Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil

Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil

Qries

Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில்
🛕  சதுரகிரி தல வரலாறு:  சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
🛕 வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு  சடதாரி  என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
🛕 சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
Sundara Mahalingam
🛕 சிவபெருமான் அவனை தேற்றி, “நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி  மகாலிங்கம்  என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
🛕 தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
🛕 இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
🛕 இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது, மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
🛕 கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
🛕 இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோவில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோவிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோவிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
Sathuragiri Irattai Lingam
🛕  இரட்டை லிங்கம்:  ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
🛕 சிவபெருமானே! “தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள்”, என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும் என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
Sathuragiri Pilavadi Karuppar
🛕  பிலாவடி கருப்பு:  வணிகர் ஒருவருக்கு சிவன் கோவில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும் என்றார்.
🛕 வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை  பிலாவடி கருப்பர்  என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
Sathuragiri Periya Mahalingam
🛕  பெரிய மகாலிங்கம்:  நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்” என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
Sathuragiri Thavasi Parai
🛕  தவசிப்பாறை:  மகாலிங்கம் கோவிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோவிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில்  மஞ்சள் ஊத்து தீர்த்தம்  உள்ளது.
🛕 தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.
🛕 குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை  நவக் கிரக கல்  என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி” பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில்  வெள்ளைப்பிள்ளையார்  பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
Sathuragiri Sundaramoorthy Lingam
🛕  சுந்தரமூர்த்தி லிங்கம்:  கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை  கும்ப மலை  என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம்  சுந்தரமூர்த்தி லிங்கம்  எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்”, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்” என்று கூறுவர். சதுரகிரி கோவிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
🛕  பார்வதி பூஜித்த லிங்கம்:  சுந்தர மகாலிங்கம் கோவிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.
🛕 மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து  அர்த்தநாரீஸ்வரர்  ஆனார் என வரலாறு கூறுகிறது. பார்வதி, தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்.
🛕 இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
🛕 இக்கோவிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் வனகாளி கோவில் உள்ளது.
Sathuragiri Anandavalli
 லிங்க வடிவ அம்பிகை:  சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி” என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
Sathuragiri Theertham
🛕  சந்திர தீர்த்தம்:  சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் “சந்திர தீர்த்தம்” இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
🛕  கெளண்டின்னிய தீர்த்தம்:  சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு  பாவகரி நதி  என்னும் பெயரும் உண்டு.
🛕  சந்தன மகாலிங்க தீர்த்தம்:  இச்சதுரகிரியின் மேல் “காளிவனம்” என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள், பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
🛕 இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய  திருமஞ்சனப் பொய்கை  உண்டு.
🛕 காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட  பிரம்மதீர்த்தம்  ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட  பொய்கைத் தீர்த்தம், பசுக்கிடைத் தீர்த்தம், குளிராட்டித் தீர்த்தம்  போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன. மகாலிங்கம் கோவிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
🛕 மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள். பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
Sathuragiri Herbals
🛕  அபூர்வ மூலிகைகள்:  இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
🛕  நோய் தீர்க்கும் மலை:  சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
🛕 பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
🛕 தவிர கோரக்க முனிவரால்  உதகம்  என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
🛕 இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் “உதகம்” என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
Sathuragiri Hills Miracles in Tamil
🛕 சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
🛕 அதேபோல்  ஏர் அழிஞ்ச மரம்  என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
🛕 சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில்  கனையெருமை விருட்சம்  என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
🛕 இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
🛕 இவை எல்லாவற்றையும் விட மலையில் மிக அடர்ந்த பகுதியில் –  மதி மயக்கி வனம்  என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள், மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நாம் கேள்விப்பட்ட வரை, அருகில் இருக்கும் கிராமத்துக்காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
🛕 இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள், வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும், சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
Sathuragiri Malai Ragasiyam
🛕 திசைக்கு நான்கு கிரிகள் (மலை) வீதம், பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
🛕 மகாலிங்கம் கோவிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை  சஞ்சீவி மலை  என்கின்றனர்.
🛕 சந்தன மகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
🛕 பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சித்தர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
🛕 இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
🛕 மகாலிங்கம் கோவிலின் வடக்கே  ஊஞ்சல் கருப்பண சாமி கோவில்  உள்ளது.
🛕 சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
🛕 சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
Sathuragiri Hills Bus Route
🛕 மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
🛕 அல்லது, மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
🛕 அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
Sathuragiri Sundara Mahalingam Timings
🛕  திறக்கும் நேரம்:  காலை 6-12 மணி, மாலை 4-9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
🛕 மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க  கஞ்சி மடம்  உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ, கூழோ, பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
🛕 உங்கள் தேடல், பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால், இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.
 
Also read,

Sathuragiri Sundara Mahalingam Temple Address

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top