ராசி மண்டலத்தை காலபுருஷன் எனும் உருவமாகக் கொண்டால், மேஷ ராசி கபாலம் என்பதைப் போல், இந்த ரிஷப ராசி முகம் ஆகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சுக்கிரன் உங்களுக்கு வசீகர தோற்றத்தைத் தருவார். புத்தக வாசிப்பு உங்களுக்குப் பிடித்தமான ஒன்று.
ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வீர்கள். எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது தங்களுக்குப் பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது தங்களின் சித்தாந்தமாக இருக்கும். ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் புதன் வருகிறார். ஆகவே, எதையும் சூட்சுமமாகப் புரியவைப்பதில் சமர்த்தர் நீங்கள். உங்களின் எண்ணத்தை முகக் குறிப்பாலேயே எதிரில் உள்ளவர்களுக்கு உணர்த்திவிடுவீர்கள். அதேபோன்று, மற்றவர்களைக் கணிப்பதிலும் நீங்கள் கில்லாடி. பால்ய கால நண்பர்கள் உங்கள் தொழிலிலும் வாழ்விலும் கூட்டாகப் பயணிக்க வாய்ப்பு உண்டு. அவ்வப்போது பழைய விஷயங்களை அசைபோடுவது உங்களுக்குப் பிடிக்கும்.
உங்கள் ராசிக்கு 3-வது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி முயற்சி செய்து முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். எல்லோருக்குமே பெற்ற அன்னையிடம் பாசம் உண்டு. ஆனால் நீங்களோ, அதையும் தாண்டி அவரிடத்தில் பெரும் பக்தி கொண்டிருப்பீர்கள். அவருக்கு ஒன்று என்றால், துடித்துப்போய்விடுவீர்கள்.தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், உலகத்துக்கே ஒளி தரும் சூரியனைப் போல், உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். அதற்காக, நமக்கு எதிரிகளே இல்லை என்றும் நீங்கள் புளகாங்கிதம் அடையமுடியாது. காரணம், உங்கள் பகைவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஆமாம், உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. உங்கள் பேச்சு, செயல் அனைத்துக்கும் நீங்களே எதிர்பாராதபடி ஒரு பக்க விளைவு ஏற்படும். ஆகவே, பேசும்போதும் செயல்படும்போதும் கனிவும், அதீத கவனமும் தேவை.
உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்றிருக்கும் போது நீங்கள் பிறந்திருந்தால், திரைத் துறையில் சாதனை படைப்பீர்கள். இயற்கையான சூழலில் நன்றாக உறங்குவீர்கள். உங்களின் வாழ்க்கைத் துணைவர் உங்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைச் செய்தாலும் உங்கள் நன்மைக்காகவே இருக்கும். சிறு வயதில் அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைந்திருப்பீர்கள். எனினும், அதன் மூலம் கிடைத்த அனுபவம் இனி உங்களுக்கு உதவியாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.
ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்; இனியவை யாவும் நடந்தேறும். அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படும் சூழலில், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுங்கள். பிரச்னைகள் மெள்ள மெள்ள விலகும். புராணங்களில் பசு வழிபட்ட திருத்தலங்கள் குறித்த தகவல்கள் ஏராளம் உண்டு. அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதாலும் நலன்கள் கைகூடும்.