பிருகு உணர்ந்த உண்மை – Sage Bhrigu Perceived Truth in Tamil

பிருகு உணர்ந்த உண்மை – Sage Bhrigu Perceived Truth in Tamil

Qries

Sage Bhrigu Perceived Truth
ப்ரிகு உணர்ந்த உண்மை
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
நாம் யார்? நம்மைப் படைத்தவன் யார்? நம்முடைய உண்மை இயல்பு என்பது என்ன? நம் கண் எதிரே நாம் காணும் உலகம் என்பது என்ன? வேதங்கள் கூறும் தெய்வீகத்தை உணருவது எப்படி? தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்தக் கேள்விகளைக் கேட்காத நபர்கள் வெகு குறைவு.
முன்னொரு காலத்தில் பிருகு என்கிற மாணவனும் இந்தக் கேள்விகளைக் கேட்டதோடு அல்லாமல் கேள்விகளுக்கான பதிலையும் முனைப்புடன் தேடினான். கேள்விகளையும் பதிலையும் முழுமையாக உணர்ந்து தெளிந்தபோது, இந்த உலகமே அவனை அறிந்தது.
குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று, அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தபோது, தன் தந்தையும், குருவுமான வருணமுனியை அணுகி தனக்கு உதவி செய்ய வேண்டினான். ஆர்வமுடன் ஆன்மீகத் தேடலை மேற்கொண்டுள்ள தன் மகனுக்கு முதலில் மனித உடல், உள்ளம், எண்ணம், புத்தி ஆகியவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ‘ஐந்து கோச விவேக’ தத்துவ நிலைகளை விளக்கினார் குரு. (கோசம் என்பது கூடு).
ஐந்து புலன்கள் அடங்கிய உடல் அன்னத்தால் ஆனது. இது அன்னமயக்கோசம். அதை அடுத்து, உடலை இயக்கும் சூட்சும சக்தி ப்ராணமயக்கோசம். உடல், புலன்கள் வழியாக ஏற்படும் அனுபவ உணர்வுகளை உணர்த்துவது மனோமயக்கோசம். எண்ணங்களைத் தெளிவு செய்வது விக்னாயமயகோசம். இந்த நான்கு கோசங்களின் அனுபவங்களின் பின்னனியில் இருப்பது ஆனந்தமயக்கோசம். இந்தக் கோசங்கள் ஒன்றுடன் ஒன்று இயல்பாகவே பின்னிப் பிணைந்து சூட்சுமத்தில் இயங்குகின்றன. இது தெய்வீகக் கலவை. நாம் பார்க்ககூடிய அன்னமயக்கோசத்தைத் தவிர மற்ற கோசங்கள் மறைந்துள்ளன. உணரமுடியும் ஆனால் பார்க்க முடியாது, இந்த ஐந்து கோசங்களின் துணையோடுதான், நாம் நம் உடல் வழியாக நம் புலங்களுக்குப் புலன்படும் இந்த உலகம் மற்றும் கற்பனை அனுபவங்களைப் பெறுகிறோம்.
‘புலன்களான கண், காது, மனசு, வார்த்தைகள், உணவு மற்றும் ப்ராணன் ஆகியவை நீ கேட்ட உண்மையை உணர்ந்து கொள்வதற்கு உதவி செய்யும் கருவிகள். இந்தக் கருவிகள் அனைத்தும் நீ அறிய விரும்பும் பரப்ரம்மத்திலிருந்து உருவானவை. அதிலேயே கரைந்து மீண்டும் உருவாகுபவை. ‘எதனிடமிருந்து உயிர்த்திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகின்றனவோ, முடிவில் எதைச்சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம். இதுவே நீ தேடும் தெய்வீகம். இதை அடைய கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முனைப்புடன், நம்பிக்கையுடன் தேடினால் நீ தேடும் தெய்வீகத்தை அறிவாயாக. இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் உன் தேடலை மேற்கொள்’ என்று அறிவுரை வழங்கி ஆசீர்வதித்தார்.
வேத கல்வி பயின்ற பிருகு தன் குருவின் அறிவுரையை ஏற்றுத் தவம் புரியத் தொடங்கினான். முதலில் அன்னமயக்கோசத்தில் தொடங்கினான். உடல் கருவிகள் அனைத்தும் செயல்பட அன்னம் (உணவு) தேவை அல்லவா? உணவிலிருந்துதான் அனைத்து உயிர்களும் பிறக்கின்றன. உணவாலே வளர்கின்றன, உணவாலே மடிகின்றன. மீண்டும் உணவாலே பிறக்கின்றன. அந்தவகையில் உணவே தான் தேடும் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் குருவிடம் சென்று தான் உணர்ந்ததை எடுத்துரைத்தான். ‘ப்ரிகு, நீ யோசிக்கத் தொடங்கிவிட்டாய். மேலும் முயன்று பார்’ என்று மீண்டும் தொடர்ந்து தவம் செய்ய சொல்லியனுப்பினார்.
ப்ரிகு தன் தவத்தைத் தொடர்ந்தான். முனைப்புடன் தவம் செய்ய உதவுவது எண்ணங்கள் அல்லவா? அப்படிப்பார்த்தால் எண்ணங்களேதான் எல்லாம்! அனைத்தும் எண்ணங்களாலேயே தோன்றி, வளர்ந்து, மறைந்து, மீண்டும் தோன்றுகின்றன. ஆகவே இதுதான் பரப்ரம்மம். உடனே தான் உணர்ந்ததை தன் குருவிடம் விவரித்தான். குருவோ புன்னகைத்தார். மீண்டும் தவம் செய்யப் பணித்தார்.
ப்ரிகுவும் தவத்தைத் தொடர்ந்தான். இந்த முறை ப்ராண சக்திதான் பரப்ரம்மமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தான். ஏனென்றால் ப்ராண சக்திதான் உயிர்களை உருவாக்குகிறது. ப்ராண சக்திதான் உயிர்களை காக்கிறது. ப்ராண சக்தி இல்லையென்றால் உயிர் வாழமுடியாது. ஆகவே ப்ராண சக்திதான் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான். இதை தன் குருவிடமும் தெரிவித்தான். ப்ரிகுவின் முனைப்பையும் முயற்சியையும் மேலும் பாராட்டிய குரு அவனை மீண்டும் முனைப்புடன் தவம் செய்ய அனுப்பினார்.
மாணவன் ப்ரிகு தன் முயற்சியை விடவில்லை. பரப்ரம்மம் என்பது என்னவாக இருக்கும்? எது இந்த கேள்விக்கு விடை அளிக்கும்? கேள்வியையும் பதிலையும், அனைத்தையும் உணர வைப்பது ஞானம் அல்லவா? ஒரு வேளை ஞானம்தான் பரப்ரம்மமா? ப்ரிகு தன் குருவிடம் தான் உணர்ந்ததைக் கூறினான். மாணவனின் முன்னேற்றத்தை கவனித்த குரு, தவத்தை மேலும் தொடரச் சொன்னார்.
ப்ரிகு சிறிதும் சோர்வடையவில்லை. தன் முயற்சியிலிருந்து தளரவில்லை. மாறாக தன் ஆர்வம் அதிகமாவதை உணர்ந்தான். இந்த முறை இன்னும் முனைப்புடன், நம்பிக்கையுடன் ஆழமாக தவத்தில் இறங்கினான். தான் இதுவரை உணராத ஒன்று என்னவாக இருக்கும்? தன்னை மறந்து, இந்த உலகை மறந்து, முழுமையாக தவத்தில் மூழ்கினான்.
திடீரென்று இருள் விலகியது. இந்த முறை, தன்னையும், தன்னை சுற்றியுள்ள உலகையும் அனைத்தையும் தானாகவே, தன்னுள்ளே உணரமுடிந்தது. தன்னை உணர்ந்தபோது தமையனையும் உணர முடிந்தது. அனைத்து அனுபவங்களையும் உணரவைப்பது எது? அனுபவங்கள் வித்யாசமானாலும், அவைகளோடு கலக்காமல், அவைகளிருந்து விலகி நின்று, அனைத்து அனுபவங்களையும் ஒளிர்வீப்பது ‘உள்ளுணர்வு’. இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்ல. இதுவே சித், இதுவே சத் இதுவே ஆனந்தம். ஆத்மன். ப்ரம்மம். தெய்வீகம்.
ஆத்மனுக்குள்ளேதான் நம் உடல் தோன்றுகிறது. உடல் புலன்கள் வழியாக இந்த உலகம் தோன்றுகிறது. ஆத்மன் ஒன்றேதான் உண்மை. மற்றைவையெல்லாம் நாம் உணரும் தோற்றங்கள். இந்த ஆத்மன்தான் பரப்ரம்மம். இதுவே தன் உண்மை இயல்பு. இந்த ப்ரம்மம் இல்லாவிட்டால், எந்த அனுபவமும் இல்லை. அனுபவமில்லாம் எந்த உலகமும் இல்லை. ஆத்மனில்தான் அனைத்தும் தோன்றுகின்றன, வாழ்கின்றன, மறைகின்றன. இந்த உண்மை சொரூபமே பரப்ரம்மம் என்ற உண்மையை உணர்ந்தான் ப்ரிகு. அவனுள் இனம் புரியாத ஒரு ஆனந்தத்தை உணர்ந்தான். சத் சித் ஆனந்த நிலையே பரப்ரம்மம். இந்த ஆனந்த நிலையே அனைத்து உயிர்களின் உண்மை சொரூபம். உயிர்கள் ஆனந்தமாக உருவாகின்றன, ஆனந்தத்தை உணர வாழ்கின்றன, ஆனந்தமாக மடிகின்றன, மீண்டும் ஆனந்தமாக உருவாகின்றன என்ற உண்மை விளங்கியது.
இந்த உண்மையை தன் குருவிடம் விவரித்தபோது, அவர் அவனை ஆரத் தழுவிக்கொண்டார். ‘ப்ரிகு நீ உண்மையை புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், உணர்ந்து கொண்டது உன்னை உயர்த்திவிட்டது. ப்ரம்மத்தை உணர்ந்தவன் ப்ரம்மஞானி. ‘ப்ரம்ம விதாப்நோதி பரம்’. ப்ரம்மத்தை உணர்ந்தவன் மிக உயர்ந்த நிலையை, ப்ரம்ம நிலையை அடைகிறான். ப்ரம்மத்தோடு ஒன்றிப்போகிறான். ‘சத்யம், ஞானம், அனந்தம் ப்ரம்ம’. ப்ரம்மம் பரமானந்தம். அது ஒன்றே உண்மை (சத்யம்), அனைத்தையும் உணர்ந்தது (ஞானம்), அது ஒன்றே எல்லை இல்லாதது-கோடி (அனந்தம்). இதுதான் இந்த உலகின் மிக உயர்ந்த கல்வி.

வேதங்கள் இதை,
‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் தமசஸ்து பாரே, தாமேவ விதித்வா அதி ம்ருத்யோமேதி, நான்ய பந்தா வித்யதே அயனாய’ என்று வர்ணிக்கின்றன. அதாவது, சூர்யனைப் போல ஸ்வப்ரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்மன்தான் தன் சுய ரூபம் என்று உணர்பவனுக்கு இறப்பில்லை. இதை விட மிக உயர்ந்த கல்வி இந்த உலகில் வேறு இல்லை. இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு பிறப்பு-இறப்பு எதுவும் இல்லை. இன்பம்- துன்பம் எதுவும் இல்லை. சதா ஆனந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வீக நிலையை அடைகிறான். சர்வ சாந்த நிலை. அனைத்தையும் கடந்த நிலை. இதுவே வாழும்போதே முக்தி. ப்ரம்மானந்த நிலை. இந்த நிலையை நீ அடைந்து விட்டாய்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.
இந்த உரையாடல் தைத்தீர்ய உபநிஷத்தில், ப்ரிகுவல்லி என்கிற அத்யாயத்தில் காணப்படுகிறது. இது யாரால் எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது தெரியாது. ஒரு காலத்தில் தைத்ரி என்ற ஒரு பட்சி ரிஷிகள் உபநிஷத் உண்மைகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டபோது கேட்டுக்கொண்டு, பின்னர் மனித இனம் மேம்பட்ட இந்த இந்த உண்மையை மற்ற முனிவர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் அந்தப் பதிவே பின்னர் தைத்தீர்ய உபநிஷத் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு புராணக் கதை கூறுகிறது.
தைத்தீர்ய உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த உரையாடல் ப்ரிகுவுக்கும் அவனது குருவுக்கும் நடந்த சாதாரண உரையாடல் அல்ல. பரப்ரம்மத்தை உணர தேவைப்படும் நிலைகளை, வழிமுறைகளை, பயிற்சிகளை, நிதர்சனமாக எடுத்துரைக்கும், கற்றுத்தரும் சாதனமாக இந்த உரையாடலை நாம் பார்க்கவேண்டும். அறியாமையில் தவித்த ஒரு சிறுவன், ப்ரம்ம ஞானத்தை உணர மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் இது.
நம் உண்மை ஸ்வரூபம் பற்றிய தெளிவு இல்லாமல் நம்மைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லாமல், உடல், உள்ளம் கொண்ட கலவையாக நம்மை கற்பனை செய்துக் கொண்டு, உடல்-உள்ளம் கலவை செய்யும் தவறுகள் எல்லாம் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு, அறியாமையில் உழன்று வருகிறோம். உண்மையில் நாம் தெய்வீகப் பிறவிகள் என்பதை மறந்து, தெய்வீகத்தை தேடி அலைகிறோம். ‘சம்சாரம்’ என்கிற சிக்கல்களில் கிக்குன்று அல்லல்படுகிறோம்.
முதலில் கண்ணுக்குப் புலப்படும் உடலிலிருந்து தொடங்கி, புலப்படாத சூட்சும கோஸங்களைக் கடந்து அனுபவ ரீதியாக ப்ரம்மத்தை உணர மாணவன் ப்ரிகு மேற்கொண்ட ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தவம், இவைகளின் பலனாக அவன் உண்மையை உணர்ந்த விதம் ஆகியவை நமக்கு ஒரு பெரும் வழிகாட்டியாக அமையவேண்டும். இதுவே தைத்தீர்ய உபநிஷத் நமக்குக் கற்றுத்தறும் பாடம்.
தன்னை உணர்ந்த ப்ருகுவை இந்த வையகமே உணர்ந்து பாராட்டுகிறது. சரித்திரம் படைத்த ப்ரிகு பிற்காலத்தில் சப்த ரிஷிகளில் ஒருவராக உயர்ந்து பல நூல்களை, குறிப்பாக ‘ப்ரிகு சம்ஹித’ என்கிற ஜோதிஷ நூலை மனிதகுல உயர்வுக்கு அளித்துச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
Also, read

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top