மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள்.
அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.