சுரைக்காய் பயன்கள் | Bottle gourd health benefits in tamil

சுரைக்காய் பயன்கள் | Bottle gourd health benefits in tamil

Qries

– Advertisement –

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல உணவுப் பொருட்களை நம் முறையாக உட்கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை என்பது ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும். அதை தவிர்த்ததால் தான் இன்றைய காலத்தில் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு இருக்கிறோம். அனைவரின் இல்லங்களிலும் யாராவது ஒருவராவது தொடர்ச்சியாக மருந்து உண்ணும் நிலைக்கு தான் ஆளாகி இருக்கிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று எவ்வளவு பேசினாலும் இன்றைய சூழ்நிலையில் நோய்களுடன் வாழ்பவர்கள் தான் பலர். அப்படி நமக்கு ஏற்படக்கூடிய பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற கூடிய ஒரு அற்புதமான காயாக திகழக்கூடியது தான் சுரைக்காய். இந்த சுரைக்காயை நாம் எப்படி எல்லாம் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
சுரைக்காய் என்பது வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. இது வெயில் காலத்திற்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. காரணம் இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இதை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடல் குளிர்ச்சியாக புத்துணர்ச்சியாகவும் திகழும். சுரைக்காயில் புரோட்டீன், விட்டமின் பி3 பி5, பி6, சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
– Advertisement –

இந்த சுரைக்காயை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய எலும்புகள் வலுவடைகிறது. இதயம் பாதுகாப்பாக செயல்படுகிறது. சுரைக்காயில் உள்ள சத்துக்களால் புற்றுநோய் உருவாக்கும் செல்களை அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய செல்கள் உருவாக்குவதற்கும் இந்த சுரைக்காய் காரணமாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது. சுரைக்காய் ஜூசை அனுதினமும் சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் என்பது குறையும்.
சுரைக்காய் உடல் சூட்டை குறைக்க கூடிய ஒரு காயாக திகழ்கிறது. இதன் சதை பகுதியை சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதன் மூலம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது. சிறுநீர் கட்டி, நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகளும் குணமாவதோடு கல்லீரல் வீக்கத்தையும் இது குறைத்து நன்றாக செயல்பட வைக்கிறது. சுரைக்காய் சாற்றை நம்முடைய தலைமுடிக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் செம்பட்டை வராமல் கருமையாக வளரும். மேலும் நல்லெண்ணெயுடன் சுரைக்காய் சாறு சேர்த்து தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் நல்ல தூக்கமும் ஏற்படுகிறது.
– Advertisement –

இந்த சுரைக்காயை நாம் ஒரு கப் அளவிற்கு சாறாக எடுத்து ஒரு சிட்டிகை மட்டும் உப்பை சேர்த்து அருந்தினால் நாவரட்சி என்பது நீங்கும். மேலும் வயிற்றுப்போக்கு சரியாகிறது. சுரைக்காயை நம்முடைய உணவுடன் சேர்த்து மதிய நேரத்தில் உண்டு வந்தால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பித்தம் சமநிலை படுகிறது. கர்ப்பப்பை பலப்படுகிறது. கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வாக இது திகழ்கிறது.
மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கவும், உடல் எடை குறைக்கவும், அல்சர் புண்களை ஆற்றவும், வயிற்று வலியை சரி செய்யவும், உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும், அஜீரணம், வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை சரியாக்கவும் இந்த சுரைக்காய் உதவுகிறது. மேலும் உடலின் ஹீமோகுளோபின் அளவை சீராக்குவதற்கும் இது உதவுகிறது.
இதையும் படிக்கலாமே அழகான முகத்தையும் ஆரோக்கியமான தலைமுடியையும் பெற உதவும் பயோட்டின் பவுடர்
இவ்வளவு உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த சுரைக்காயை சிறிதளவு சாப்பிட்டு பார்க்கும் பொழுது கசப்பு சுவை ஏற்பட்டால் அதை சாப்பிடாமல் தவிப்பது நல்லது. மேலும் சுரைக்காயும் வெங்காயத்தைப் போல தான் நறுக்கி உடனோ அல்லது ஜூஸ் எடுத்தவுடனோ அதை சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் பாக்டீரியாக்கள் அதில் அதிக அளவில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. எளிதில் கிடைக்கக்கூடிய மலிவான காய்கறிகளில் ஒன்றான இந்த சுரைக்காயை நாமும் வாங்கி நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top