எச் – 695எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 2 பக்கம் 315-லும் மற்றக் குறிப்புக்கள் பக்கம் 443 – லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது –
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 7 எழுத்துக்கள் தேய்ந்துள்ளன. அவற்றில் 5ஆவது, 6ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன. கீழ் பகுதியில் தேய்ந்துள்ள எருது வகையைச் சேர்ந்த ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியும், பரமஞான குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது அடையாளப்படுத்த முடிகின்றன.
புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை மிருதுவான துணி அல்லது மரப்பட்டைகளின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ப + ர + மே + சி + (ஊ + னு) + ள், பரமே சி ஊனுள் எனப் படிக்கப்படுகிறது.
பரமே சி ஊனுள் என்ற சொற்களில் உள்ள ‘ப’ என்பது 9 ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர’ என்பது 12 ஆவது உயிர்மெய் எழுத்து, ‘மே’ என்பது 10 ஆவது உயிர்மெய் எழுத்து, ‘சி’ என்பது 3 ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஊ’ என்பது 4 ஆவது உயிர் எழுத்து, ‘னு’ என்பது 18 ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16 ஆவது மெய் எழுத்து ஆகியவையாகும்.
பரமே என்பதற்கு மேலானதே / மேம்பாடே எனவும், சி என்பதற்கு சிவம் – கடவுளின் திருவுருவ நிலை எனவும், ஊனுள் (ஊன் + உள்) – ஊன் என்பதற்கு உடல் / தசை / கொழுப்பு எனவும், உள் என்பதற்கு உள்ளம் / மனம் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
பொருள்: கடவுளின் திருவுருவ உடலும், உள்ளமும் மேலானதே.
அதற்குச் சான்றாகத் திருமூலர் அருளிய திருமந்திரம் கூறுவதாவது,
ஊனாய் உயிராய் உணர்அங்கி யாய்முன்னம்சேணாய்வான் ஓங்கித் திருஉரு வாய்அண்டத்தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்துஆள்முழு(து) அண்டமு(ம்) ஆகிநின் றானே – திருமந்திரம் – 374
பொருள்: உடலாக, உயிராக அது உணரும் உணர்வாக, உள் ஒளிரும் தீச்சுடராய், எட்டாத் தொலைவாய், விண்ணும் மண்ணும் அளக்க நின்ற திருவுருவமாய், உலகத்தைத் தாங்கும் அச்சாக, ஞாயிறாய், சந்திரனாய், அவை எல்லாவற்றையும் கடந்து, இவற்றை ஆளுகின்றவனாய்ப் பரம்பொருள் அண்டம் முழுவதும் கலந்து நிற்கின்றான்.
சிந்து சமவெளி முத்திரைகளில் சுருக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள மெய்ஞானத்தைப் பற்றிய தரவுகள் திருமந்திரம் விரிவாகக் கூறுவதை நோக்கும் போது, திருமூலரின் காலம் 3500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam