முருங்கை கீரை உளுந்த வடை எளிமையாக செய்வது எப்படி

முருங்கை கீரை உளுந்த வடை எளிமையாக செய்வது எப்படி

Qries

– Advertisement –

வடை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலாதியான பிரியம் உண்டு. அதிலும் இந்த வடை என்றால் கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள் அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியம் தரும்.
பொதுவாக முருங்கைக்கீரை சேர்த்து வடை செய்யும் பொழுது கடலைப்பருப்பை தான் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கைக் கீரையை வைத்து எப்படி உளுந்த வடை சுவையாக தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
– Advertisement –

முருங்கைக்கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – ஒரு கப்
உளுந்து – இரண்டு கப்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு – 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – இரண்டு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

முருங்கைக்கீரை வடை செய்முறை விளக்கம்:
முருங்கைக்கீரை வடை செய்வதற்கு முதலில் ரெண்டு கப் அளவிற்கு முழு வெள்ளை உளுத்தம் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து போதுமான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து குறைந்தபட்சம் 3 மணி நேரம் முதல் அதிகபட்சம் 5 மணி நேரம் வரை ஊற வைக்கலாம். பின்னர் முருங்கைக் கீரையை ஒரு கப் அளவிற்கு சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உளுந்து நன்கு ஊறி வந்த பின்பு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நீர் விடாமல் நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைப்பவர்கள் உளுந்தை ஃப்ரிட்ஜில் ஊற வைத்து எடுத்து அரைத்தால் மிக்ஸி விரைவிலேயே சூடாவதை தவிர்க்கலாம். உளுந்தை, வடைக்கு என்று அரைக்கும் பொழுது முடிந்தவரை தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் அரைப்பது நல்லது. அப்படியே தேவைப்பட்டாலும் ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரையுங்கள். அப்போது தான் வடை நன்கு உப்பலாக பொங்கி எழும்பும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.
– Advertisement –

பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். வடையில் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது ரொம்பவே நல்லது. இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த உளுந்த மாவில் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் நறுக்கிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:டாய்லெட் சுத்தம் செய்ய இதோ ஒரு எளிய வீட்டு குறிப்பு
இப்பொழுது சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளையும், தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது கையில் எண்ணெயை தடவி கொஞ்சம் போல் மாவை எடுத்து நடுவில் ஓட்டை போட்டு வடை தட்டுவது போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள். சூடாக இருக்கும் எண்ணெயில் ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து ரெண்டு புறமும் நன்கு சிவக்க வெந்து எடுத்து சுவைத்து பார்த்தால் அட்டகாசமான ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக் கீரை வடை நாவிற்கு விருந்தாக அமையும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top