருக்கு கண்பார்வை கிடைத்தது. சமணர்களுக்கு பார்வை மறைந்தது. மன்னன் சமணர்களைப் பார்த்து நீங்கள் ஒப்பியபடி திருவாரூரை விட்டு நீங்குங்கள் என்றான். தண்டியார் நாளும் சிவனடி வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வழிபட்டு இறைவன் அடி சேர்ந்தார்.
39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
காஞ்சிமாநகரில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொணடர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர்.
உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல் அழுக்காண ஆடையணிந்து சிவன் திருக்குறிப்புத்தொண்டர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தார். தாங்கள் இளைத்திருக்கின்றீர்கள். உடம்பை உருக்கி உள்ளொளி பெற்றுள்ளீர். தங்கள் முகம் வாடியுள்ளதே எனக்கூறி தங்கள் ஆடை அழுக்காக உள்ளது அதை கொடுங்கள் தூய்மைசெய்து தருகிறேன் என்றார்.
அன்பரே இவ்வாடை மிகவும் அழுக்கடைந்துவிட்டது. குளிரின் கொடுமையால் இதை விட முடிய வில்லை. சூரியன் மறையும் முன்பு தருவதானல் நான் தருகின்றேன் என்றார், அதற்கு சம்மதம் தந்து ஆடையைப் பெற்று குளத்து நீரில் தோய்த்து சுத்தப்படுத்த முயன்றார். அன்று சோதனையாக மழை பெய்யத்தொடங்கியது. மழை தொடர்ந்து பெது கொண்டிருந்தது.
திருக்குறிப்புத்தொண்டரால் ஆடையை சுத்தம் செய்து தர முடியவில்லை. மழை நின்றபாடில்லை. ஆடை கொடுத்தவர் உடம்பு குளிரால் நடுங்குமே. நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று தொல்லையல்லவா கொடுத்துவிட்டேன் என்று மீளாத்துயரம் கொண்டு என் தொண்டு இன்றுடன் முடிவுறும்போல் இருக்கின்றது. இனிநான் வாழ்ந்து என்ன பயன், துணி துவைக்கும் எனக்கு என் தொண்டுக்குத் துணை நின்ற கல்லிலே என் தலை மோதி இறப்பேன் எனக் கூறி வேகமாக அக்கல்லிலே மோதினார்.
அங்கிருந்து எம்பெருமான் கரம் தடுத்து விடைமீது தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரே ‘நும் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம் நீர் சிவலோகம் வந்து இன்புறுவாய்’ என் அருள் புரிந்தார்.
40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தர்-க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.
Read: Thirugnanasambandar History in Tamil (திருஞானசம்பந்தர் வரலாறு)
41. திருநாவுக்கரசு நாயனார் (அப்பரடிகள்)
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார்.
வேளான் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தனர். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.
கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.
Read: Thirunavukkarasar History in Tamil (திருநாவுக்கரசர் வரலாறு)
42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
வயல் வழம் கொழிக்கும் மாட மாளிகைகள் நிறைந்த ஆதனூரில் பிறந்தார் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். சிவன்பால் சிந்தை கொண்டிருந்தார். செம்மையான சிந்தனையில் வேறு நினைப்பின்றி ஈசன் திருப்பணியை தமக்கு ஏற்ற வகையில் செய்து வந்தார்.
வைதீஸ்வர கோவிலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் திருப்புன்கூர் சிவலோக நாதரை வணங்க ஆர்வம் கொண்டார். கோவிலைச் சுற்றி வலம் வந்தார். அப்போதிருந்த சமுதாய அமைப்பின் காரணமாக கோவில் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்றார். நந்தி பெரிய நந்தியாகையால் பெருமானை தரிசிக்க முடியவில்லை. காட்சி கிடைக்கவில்லை என மனம் நொந்தார். அவரின் அன்பைக் கண்ட சிவலோகநாதர் நந்தியை விலகச் சொல்லிக் காட்சி தந்தார்,
அவ்வூரில் அடியவர் பயன் பாட்டிற்கும் ஆண்டன் திருமுழுக்கிற்கும் ஓர் குளம் வெட்டினர். சிவத் தலங்களை வழிபடுவதோடு தேவையான தோல், வார், நரம்பு கோரோசனை முதலிய வற்றைத் தந்தும் தொண்டு செய்து வந்தார். என்ன செய்தும் கோவில் உள் சென்று வழிபட முடியவில்லை.
தில்லையில் கூத்தரை வழிபட வேண்டும் என்பது அவருடைய நீண்டகால அவா. அந்த உணர்வு வரும் போதெல்லாம் நம்மால் அது முடியுமா என மாய்ந்து போவார். சந்திப்போரிடம் சிதம்பரம் போவேன் நாளைப் போவேன் என்பார். எப்போதும் இதையே கூறிக் கொண்டிருந்ததால் மக்கள் அவரை திருநாளைப்போவார் என்றனர். ஒருநாள் மிகச்சிந்தித்து இப்பிறவி எப்போது முடியும் எனத் தெரியாது எனவே செய்யும் அறப்பணியை உடனே செய்ய வேண்டும் என்று உடன் புறப்பட்டார் தில்லை நோக்கி.
இந்த உடலோடு புனிதமான தில்லைக்குள் எப்படிச் செல்வது என வருந்தினார். எல்லையிலிருந்தே அழகு தமிழில் பாடி பரவசமானார். கண்ணீர் மல்க தன் நிலை குறித்து வருத்தப்பட்டார். பலநாள் அங்கிருந்தபடியே வழிபட்டார் நந்தனார். ஒருநாள் இரவு கூத்தபிரான் தோன்றி நந்தனே உன் விருப்பப்படி முப்பரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் புரிந்தார், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி உண்மைத் தொண்டன் ஊரின் எல்லையில் தன் உடம்பு கீழானது எனக் கூறி தங்கியுள்ளான். நீங்கள் எரியமைத்து அதில் மூழ்கச் செய்யுங்கள். தூய உடம்பு பெற்ற அவரை நம் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
அடுத்த நாள் தில்லைவாழ் அந்தணர்கள் இறை சொன்னவாறே சென்று நந்தனாரை தூய்மைப்படுத்தி அழைத்து வந்தனர். கோபுரதரிசனம் கண்டார். இறைவனைக் காண ஓடினார். மூல கருவறையில் சென்று மறைந்தார். நந்தனாரை யாரும் அதன்பின் காணவில்லை.
43. திருநீலகண்ட நாயனார்
தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்- திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது நீலகண்டம் எனச் சொல்லித் திருவோடு வழங்குவது வழக்கம். தெய்வ நலமே சிறந்த நலம் என வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்வு இனிது நடைபெற்றது.
திடீரென்று நீலகண்டர் ஒரு பரத்தைபால் சென்று மீண்டார். வாழ்வில் புயல் மையம் கொண்டது. கணவன் மனைவி இருவருக்குமிடையே பெரும் தடைச் சுவர் ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை. ஆனால் நீலகண்டரின் பூசைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அலட்சியமில்லாமல் பாங்குடன் செய்தார். குறிப்பறிந்து பக்குவமாக செய்தார். ஆனால் உடலுறவுக்கு மட்டும் இசையவில்லை.
பிரச்சனை நாளுக்குநாள் நீண்டு கொண்டே போக அதை முடிவுக்கு கொண்டுவர நினைத்தார் நீலகண்டர். ஒரு நள்ளிரவு நேரம். கணவன் மனைவி இருவர் மட்டும். தனிமையைப் பயன்படுத்தி மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தார். எந்த சமாதானத்தையும் ஏற்கவில்லை யாகையால் மனைவிதானே என்ற உரிமையில் பலவந்தமாக அணைக்க முற்பட்டார். அதுவரை அமைதிகாத்த அம்மையார் “எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்றார்.
திருநீலகண்டம் என்ற மந்திரச் சொல்லான இறைவன் நாமத்தைக் கேட்ட நீலகண்டர் இடி கேட்ட நாகம் போல் ஆகி மனைவி என்பதனை மறந்து இதுகாறும் காணாத ஒரு பெண்ணைப்போல் நோக்கினார். அம்மையே, இனி உங்களை மட்டுமல்ல பெண் குலத்தையே இனி என் உடலால் மட்டுமல்ல மனத்தாலும் தீண்டேன் என்றார்.
ஆண்டுகள் பல ஆயின. இருவரும் சத்ய வாழ்வு வாழ்ந்தனர். முதுமையை அடைந்தனர். பெருமான் இவர்களின் சத்திய வாழ்வினை உலகறியச் செய்ய நினைத்தான். நாடகம் நடத்த அடியவர் வடிவில் வந்து திரு நீலகண்டரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து இதை பாதுகாத்துவரும்படிக் கூறினார். இதுவரை ஓடு கொடுத்தவர் அடியவரின் வேண்டுகோளினை ஏற்று ஓட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல நினைத்தபோது அவ்வடியவர், நீலகண்டரே இது சாதாரண ஓடு இல்லை. இதில் போடும் பொருள்களை தூய்மை செய்யும் அற்புதமான ஓடு. கவனமாக பாதுகாக்க என்றார். அவ்வண்ணமே அதை மிகவும் பாதுகாப்பாக வீட்டில் வைத்தார்.
சிறிது காலத்திற்குப்பின் அவ்வடியவர் வந்து ஓட்டைத் திருப்பிக் கேட்க உள்ளே சென்றுபார்த்த நீலகண்டர் தான் வைத்த இடத்தில் அது இல்லாததால் குழம்பினார். வீடு முழுவதும் தேடி இல்லை என்றபின் அடியவரிடம் நீங்கள் கொடுத்த ஓட்டைக் காணவில்லை அதற்கு மாறாக வேறு ஓடு தருகிறேன் ஏன்றார். அப்படியென்றால் நான் கூறுவது உண்மை என உன் புதல்வன்மேல் சத்தியம் செய் என்றார் அடியார். ஐயா தாங்கள் சொல்லியவாறு உறுதி செய்ய எனக்கு புத்திரப் பாக்யமில்லை என்றார். அப்படியானால் உன் அன்பு மனைவியின் கையைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார். அடியவரே எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சபதத்தால் என் மனைவியை தீண்டி உடன் மூழ்க முடியாது. நான் வேண்டுமானால் தனியே மூழ்கி உறுதி செய்கிறேன் என்றார். இதை ஏற்காத அடியவர் வழக்கு மன்றம் சென்றார்.
அடியவர் தான் ஒடு கொடுத்தது. நீலகண்டர் அது காணாமற் போய்விட்டது என சொல்லியதால் மகன் அல்லது மனைவி உடன் சத்தியம் செய்யச் சொன்னது அதற்கு அவர் கூறும் காரணம் ஆகியவற்றைக் கூறினார். நடுவர்கள் நீலகண்டரின் வாக்கு மூலம் கேட்டனர். வைத்த இடத்திலிருந்து ஓடு காணாமற்போனது மாயமாய் உள்ளது என்ற நீலகண்டரிடம் நடுவர்கள் உன் மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்குவதுதான் முறை எனத் தீர்ப்பளித்தனர்.
அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும்போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர்.
‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.
44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை அடைந்தனர். நீலகண்டயாழ்ப்பாணர் தம்பிறப்பால் உள்ளே சென்று பாடமுடியாத நிலையில் கோவிலின் வாயிலிலே யாழிசைத்து மெய்யுருக பாடினார். அந்த இசை கேட்டு மகிழ்ந்த இறைவன் இரவு தொண்டர் கனவில் தோன்றி யாழ்ப்பாணரை தமது திருமுன் கொண்டுவந்து பாட பணித்தான். பாணர் கணவிலும் தோன்றி பணித்தான். இறைவன் புகழை பண்ணிசைத்து பாடினான். தரை ஈரமாயிருந்தது. இறைவன் அசரீரியாக தரையில் கீதம் தாக்குமானால் சந்தயாழ் நரம்பு தளர்ந்து நெகிலும் எனவே பாணர்க்கு பலகையிடுமாறு கூறினான்.
பலதலங்களில் யாழிட்டு புகழ்பாடி வணங்கி இசைத்தொண்டு செய்து இருவரும் சீர்காழி வந்தனர். சம்பந்தப்பெருமான் தன் பாடல்களுக்கு யாழில் இசை கூட்டச் சொன்னார். அவருடன் இருந்து தம் தொண்டினை செய்து ஞானசம்பந்தருடன் நல்லூர் பெருமனத்தில் சிவ ஜோதியில் கலந்தார்கள்.
45. திருநீலநக்க நாயனார்
நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் உள்ள சாத்தமங்கையில் நீலநக்கர் பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இறைவன் அயவந்திநாதர், அம்பிகை மலர்கண்அம்மை. அடியவர்களை போற்றுவதும் பெருமானை அர்ச்சிப்பதுமே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்தார்.
திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்கு உரிய நாள். 27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருஆதிரை இரண்டும் சிறப்பானது. சிவனுக்கும் அடியவர்க்கும் உகந்தநாள் ஆதிரை. இந்த நாளில் சிவபூஜை செய்ய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு கோவிலில் பூஜை செய்தார். இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வலம் வந்தார். அப்போது இறைவன் மேல் ஓர் சிலந்தி விழுந்தது. அதைக் கண்ட அம்மையார் சிலந்தியினால் இறவனுக்கு பங்கம் எனநினைத்து வாயினால் ஊதித் தள்ளினார்.
சிலந்தி கீழே விழுந்தது. இதைக் கண்ட நீலநக்கர் அறிவில்லாமல் நீ இப்படி செய்து இறைவன் மேனியை எச்சில் செய்தாயே என வருந்தி இனி உன்னை நான் துறந்தேன். இனி உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்றார். சென்றார். மாலையாயிற்று. அம்மையார் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. கோவிலிலேயே தங்கினார். நீலநக்கருக்கு உறக்கத்தில் ஓர் கனவு தோன்றியது. அவந்திநாதர் தோன்றி நீல நக்கரே, உன்மனைவி ஊதி அவள் எச்சில் பட்ட இடம் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. எனக்கூறி திருமேனி காட்டி உண்மையைக் கூறினார். விடிந்தது. நீலநக்கர் பெருமானை வணங்கினார், அம்மையாரை விட்டிற்கு கூட்டிவந்தார்.
ஞானசம்பந்த பெருமான் காலத்தவர். அவருடன் நெருங்கிப் பழகியவர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தைக் கண்டு களிக்க திருப்பெருமணநல்லூர் அடைந்து திருமணத்தை நடத்திவைத்தார். ஞானசம்பந்த பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்து ஐக்கியமானார்.
46. திருமூல நாயனார்
கயிலைவாழ் சித்தர்களில் நந்திதேவரருள் பெற்ற மாணாக்கர் சுந்தரநாதன். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சிறந்த சிவயோகி. அவரின் நண்பர் அகத்தியர். அவர் பொதிய மலையில் எழுந்தருளியுள்ளதால் அவரோடு சில நாள் தங்கியிருக்க எண்ணம் கொண்டு கயிலையிலிருந்து புறப்பட்டார். திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி(அவிமுத்தம்) விந்தியமலை, ஆகிய தலங்களில் வழிபாடு செய்து திருப்பருப்பதம், திருக்காளத்திநாதர், காஞ்சி ஏகாம்பரநாதர் ஆகிய தலங்களிலும் முப்புரமெறிந்த திருவதிகை நாதரை வழிபட்டு திருபெரும்பற்றப்புலியூரில் சிவானந்த திருக்கூத்தினை கண்டு களித்து காவிரியில் நீராடி தென்கரையில் உள்ள திருவாவடுதுறை அடைந்தார்.
அங்கு காவிரிக்கரையில் இடையர்குல மூலன் விடம் தீண்டி உயிர் துறக்க பசுமாடுகள் அவன்மேல் கொண்ட அன்பால் அவனைச் சுற்றிவந்து அழுது கொண்டிருந்ததை பார்த்தவர் தன் மேனியை ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் மூலம் மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தார். பசுக்கள் சந்தோஷமடைந்தன. மாலை வந்ததும் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூர் நோக்கி செல்ல மூலரும் பின் தொடர்ந்தார். பசுக்கள் யாவும் அதனதன் வீட்டிற்கு சென்றன. வீதியில் நின்ற அவரை பசுக்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் மூலன் வரவில்லை என்பதால் அவனைத் தேடிவந்த அவன் மனைவி அவன் வீதியில் நின்றிருப்பதைக் கண்டு அவன் அருகில் வர விலகி நின்றார்.
அவளை நோக்கி நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக்கூறி வீட்டிற்கும் செல்லாமல் மண்டபத்தில் யோகத்தில் இருந்தார். அவர் மனைவி அவர் வீட்டிற்கு வரமறுப்பதை ஊர் பெரியவர்களிடம் கூற யோகியரைக் கண்டு வந்தவர்கள் உண்மையறிந்து அப்பெண்ணைக் கூட்டிச் சென்றனர். அடுத்த நாள் காலை யோகி பசுக்கள் வந்தவழி சென்று தாம் மறைத்துவைத்த இடத்தில் தன் உடம்பு இல்லாதது கண்டு சிவபெருமான் உடலை மறைத்தது கண்டு அவர் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருளை எல்லாம் தமிழ் ஆக்க எம்பெருமான் இவ்வுடல் தந்துள்ளார் என்பதை முற்றுணர்வினால் உணர்ந்தார். பின் தொடர்ந்த ஆயர் குலத்திற்கும் தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என உணர்த்தினார்.
திருவாடுதுறையை அடைந்து பெருமானை வணங்கி கோவிலின் மேற்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் அமர்ந்து சிவயோகத்தில் இறையுடன் ஒன்றினார். இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையாக விரிந்து மலரும் நல்ல திருமந்திரமாலை என்ற நூலை ஆண்டுக்கு ஒருமுறை ஒருபாடல் வீதம் 3000 பாடல்கள் அருளினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சொற்தொடரை தந்தவர் திருமூலரே. சைவ சித்தாந்தங்களுக்கு முன்னோடி திருமந்திரம்.
47. நமிநந்தியடிகள் நாயனார்
திருவாரூருக்கு தெற்கே எழு கி,மீ, தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின் அந்தணர் குலத்தில் நமிநந்தி பிறந்தார். அந்த ஊர் மக்கள் சத்திய வாழ்வு வாழந்து வருபவர்கள். வேதநூல்களின் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பவர்கள். திருநீறே மெய்ப்பொருள் என்ற அறிவுடையவர்கள். நமிநந்தி நாளும் அருகில் உள்ள ஆரூர் சென்று புற்றிடங் கொண்டாரை வழிபட்டு வந்தார்.
ஒருநாள் ஆரூர் சென்ற நமிநந்தி புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு முடிந்ததும் மதிலுக்கு வெளியில் வந்தார். அங்குள்ள ஆரூர் அறநெறி கோவிலில் வணங்க நினைத்தார். கோவிலின் உள் சென்று பெருமானை வழிபட்டார். அப்போது விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்றாயிருக்கும் என நினைத்ததால் ஊருக்குச் சென்று நெய் கொண்டுவந்து விளக்கு எரிக்க முடியாது என்பதால் அருகிலுள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடாகையால் அந்த வீட்டின் பெரியவர் உங்கள் சிவன் கையில் நெருப்பை ஏந்தி இருக்கும்போது விளக்குக்குப் பஞ்சம் ஆகிவிட்டதா, இங்கு நெய் இல்லை என்றார். அப்படி உனக்கு விளக்கு எரிக்க வேண்டு மென்றிருந்தால் தண்ணீர் ஊற்றி எரியும் என்று ஏளனம் செய்தார்.
அந்த ஏளனம் கேட்டு வருத்தத்துடன் குளக்கரை வந்தார். அப்போது வானில் ,அடிகளே கவலையை விடு, உன் திருவிளக்குப்பணி நிகழ நெய்தானே வேண்டும், குளத்தின் நீரை விட்டு விளக்கு எரிப்பாயாக’ என்று ஒலித்தது. நமிநந்து உள்ளம் மகிழ்ந்து குளத்தில் மூழ்கி நடுக் குளத்திலிருந்து நீர் கொண்டு விளக்கில் ஊற்றி எரித்தார். பெருமானின் அருள் கண்டு மகிழ்வுற்றார். உலகம் வியக்க அது சுடர்விட்டு எரிந்தது. ஏளனம் செய்த சமணர் வெட்கப் படும் படியாக விடியும் வரை விளக்கு எரித்தார், தினமும் இப்பணியைத் தொடர்ந்தார். “நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே” என நாவுக்கரசு பாடினார்.
திருவாருக்கு அருகில் உள்ள மணலியில் ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப்பெருமான் எழுந்தருள்வார். நமிநந்தியடிகளும் சென்று வழிபட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவியிடம் வெந்நீர் வை பல ஜாதியரும் வந்திருந்தனர், நான் குளித்துவிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்றார். அப்படியே திண்ணையில் படுத்துறங்கினார். கனவில் ‘ஆரூரில் பிறந்தார்கள் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்,’ என்றார் பெருமான். நமிநந்தி தான் செய்த பெருந்தவறை எண்ணி வருந்தினார், திருக்கோவிலுக்கு வந்தவர் யாராயிலும் அவர்கள் அடியார்கள் எனக் கருதவேண்டும் என உணர்ந்தார். குளிக்காமல் எழுந்து வழிபாடு செய்து மீண்டும் திருவாரூர் சென்றார்.
திருஆரூரில் பிறந்து வாழும் எல்லோரும் அடியார்களாகவும் ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சி கண்டார். எம்பெருமான் முன் வீழ்ந்து மன்னிக்க வேண்டினார். திருவாரூரையே இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டுகள் செய்தார், அங்கு பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்தது நமிநந்தியாரே, பலகாலம் தொண்டு செய்து இறைவன் அடிசேர்ந்தார்.
48. நரசிங்க முனையரைய நாயனார்
நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாருரில் வாழும் ஆருரரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம். அன்று வழிபடுதல் சிறந்த பலனாகும். மார்கழி திருவாதிரையில் கூத்தபிரான் சிறப்பு வழிபாட்டுடன் வீதியுலா வருவது சிறப்பானது.
நரசிங்க முனையரையர் ஆதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்து பொற்காசு கொடுத்து தொண்டு செய்தார். நாட்டில் வளம் பெருகியது. மக்கள் குறையின்றி வாழ்ந்தனர். எப்போதும்போல் அந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடினர். அடியார் திருக்கூட்டத்தில் ஒரு காமுக வேடம் கொண்ட ஒருவனும் கலந்து கொண்டான். மற்றவர்கள் அவரைக்கண்டு ஒதுங்கினார்கள்.
நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி நீங்கள் அவரை இகழக்கூடாது. திருநீறு அணிந்தால் யாராயிருந்தாலும் அவரை நாம் போற்றி பூசிக்க வேண்டும் என்று கூறி அக்காமுகருக்கு இருமடங்கு பொன் கொடுத்து அனுப்பினார். பல ஆண்டுகள் அடியார் தொண்டும் இறைதொண்டும் செய்து இறையடியை அடைந்தார்.
49. நின்றசீர்நெடுமாற நாயனார்
கூன் பாண்டியன் மதுரையை அரசு புரிந்து வந்தார். துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார். நின்ற சீர் நெடுமாறன் சமணத்தை தழுவியிருந்தார், துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவத்தைப் போற்றினர். மன்னன் சமணத்தை சார்ந்திருந்ததால் சமணர்கள் கை ஓங்கியிருந்தது.
இதை சரிசெய்ய மங்கையர்கரசியார் குலச்சிறையர் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அவர் தங்கியிருந்த மாளிகையை மன்னர் விருப்புடன் சமணர்கள் தீக்கிரையாக்கினர். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. தன்னுடன் வந்த அடியர்களையும் துன்புறத்த காரணமாகிய சமணர்களுக்கு ஊக்கம் கொடுத்த கூன் பாண்டியனை அந்த வெப்பம் சாரட்டும் என ஞானசம்பந்தர் பாட வெப்ப நோயால் அவதிப்பட்டான் மன்னன். நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.
ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய் சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குண்மடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அவர்களின் மந்திரநீர் சுட்டது.
வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மை சமயம் என்றனர்.
மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்ற பாட்டினை தீயிலிட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.
ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான்.குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இனைந்து திருத்தொண்டுகள் பல செய்தான். கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என அழைக்கப்பட்டான்.
வடபுலத்து பகை மன்னர் திருநெல்வேலியில் நால்வகைச் சேனையுடன் போர் தொடுக்க வெற்றி பெற்று ஆலயப்பணிகளில் தன் முழுகவனத்தைச் செலுத்தினார். திருநீற்றின் பெருமையை விளக்கி அனைவரும் திருநீறு பூசச்செய்தார். பல ஆண்டுகள் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
50. நேச நாயனார்
காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும் கொடுத்து சிவனடியார்களுக்கு உதவி செய்து வந்தார். இறுதியில் இறைவன் திருவடி சேர்ந்தார்.
51. புகழ்ச்சோழ நாயனார்
திருச்சி அருகிலுள்ள உறையூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழர். சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுபித்து நாளும் வழிபாடுகள் சிறப்புற நடைபெற வழி வகுத்தான். புகழ்ச் சோழர் கொங்கு நாட்டிலும் ஏனைய சிற்றரசர்களும் கப்பம் கட்டவேண்டும் என எதிர்பார்த்தார். கருவூர் சென்று பல நாட்கள் தங்கி பசுபதீசுவரரை வழிபட்டார்.
அங்கு சிற்றரசர்கள் கொண்டுவந்த திறைப் பொருட்களைப் பார்த்தார். தமது ஆட்சிக்கு கட்டுப்படாமல் இருப்பவர் யாரென விசாரித்து அது மன்னன் அதிகன் என அறிந்து அவன் மேல் படையெடுக்க உத்தரவிட்டார். நால்வகைப் படைகளும் சென்று அதிகனை வென்று நவநிதிகளையும் மாண்ட வீரர்கள் தலையையும் கொணர்ந்தனர்.
நவநிதிகளைப்பார்த்த மன்னன் அதனிடையில் சடைமுடியும் திருநீறும் அணிந்த தலையைக் கண்டு மனம் நடுங்கினார். கண்ணில் நீர் வழிந்தது. சிவனடியாரை என் ஆட்சியில் வெட்டியும் என் இதயம் வெடிக்காமல் இருக்கின்றது. அடியாரை கொன்ற பாவத்திற்கு ஆளானேன். அமைச்சர்களை நோக்கி இனி இந்த ஆட்சியை நீங்கள் அறநெறி தவறாது நடத்தி உரிய வேளை வந்ததும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள் என்று கூறினார்.
ஆநிலையப்பர் கோவிலுக்குமுன் தீமூட்டி உடல் முழுக்க திருநீறு பூசி சிவனடியாரின் தலையை ஒரு தட்டில் தலைமேல் வைத்துக்கொண்டு குண்டத்தை வலம்வந்து நெருப்பில் புகும்போது மலர்மழை பொய்து வானில் தேவ துந்துபிகள் முழங்கியது. புகழ்ச்சோழர் இறையடி சேர்ந்தார்.
52. புகழ்த்துணை நாயனார்
அரிசில்பரைப்புத்தூர்- அழகாப்புத்தூரில் புகழ்துணையர் பிறந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார்.
ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விக்கும்போது பசியின் மிகுதியால் உடலில் சோர்வு ஏற்பட்டு தண்ணீர் குடத்தை தாங்க முடியாமல் இறைவன் திருமுடி மேல் விழுந்தது. வேதனையடைந்து மயங்கி வீழ்ந்தார். அப்படியே மயக்கத்தில் அயர்ந்துவிட்டார். இறைவன் அவர் கனவில் தோன்றி பஞ்சம் நீங்கும் வரை உனக்கு ஓர் காசு நாள்தோறும் வைப்போம் என அருள் செய்தார்.
கண்விழித்தார். இறைவன் கருணையை எண்ணி உருகினார். பீடத்தின் கீழ் ஓர் காசு இருந்தது. அதைக் கொண்டு தினமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
53. பூசலார் நாயனார்
திருநின்றவூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் பூசல் பிறந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது என்ற தன் முடிவு வீணாகாமல் புறத்தே கட்ட முடியவில்லை என்றாலும் அகத்தே கட்டத் தொடங்கினார்.
தன் மனத்திலே நிதி சேர்த்தார். செங்கல், சுண்ணாம்பு, மரங்கள் எல்லாவற்றையும் நினைத்து மனத்திலே தேடிக்கொண்டார். அடிக்கல் நாட்டுவது முதல் அடுத்தடுத்து கட்டடங்களை தன் மனத்திலே கட்டினார். பல நாட்கள் சிந்தித்து புறக்கோவிலை விட அகக்கோவிலை சிறப்பாக வடிவமைத்தார்.
இதே சமயத்தில் காஞ்சியில் காடவர்கோன் மன்னன் திருக்கோயில் கல்லிலே அமைத்தான். கயிலாயநாதர் கோவில் என்று அழைத்தான். அற்புதமான சிற்ப வேலையும் கலை நுணுக்கமும் கொண்டதாக அமைந்தது கோவில். கோவில் பணிகள் முடிந்ததும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுக்கு நாள் குறித்தான். அதே நாளில் பூசலார் தன் மனக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த எண்ணியிருந்தார்.
அன்று இரவு மன்னன் கனவில் பெருமான் தோன்றி, ’நீ கட்டிய கற்கோவிலுக்கு அன்று நான் வரமுடியாது, என் அன்பிற்கினிய திருநின்றவூர் பூசலார் திருக்கோவிலுக்கு அந்த வேளையில் செல்ல வேண்டி யிருப்பதால் நீ இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்’ என்றார்.
கண் விழித்த மன்னவன் பெருமானே வலிந்துபோய் அருள் செய்கின்ற திருக்கோவிலைக் கட்டிய அடியாரை நான் வணங்க வேண்டும் என திருநின்றவூருக்குச் சென்றான். பூசலார் அமைத்த அருள் கோவில் எங்கே என மறையவர்களைக் கேட்டான். அப்படி ஒரு கோவிலும் இல்லை என்றனர். மன்னரே இருங்கள் பூசலாரை வரச்சொல்கிறோம் என்றனர். மன்னவன் பூசலார் இருக்குமிடம் சொல்லுங்கள். அவரை அழைக்ககூடாது. அவர் ஈசனின் அன்பர். அவரை நாம் வணங்க வேண்டும். நான் அங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு அங்கு சென்றார்.
ஊர்மக்கள் பூசலாரைக் காட்ட மன்னர் நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். நீங்கள் பெருமான் எழுந்தருள கட்டிய கோவில் ஏது அக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்து அருள தெரிந்து உம்மைக் கண்டு பணிவதற்கு வந்தேன் என்றார். மன்னர் கூறியதைக்கேட்டு அச்சத்தினால் பூசலார், என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு எம்பெருமான் அருள் செய்தார் என்றால் என்னால் பொருள் சேர்க்க இயலாமையால் மனத்தினால் அமைத்த கோவில் அது என்று அந்த அமைப்பினை விரிவாக மன்னனுக்கு கூறினார். மன்னவன் அடியவரின் பக்தி என்னே என்று மீண்டும் தரையில் வீழ்ந்து வணங்கினான். காஞ்சி திரும்பினான். பூசலார் தன் மனக்கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டு அவனடி சேர்ந்தார்.
54. பெருமிழலைக்குறும்ப நாயனார்
தன்னால் பிடிக்க முடியாது போன காட்டுமுயலை பிடிக்க காலையில் சென்ற சிறுவன் கல் ஆயுதம் கொண்டு முயல் பதுங்கிய இடத்தை தோண்ட ஓர் நிலையில் கல் ஆயுதம் சிக்கிக் கொள்ள அதை சிரமத்துடன் ஆட்டி வெளியில் எடுத்தான் அங்கு ஓர் கல் தென்பட்டது. கல் ஆயுதத்தால் குத்தியபோது அது கல்லோடு மோதிய சத்தம் கேட்கவில்லை. அப்போது அக்கல்லிருந்து ஓர் ஒளி வெளிவந்து சிறுவனைச் சுற்றி அவனுள் மறைந்தது. தன்னிடமிருந்த மாட்டுக் கொம்பை எடுத்து ஊத ஊர் மக்கள் அங்கு திரண்டனர். பெரியவர் ஒருவர் உள்நோக்கி அது குன்றவில்லி சடைசாமி என்றார். உடன் அனைவரும் வணங்கி அந்த இடத்தைத் தோண்டினர்.
லிங்கம் தெரிந்தது. சிறுவன் தன் மீது பட்ட ஒளியால் தியானத்தில் அமர்ந்தான். பல வருடங்கள் சென்றன. சிவனடியாரன அவரை பெருமிழலைக் குறும்பர் என்று வணங்கினர். தமிழகத்தில் உள்ள சிவாலயங்களை தரிசிப்பதும் பின் மிழலையூர் தங்குவதுமாக இருந்தவர் திருவீழிமிழலை திருத்தலத்தில் தங்கி சிவத் தொண்டு செய்து வந்தர். சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாகவும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தி எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்து அட்டமா சித்திகள் கை வரப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரம். அதற்கு முந்தைய நட்சத்திரமான சித்திரையில் பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை நடக்கின்றது.
மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடி ஒரு சிறுவனை பூசாரியாக தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் மீண்டும் கூடி வேறு ஒரு சிறுவனை பூசாரியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்ட பெருமிழலைக் குறும்பர் இங்கு வீரபத்திரராக வழிபடுகின்றனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாக கட்டப்பட்டது. பிற்காலத்தில் இச்சோழன் பெருமிழலை என்று ஓர் ஊரை மிழலை நாட்டில் புதுக்கோட்டையிலிருந்து பேறையூர் செல்லும் வழியில் உருவாக்கி பெருமிழலை குறும்நாயனாரின் புகழ் பரவ வழி செய்துள்ளான். பெருமிழலை குறும்நாயனார் அவதரித்த முக்தியடைந்த ஊர் மிழலையூர்.
குருவே சிவம் என்ற கொள்கையுடையவர். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும் மனத்தால், குருவை நினைத்து வழிபட்டு பெறவேண்டியதைப் பெறலாம். இவர் நம்பி ஆரூரர் (சுந்தர மூர்த்தி நாயனார்) என்பவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். கையாற் தொழுது வாயாற் புகழ்ந்து கருத்தால் எண்ணி வழிபடுபவர்.
நம்பியாருடைய நாமத்தை ஜெபித்து வந்ததால் அட்டமாசித்திகள் கைவரப்பெற்றார். இறைவனுடைய திருநாமம் ஐந்தெழுத்து. அதைப் போன்றே குரு பஞ்சாட்சாரமாகிய அப்பரடிகள், திருநாவுக்கரசு என்ற குரு நாமத்தை எழுதி சொல்லி தியானித்து சித்திகள் பெற்றார். அனிமா, மகிமா, லகிமா, கறிமா, பிராத்தி, பிறாகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்ற எட்டும் அட்டமா சித்திகளாகும்.
குறும்பர் அடியவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். அப்போது நம்பிஆரூரர் கொடுங்கோலூரை அடைந்தார். அஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடியபோது பெருமான் வெள்ளையானையை அனுப்பி ஆரூரரை கயிலை சேர்த்தார். நாளை தன் குருநாதர் ஆரூரர் கயிலை செல்வார் என தன் யோக நெறியால் முதல் நாளே உணர்ந்தார். கண்ணில் மணியிழந்து ஒளியிழந்து வாடுகின்ற சில குருடர்களைப்போல் நான் குருநாதர் கயிலை சென்றபின் வாழமாட்டேன். கண் நான். ஒளி குருநாதர். என் அகக்கண் ஒளி இழந்துவிடும். எனவே சிவன்தாள் இன்றே சென்று அடைவேன் என்றார்.
யோகமுறை கற்றதனால் பிரமநாடிவழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதி மண்டலத்தில் செலுத்தி பிரவணத்தால் திறக்கப்பட்ட கபால நடுவாயிலின் மூலம் முதல்வன் திருப்பாதங்களை ஒளிவடிவாக சென்று அடைந்தார்.
55. மங்கையர்க்கரசி நாயனார்
மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற்பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை சார்ந்தவரானார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது.
திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அவரை அழைத்து பாண்டிய நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தை போக்கவும் தன் கணவர் கூன் பாண்டியனை சமணத்தில் இருந்து மாற்றவும் சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவேண்டினர்.. ஞான சம்பந்த பெருமான் மதுரைக்குவந்து ஆலவாய் பெருமானை பார்க்க விழைகிறார். அம்பிகையைக்கூடப்பாடாத சம்பந்தர் அங்கு பாடிய பதிகத்தில் மங்கையர்கரசியரைப்பற்றி இரண்டு வரிகள் பாடினார். வளவர் திருக்கொழுந்து என்ற பாராட்டைப் பெற்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்த்து அவனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்.
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க பாடுபட்டவர். பல ஆண்டு சைவம் தழைக்கசெய்து இறையடி சேர்ந்தார்.
56. மானக்கஞ்சாற நாயனார்
காஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். அந்தக் குலத்தின் தலைவர். மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்மை யுடையவர்.
அவருக்கு ஒரே ஒரு குறை. அது மகவு இல்லை என்பதாகும். தவம் மேற்கொண்டு பெருமான் கருணையினால் பெண் குழந்தையை அடைந்தார். அப்பெண் வளர்ந்து பருவமடைந்தார். நீலகண்டபெருமான்மேல் அளவுகடந்த பக்திகொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பெரியோர்களால் மணம் பேசி முடிக்கப்பட்டது.
மகிழ்ச்சி வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. மணமகள் வீடு திருமணக்கோலம் பூண்டது. மானக்கஞ்சாறனார் தன் ஒரே செல்ல மகளின் மணத்தை ஊர் போற்ற சிறப்புற நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். பெருமான் தொண்டர்கள் விருப்பம் எதுவாயினும் குறிப்பறிந்து கொடுத்து மகிழும் மானக்கஞ்சாறனார் பண்பை உலகறியச் செய்ய முடிவு செய்தார். மாவிரதியர் கோலத்தில் கஞ்சாறு நோக்கிப் புறப்பட்டார். அடியாரை மானக்கஞ்சாறனார் வரவேற்று உபசரித்தார்.
மானக்கஞ்சாறனார் இல்லத்தில் உள்ள அனைவரையும் அடியாரை வணங்கி ஆசி பெறச் சொன்னார். மணப்பெண்ணையும் வணங்கச் சொன்னார். அவரும் வணங்கினார். தவமாவிரதியர் கோலம் கொண்ட அடியவர் மணப்பெண்ணின் மயில் போன்ற சாயலும் மேகம் போன்ற கருத்த அடர்ந்த நீண்ட கூந்தல் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். அடியவர் தம் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையுடைய மானக்கஞ்சாறனார் மகளின் திருமணநாள் என்றும் பாராமல், மணமகன் வீட்டார் என்ன சொல்வார் என்றும் பாராமல், மணமகன் என்ன நினைப்பார் என்றும் பாராமல், அடியவர் குறிப்பறிந்து ஈயும் பண்பு தலைதூக்க ஒரு கத்தியை எடுத்து வந்து மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியுடன் அறுத்து அடியவரின் கையில் கொடுத்து வணங்கினார்.
அதை வாங்குவதுபோல் நின்ற அடியவர் அம்பிகையுடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்தார். மணமகள் கூந்தல் பெருமான் கருணையினால் வளர்ந்தது. அன்பனே நம்பாலும் நம் அடியர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். உமக்கு நம் புவனத்தில் இடம் கொடுத்தோம் என அருள் செய்தார்,
மணக்கோலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் வந்தார். நிகழ்வுகளைக் கேட்டு மாவிரதியாய் வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என வருந்தினார்.
57. முருக நாயனார்
திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் பிறந்தார் முருகர். மறையவர் குலத்தில் பிறந்தவர். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர்.
நால்தோறும் நால்வகை மலர் கொய்து வண்ணவகையாக்கி பெருமானுக்கு அணிவித்து மகிழுவார். இத் தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாக நினைத்தார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பு, நிலப்பூ என்ற நான்வகை மலர்களால் அறுவகை மாலைகளை தொடுத்து அணிவித்து வழிபடுவது வழக்கம்.
ஞான சம்பந்தரை தம் நண்பராகப் பெற்றார். முருகர் பெருமானை அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்டு கண்குளிர களிப்பாரம். நாளும் தொண்டு செய்து வந்தவர் ஞான சம்பந்தப் பெருமான் திருமணநாளில் அப்பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்தார்.

58. முனையடுவார் நாயனார்
நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார்.
அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால் வந்து வேண்டி நின்றால் நடுவு நிலையுடன் பொருள் பெற்று அவர்பால் பகைவரை எதிர்த்து வெற்று பெறுவார். அந்த பொருளைக் கொண்டு அடியார்க்கு உதவிகள் செய்து தொண்டு புரிந்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து சிவதொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
59. மூர்க்க நாயனார்
சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் வேளான்குலத்தில் பிறந்தார் மூர்க்கர். திரு நீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அமுது படைத்தபின்னரே தான் அமுது உன்னும் பழக்கமுடையவர். ஒவ்வொருநாளும் இப்பணி தொடர அடியவர்கள் நிறைய வர தன் உடைமைகளை விற்று தொண்டு செய்தார். மேலும் விற்பதற்கு ஏதுமில்லாததால் முன்பு அவர் அறிந்திருந்த சூதாட்டத்தின் மூலம் வரும் பெருளைக்கொண்டு அமுதுதொண்டு செய்தார். ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று அமுது படைத்தார். ஒவ்வொரு ஊரிலும் சிவனை வழிபட்டு பின் சூதாடி அதனால் வரும் வருவாயை அமுது தொண்டு செய்ய பயன்படுத்தினார்.
குடந்தை நகரம் சென்றார். சூது ஆடி ஈன்ற பொருளில் அடியவர்களுக்கு அமுது ஊட்டி வந்தார். சூதாட்டத்தின் போது இவரை ஏமாற்றினாலோ, தகராறு செய்தாலோ தன்னிடமுள்ளவாளால் குத்திவிடுவதால் மூர்க்கர் என்றனர். சூதாட்டத்தில் வெற்றி பெற்று தனக்கென்று எதையும் இவர் வைக்கவில்லை. மேலும் தான் நல்ல நிலையில் இருக்கும்போது தன் சொத்தை விற்று அமுது படைத்தார். தன் கொள்கை நிறைவேற எடுத்துக் கொண்ட கடைசி வழி. தொண்டுக்கு இடைஞ்சல் என்றால் உயிரைத் தருபவர்கள் அடியார்கள். சூதாடி அதனால் தொண்டு செய்வதால் ஏற்படும் பாவத்தை ஏற்க தயாராக இருந்தார். எல்லோருக்கும் அமுதூட்டி கடைசி ஆளாக மீதம் இருப்பதையே தான் உண்டு தொண்டு செய்து சிவனடி சேர்ந்தார்.
60. மூர்த்தி நாயனார்
மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் மூர்த்தியார் பிறந்தார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான். கருநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்தவன். சிவனடியார்களுக்குத் துன்பம் தொடர்ந்து கொடுத்துவந்தான்.
அவ்வூரில் இருந்த மூர்த்தியாருக்கும் பல இடர்கள் செய்தான். அவற்றையெல்லாம் பொறுத்து தன் திருத்தொண்டினை குறைவரச் செய்து வந்தார். இருப்பினும் சந்தனக் காப்பு செய்ய சந்தனம் கிடைக்காமலிக்க எல்லா வகையிலும் தடை செய்தான். மூர்த்தியார் எங்கெங்கோ சந்தனக் கட்டைக்கு அலைந்தார். கிடைக்கவில்லை. சேர்ந்து கோவிலை அடைந்தார்.
நாள்தோரும் சொக்கலிங்கப் பெருமானுக்கு சந்தனம் அறைக்கும் கல்லைப் பார்த்தார். அறைக்கும் கரத்தைப் பார்த்தார். சந்தனக் கல் உள்ளது. அறைக்கும் கரம் உள்ளது. கட்டைதானே இல்லை. எம்பெருமானே என் கரத்தையே சந்தனக் கட்டையாக கருதி சந்தனக் கல்லில் அறைகின்றேன் என கையை கல்லில் அறைத்தார். சதை கிழிந்தது. நரம்புகள் துண்டிக்கப் பட்டது. ரத்த வெள்ளம் கல் முழுவதும் பரவியது.
அப்போது வான் வழி ஒலித்தது. “மெய்யன்பனே என்பால் கொண்ட அன்பால் இப்படிச் செய்யாதே, உனக்கு துன்பம் தந்தவன் வலிய கொண்ட நாடு உன் வசமாகும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி செய்வாயாக, முறையாக முட்டாமல் திருத்தொண்டு செய்து நம் சிவலோகம் வருவாயாக” என்று ஒலித்தது. கை முன்போல் ஆயிற்று. அவர் மேனி ஒளி பெற்றது.
அடியார்க்கு தீங்கு செய்த மன்னன் இரவு உயிர் துறந்தான். மன்னருக்கு வாரிசுகள் இல்லாததால் ஒரு யானையிடம் மலர் மாலை தந்து அது யார் கழுத்தில் அதைப் போடுகிறதோ அவரே மன்னன் என்ற வழக்கத்தின்படி மூர்த்தியார் கழுத்தில் மாலை விழ மன்னரானார். திருநீறே திருமுழுக்காகவும், உத்திராட்சம் அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க அமைச்சர்கள் உடன்பட அனைவரும் ஒத்துக் கொண்டதால் மணிமகுடம் சூட்டப்பெற்று நெடுங்காலம் நீதி வழுவாது ஆட்சிபுரிந்து எம்பெருமான் திருவடி சேர்ந்தார்.
61. மெய்ப்பொருள் நாயனார்
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அவர்தம் வழியில் தோன்றியவர் மெய்பொருளார். அவர் சிவ வேடம் தரித்தவர் யாவராயினும் அவர்தம் கருத்தின் வழி பணி செய்யும் பண்பு கொண்டவர். உலகப் பொருள்களெல்லாம் இன்றிருந்து நாளை அழியும் பொய்ப் பொருள்கள். இவ் அழிகின்ற பொய்ப் பொருள்களை பொருளாக கருதாமல் திருநீறும் கண்மணியுமே மெய்ப் பொருள் என கருத்துக் கொண்டவர். சிவ வேடம் தரித்தவர்களை அவர்கள் குற்றம் குறை காணாது அவர் சிவ வேடத்தை அன்புடன் போற்றி வந்தார்.
திருக்கோயிலில் நடைபெற வேண்டிய எல்லா விழாக்களையும் சிறப்புற நடத்தியும் அடியவர்க்கு வேண்டியன நல்கியும் வாழ்ந்து வந்தார். முத்தநாதன் என்ற சிற்றரசன் சேதி நாட்டை வெல்ல பலமுறைப் படையெடுத்து தோற்று விட்டான். போர்வழியில் வெல்ல முடியாது எனக்கருதி வஞ்சகவலை விரித்து மெய்ப்பொருளாரை வெற்றிபெற திட்டம் தீட்டி செயல் பட்டான். நடு நாட்டின் மன்னனின் சிவபக்தியை அறிந்து அந்த சிவவேடத்தினாலேயே மன்னரை வீழ்த்த முடிவு செய்தான்.
முத்தநாதன் தன் மேனியெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். சடைமுடியினை பொருத்திக் கொண்டான். கையிலே கத்திவைத்த ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மெய்ப்பொருளார் அரண்மணை நோக்கி சென்றான். சிவனடியார் என்றதால் அனைவரும் வழிபட்டு வழிவிட மன்னன் உறங்கும் எல்லைவர சென்றான். அங்கு மன்னரின் மெய்க்காப்பாளர் தத்தன் மன்னர் உறங்குகின்றார். தாங்கள் காண இதுவல்ல நேரம் என்பதைக் கேட்ட முத்தநாதன் கோபத்தால் சப்தமிட்டு தத்தனை மீறி உள்ளே நுழைந்து விட்டான். மன்னன் உறங்க அவர் துணைவி கால் பகுதியில் அமர்ந்திருந்தார். அடியவரைக்கண்ட துணைவியர் அரசரை எழுப்பிவிட மன்னர் அடியாரை வணங்கியபடி எழுந்தார்.
மங்களம் பெருக எனக் கூறிய அடியவரிடம் மன்னர் அவர் இங்கு எழுந்தருளிய காரணத்தைக் கேட்டார். மண்மேல் இல்லாத ஆகமநூல் இது என்றார். மெய்பொருளார் அந்த ஆகமத்தைப் படித்து கடைத்தேற அருள் புரிய வேண்டி அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி தான் பணிவுடன் தலைகுணிந்து உபதேசிக்க வேண்டினார். முத்தநாதன் இதுதான் சமயம் என்று புத்தகத்தைப் பிரித்து வாளை எடுத்து அவர் முதுகில் குத்தினான்.
தன்னை மீறி அடியார் உள்ளே சென்றதிலிருந்து கவனித்து வந்த தத்தன் தன் வாளை உறுவி முத்தநாதனை வெட்டப் பாய்ந்தான். ‘தத்தா நமர்’ என்று தடுத்த மன்னன் தரையில் நிலை குலைந்தான். தத்தா அவர் நம் உறவினர். நீ இவருக்கு எந்த துன்பமும் இல்லாமல் ஊர் எல்லையில் கொண்டு விடவேண்டும் அதுவே நீ எனக்கு செய்யும் உதவி ஆகும் என்றார். மன்னர் ஆணைப்படி ஊர் எல்லையில் முத்தநாதனை விட்டுவிட்டு தத்தன் திரும்பிவரும்வரை தன் உயிர் போகமல் வைத்திருந்தார் மெய்ப்பொருளார். என் கொள்கை வெற்றிபெறச் செய்த தத்தா நீ உயர்ந்த மேலோய் என்றார்.
தன் அரண்மணையில் உள்ள அரசியல் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து “பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்துய்ப்பீர்” எனக்கூறி தரையில் சாய்ந்தார். இறைவன் தோன்றி அருள் புரிந்தார்.
62. வாயிலார் நாயனார் (தபோதனர்)
சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது.
இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேறி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து அன்பு எனும் அமுதை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டார். பல ஆண்டுகள் அகப்பூசை செய்து இறவனை மகிழ்வித்து இறையடி சேர்ந்தார்.
63. விறன்மிண்ட நாயனார்
சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர். அடியவர்பால் அளவிறந்த பற்றுடையவர். அடியவருக்கு என்று எதையும் செய்யும் அன்பர். பற்றுகளைத் துறந்து வாழ்பவர். அவர் தன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். தியாகேசப் பெருமானின் திருவடியை விட்டு நீங்கா மனம் கொண்டார். பெருமானை வழிபட்டு அடியார்களோடு தேவாசிறிய மண்டபத்தில் கூடி சிவ நெறி தழைக்க பணிபுரிந்து வந்தார்.
ஒருநாள் மண்டபத்தில் எல்லோரும் பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆரூரர் இவர்களைத் தொந்திரவு பண்ணக்கூடாது என ஒதுங்கி இறைவனை வழிபடச் சென்றார். இந்த அடியவர்களுக்கு சேவை செய்யும் நாள் என்றோ என நினைத்தார். ஒரு அடியார் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போவதைக் கண்ட விறன் மிண்டர் அவர் யார் என்றார். இறைவன் ஒலையைக்காட்டி அடிமை கொண்ட ஆரூரர் என்றனர். யாரானல் என்ன. அடியார் திருக்கூட்டத்தை மதியாரை இக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். உடனே மற்றவர்கள் என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். அவர் புற்றிடம் கொண்டாருக்கு வேண்டியவர். அவர் தம்பிரான் தோழர் என்றனர். அப்படியானால் அந்த ஆண்டவரையும் இக்கூட்டத்திலிருந்து விலக்குகின்றேன் என முழக்க மிட்டார். ஆண்டனையே ஒதுக்கி வைத்த வீரத்திருத்தொண்டர் விறன்மிண்டர்.
அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே தில்லைவாழ் அந்தணர் என்றார்.
ஆரூரர் திருவொற்றியூரில் தொண்டு செய்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த சங்கிலியரை மணம் முடிக்க சிவன் தூது சென்றது விறன்மிண்டருக்கு மிகுந்த வெறுப்பை ஆரூரர்மேல் ஏற்பட வைத்தது. அது இறைவனின் திருவிளையாடல் என்பதை அறியவில்லை. ஆனால் ஆரூரர் திருவாரூரில் இருப்பதால் அவருக்கு திருவாரூர் என்றாலே ஒருவித கசப்புணர்வு கொண்டிருந்ததால் ஆரூரர் இருக்கும்வரை இம்மண்ணை மிதிக்கமாட்டேன் என சபதம் செய்து விறன்மிண்டர் சிறிதுகாலம் கலிக்காமர் விருந்தினராக பெருமங்கலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே சிவத்தொண்டு செய்து வந்தார்.
திருவாரூரைச் சேர்ந்த எந்த ஒரு சிவனடியாரோ தம்மிடம் அருளோ பொருளோ கேட்க வந்தால் அவரை பரசாயுதம் கொண்டு கொன்றுவிடுவது என்று முடிவு கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு உதவி செய்யும்போது வலது பக்கம் பரசாயுதமும் இடது பக்கம் விபூதியையும் இருக்க அமர்ந்து சிவனடியார்களை வரவேற்பார். பரசாயுதத்தையும் விபூதியையும் அவர் மனைவிதான் கொண்டுவந்து வைப்பார். விறன்மிண்டரின் தணியாத கோபத்தை நீக்க பெருமான் முடிவு செய்தார்.
சிவபெருமான் அடியாரைப்போல் வேடம் கொண்டு விறன்மிண்டரின் வீடு சென்றார். அவர் துணைவியார் அடியாரைப் பார்ந்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகின்றீர்கள் எனக் கேட்க அடியவர் திருவாரூர் என்றார். அதைக்கேட்டதும் என் கணவருக்கு திருவாரூர் அடியார்களை பிடிக்காது. அவர்களை கொன்றுவிட பரசாயுதத்தை வலது பக்கத்திலும் விபூதியை இடது பக்கத்திலும் வைத்திருக்கின்றார். நீங்கள் ஊரை மாற்றிச் சொல்லுங்கள் என்றார். அன்னையே சிவனடியாராக இருந்து பொய் உரைப்பது இறைத்தொண்டிற்கு ஏற்றது அல்ல. நீங்கள் ஒரு புண்ணியம் செய்யுங்கள். பரசாயுதத்தை இடது பக்கமும் விபூதியை வலது பக்கமும் மாற்றி வையுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அந்த அம்மையாரும் அவ்வண்ணமே செய்தார்.
விறன்மிண்டரிடம் அடியார்வேடம் கொண்ட சிவன் வந்தபோது நீர் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றீர் எனக் கேட்டபோது திருவாரூர் என்றதும் விறன்மிண்டருக்கு அளவில்லா கோபம் வந்தது. அவர் பரசாயுதத்தை வலதுபக்கம் எடுக்க முயற்சித்தார். அது கையில் கிடைக்காமல் போகவே குனிந்து அது எங்கே எனப் பார்த்தார். இதைப் பயன் படுத்தி இறைவன் ஒடத் தொடங்கினார். அதற்குள் இடப்பக்கமிருந்த பரசாயுதத்தை எடுத்துக் கொண்டு அடியவரை துரத்தத் தொடங்கினார். இருவரும் திருவாரூர் எல்லையைத் தாண்டியிருந்தனர்.
விறன்மிண்டர் திருவாரூர் எல்லை மண்ணை மிதித்ததும் ஓடிக்கொண்டிருந்த அடியவர் நின்றார். திரும்பிய அவர் விறன்மிண்டரைப் பார்த்து இது திருவாரூர் மண் என்று கூற திகைத்த மிண்டர் தவறு செய்த காலை வெட்டிக்கொண்டார். இறைவன் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

No comments

Leave a Reply