நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.
நீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.
நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.
அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.
10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.
சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.