Ashtavakra Gita in Tamil – அஷ்டாவக்ர கீதை

Ashtavakra Gita in Tamil – அஷ்டாவக்ர கீதை

Qries

Ashtavakra Gita in Tamil
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை  அமைகிறது.
ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும் பாதை. இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின் சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது தேவையில்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது சிறந்த வழி. உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தைதான் பல யுகங்களாக வலியுறுத்தி வருகின்றன.
தன் உண்மை நிலையை உணரத் துடித்த ஒரு மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார். இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது. யார் அந்த மன்னன்? யார் அந்த குரு? என்ன தத்வம் அது?
ஜனகன் (ராமாயண நாயகி சீதா தேவியின் தந்தை) ஒரு நேர்மை தவறாத மன்னன். மிதிலையின் சக்கரவர்த்தி. ராஜரிஷி. சகல சாஸ்த்ரங்களைக் கற்ற பண்டிதன். சனாதன தர்மங்களை கடைபிடித்து ராஜபரிபாலனை செய்துவந்தான். மக்கள் ஆனந்தமாக வாழ்ந்தனர். இந்த மன்னன் வாயிலாக ஒரு அபாரமான தத்துவத்தை உலகத்துக்கு அளித்தார் இவரின் குரு அஷ்டாவக்ர மாமுனி. இது ரிக் வேதத்தின் சாரமான மாண்டூக்கிய உபநிஷத்தில் வெகு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்றால் என்ன என்பதன் நிதர்சன தத்வத்தை மனித குலத்துக்கே விளக்கும் முதல் காவியம் இது.
ஜனகன் ஒரு நாள் தன்னை மறந்து கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடி வந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான். மிதிலை நாட்டை கைப்பற்ற அண்டை நாட்டு அரசன் ஒருவன் படையோடு வந்து விட்டான் என்பதுதான் அது. ‘மன்னா, போருக்காக நம் படைகள் தயார் நிலையில் உள்ளது. நீங்கள் வந்து தலைமை ஏற்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றான் சேவகன். குழம்பிப் போன ஜனகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘போரா? இது எப்படி சாத்தியம்? எனக்குத்தான் எதிரிகளே இல்லையே, வந்திருக்கும் எதிரி யார்?’
இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு போருக்குத் தயாரானான். கடும் போர் நிகழ்ந்தது. எதிரி மிக பலசாலி, திறமைசாலி. போரில் ஜனகன் தோற்றான். வென்ற மன்னன் ‘இந்த நாடு இப்போது எனக்குச் சொந்தம். ஜனகா நீ நல்லவன் அதனால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஆனால் நாடு கடத்துகிறேன். எல்லாவற்றையும் விட்டு வெளியேறு’ என்று ஆணையிட்டான். தரும நெறி தவறாத ஜனகன், தோல்வியை ஏற்று நாட்டை விட்டு வெளியேறினான். தனக்கு நேர்ந்த அநீதியை எண்ணிப் பொருமினான். செல்லும் இடம் தெரியாது அலைந்தான். ஒரு காட்டில் தஞ்சம் புகுந்தான். மனச்சோர்வில் புத்தி தடுமாறியது. உண்ண உணவின்றி அலைந்து மயங்கி விழுந்தான்.
மயக்கம் தெளிந்தபோது, ஒரு காட்டுவாசி கும்பலிடம் தான் சிக்கிக் கொண்டுள்ளதை உணர்ந்தான். அவர்களுக்கு ஜனக மன்னனை அடையாளம் தெரியவில்லை. வேறு மொழி பேசினார்கள். புரியவில்லை. வயிறு நிறைய உணவு தந்து மன்னனை ஒரு பலிபீடத்தில் கட்டி நரபலி இடுவதற்கு தயாரானார்கள். ஜனகன் எவ்வளவு மன்றாடியும் அவர்கள் மசிவதாக் தெரியவில்லை. கொடூரமான முகத்தைக் கொண்ட ஒருவன் ஒரு பெரிய கத்தியைக் கொண்டுவந்து ஜனகன் தலைமேல் நிறுத்தி வெட்டுவதற்கு ஓங்கினான். மரண பயத்தில் ஜனகன் கண்களை மூடிக்கொண்டு உரக்க ‘ஐயோ, காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று ஓலமிட்டான்.
அடுத்த க்ஷணம் விழித்துப் பார்த்தால், தான் தன் அரண்மனையில்  கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடப்பதையும், தன்னைச் சுற்றி தன் சேவகர்கள் கவலையுடன் நிற்பதையும் கண்டான். முதலில் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டான். அட, இவ்வளவு நேரம் தான் கண்டது கனவா? அல்லது நிஜமா? அப்படியென்றால் எது நிஜம்? இப்போது எதிரே பார்ப்பது என்ன, சற்று முன் கனவில் பார்த்தது என்ன? எது உண்மை?’ என்று தன் மனதுக்குள் குழம்பிப் போனான். தன் மந்திரிகளை அழைத்துத் தன் அனுபவங்களை விவரித்தான். ‘எது உண்மை?’ என்று அனைவரையும் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. ‘மன்னனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் எவருக்கும் பரிசு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. பலர் வந்தனர். ஜனகனை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிதிலையின் அருகில் உள்ள ஒரு காட்டில் வாழ்ந்து வந்தார் கஹோத முனி. வேத சாஸ்திரங்கள் கற்றவர். எளிய குருகுல ஆசிரமம் நடத்தி வந்தார். மகப்பேறு வேண்டி தவம் இருந்து புத்ர வரம் பெற்றார். மனைவி சுஜாதா கருவுற்றாள். கஹோத முனி தன் சீடர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது சுஜாதாவும் அருகில் இருப்பாள். அவள் கருவில் இருக்கும் சிசுவும் இந்தப் பாடங்களை உன்னிப்பாகக் கேட்டு வந்தது. பரமேஸ்வரன் அருளால் உருவான தெய்வீகக் கருவல்லவா அது, ஞானத்தில் ஜொலித்தது. தன் தந்தை சொல்லித்தரும் பாடத்திலேயே தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தது. ஒருநாள் வெகுண்டு போன தந்தை, தனக்கு பிறக்கபோகும் மகவு என்றுகூட பாராமல், ‘அஷ்ட வக்ரங்களோடு’ பிறக்க சாபமிட்டார்.
அஷ்ட வக்ரங்களோடு (உடலில் எட்டு கோணங்கள்) பிறந்த குழந்தைக்கு ‘அஷ்டாவக்ரன்’ என்ற காரணப் பெயரே நிலைத்தது. மனிதர்களில் உள்ள அஷ்ட வக்ரங்களை களைவதற்கு உதவி செய்து வந்ததால் தெய்வப் பிறவியான இவருக்கு அஷ்டாவக்ரர் என்ற புனைப்பெயர் வந்தாகவும் சில புராணங்களில் கூறப்படுகிறது. பெயர் இதுவானாலும் தந்தையை விட சிறந்த புத்திமானாக விளங்கினான் சிறுவன் அஷ்டாவக்ரன். இந்த நிலையில் ஏழ்மையில் வாடிய கஹோத முனி, ஜனக மன்னனின் சந்தேகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைத் தீர்த்து அவன் தரும் பரிசை பெற எண்ணி மிதிலை சென்றார். அங்கே அவரும் தோற்று சிறைச்சாலைக்குச் செல்லவேண்டியாகிவிட்டது.
நாட்கள் பல சென்றன. சென்ற கணவன் நெடுநாளாகியும் திரும்பவில்லையே எனக் கவலையுற்ற சுஜாதா, தன் மகன் அஷ்டாவக்ரனை தன் தந்தையைத் தேட அனுப்பினாள். தன் தந்தையின் நிலையை ஞானத்துள் உணர்ந்த அஷ்டாவக்ரன் மிதிலைக்குச் சென்று ஜனகனின் சந்தேகத்தை தான் தீர்ப்பதாக அறிவித்தான், இதற்கு இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான். “மன்னன் தன்னை குருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்” என்பதே இந்த நிபந்தனைகள்.
வயது குறைந்து இருந்தாலும் இவ்வளவு திறமையுடன் பேசும் சிறுவனைக் கண்டு அசந்து போன ஜனகன், அஷ்டாவக்ரனை தன் குருவாக மனதார ஏற்றுக்கொண்டான். கடும் நிஷ்டைகளோடும், நிபந்தனைகளோடும் இந்தப் புதிய குரு-சிஷ்ய பாரம்பரியம் தொடங்கியது. உண்மையை உணரத் துடித்த மன்னன் பல இன்னல்களை ஏற்று, தன்னை வருத்திக் கொண்டு தன் இளம் குருவிடம் பாடம் கற்றான்.
அஷ்டாவக்ரனும் ஜனகனும் பரிமாறிக்கொண்ட கேள்வி பதில்கள்தாம், காலத்தால் அழியாது இன்றும் நம்மிடையே ஆன்மிக பாரம்பரியத்தின் மகுடமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. இளம் குரு மாண்டூக்ய உபநிஷதத்தை போதித்தான். தற்போது நம்மிடையே இருப்பதாகக் கருதப்படும் 108 உபநிஷத்துக்களிலேயே மாண்டூக்ய உபநிஷத்துதான் சிறியது. பன்னிரெண்டு ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது. ஆனால் மனிதனின் அனுபவ நிலைகள் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை மிகத் தெளிவாக இந்த உலகிற்கு அளித்துள்ளது இந்த உபநிஷத்து. முதல் முறையாக, இந்த உபநிஷத்துவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த ப்ரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்த்ரத்துக்கும் மனித உயிர்களுக்கும் இருக்கும் நெருங்கிய பந்தம் பற்றிய விளக்கம் அளித்தார் குரு அஷ்டாவக்ரர். ஜனகனின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமன்றி இந்த மனித குலமே பயன்பெற அவர் ஒரு கீதையையே படைத்துள்ளார்.

ஜனகனின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அஷ்டாவக்ரர் சொல்லித்தந்த பதில்கள் இதோ:
மனிதன் மூன்று நிலைகளில் ஏற்படும் அனுபவங்கள் வழியாக தன்னை சுற்றியுள்ள உலகை தெரிந்துகொள்கிறான். முதல் நிலை விழித்திருப்பது. இது ‘விஸ்னவார’ நிலை. நாம் விழித்திருக்கும்போது நம் ஐம்புலன்கள் மற்றும் மனம் வழியாக நாம் உணரும் அனுபவங்கள். (இதற்கு பிரதிக்க்ஷை அனுபவம் என்று பெயர்).
அடுத்தது கனவு நிலை (இது ‘தேஜச’ நிலை). இந்த நிலையில் ஐம்புலன்கள் வழியாகத் தோன்றும் அனுபவங்கள் அடங்கி விடுகின்றன. மனம் மட்டும் செயல் படுகிறது. மனத்திரையில் பிரதிபலிக்கும் கனவிலும் நமக்கு ஒரு புதிய உலகம் தெரிகிறது. பல விஷயங்களை உணர்ந்து அனுபவிக்க முடிகிறது. ஆனால் கனவு தெளிந்தபின், நாம் விழித்தெழும்போது கனவில் கண்டவை அனைத்தும் மறைந்து விடுகின்றன.
மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலை. (இது ‘பிரக்ஞ’ நிலை). இங்கே ஐம்புலன்களும் மனமும், எண்ணங்களும், புத்தியும் அடங்கிவிடுகின்றன. இந்த நிலையில் நமக்கு என்ன நடந்தாலும் தெரிவதில்லை. நம் உடலையும் கனவுலகையும் விட்டு விலகி நிற்கிறோம். இந்த நிலையிலிருந்து நம்மை தட்டி எழுப்பி மீண்டும் முதல் நிலைக்கு கொண்டுவருவது தெய்வீக சக்தி.
முதல் மூன்று நிலைகளையும் கவனித்து வரும், இந்த மூன்று நிலைகளையும் அனுபவத் தோற்றங்களை ஒளிர்வித்து உணர்த்தும் ‘சாட்சி’ இது. இதுவே ஆத்மன். எப்பொழுதும் ஆழ்ந்த அமைதி நிலையில், ஸூர்யனாக, ஸ்வயப் பிரகாச ஜோதியாக ஒளிர்ந்து, உடல், மனம், எண்ணம், புத்தி ஆகியவைகளை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் ஆத்ம ஜோதி. பரப்பிரம்மம். இதைத்தான் உண்மையான ‘நீ’ என்று புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜனகனுக்கு விளக்கம் அளித்தார்.
அஷ்டாவக்ர முனி தொடர்ந்தார். ‘ஜனகா, உண்மை சொரூபமான ஆத்மனாகத்தான் இந்த மூன்று நிலைகளிலும் ஒளிர்விக்கப்படும் அனுபங்களை உணர்கிறாய். உனக்குள் ஆத்மன் இல்லை. ஆத்மனுக்குள்தான் உடல், மனம், எண்ணம், புத்தி சேர்ந்த கலவை ஒளிர்ந்து உலக அனுபவங்களை உணர்கிறது. ஆகவே ஐம்புலன்கள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ அல்லது உன் மனம், எண்ணங்கள், கற்பனைகள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ, அதைபற்றிய ஞாபகமோ அல்லது கனவுலகில் நீ உணரும் அனுபவங்களோ எதுவும் நிலையானது அல்ல. இவை அனைத்தும் அனுபவங்களின் அடிபடையில் தோன்றும் தோற்றங்கள். தோன்றி மறைபவை. அவை உண்மை அல்ல. ஆத்மன் ஒன்றுதான் உண்மை. நீ பார்க்கும் இந்த உலகையே ஒளிர்விக்கும் பிரம்மன். ஆத்மனை உணரும்போது உன் உண்மை சொரூபத்தை உணருகிறாய். உன்னைப் படைத்தவனை உணருகிறாய்’.
இந்த உண்மையை உணர இன்னுமொரு ஒரு ரகஸ்யத்தை சொல்கிறேன். நான் விளக்கிய அனுபவ நிலைகளைக் குறிக்கும் ஒரு சொல்லை தவ நிலையில் த்யானிக்கும் போது நீ ஆத்மனை உணரத் தொடங்கலாம். அதுதான் ‘ஓம்’. இந்தச் சொல்லில் நான்கு சப்தங்கள் உள்ளன. அ, உ, ம், அஹ. கடைசி சப்தம் (சப்தமே அல்ல, ஆழ்ந்த அமைதி) பரிசுத்தமான, பூர்ண நிலையை குறிக்கிறது. அனைத்து சப்தங்களையும் தன்னுள் அடக்கியது. இது ஆதி-அந்தம் இல்லா நிலை. அதுதான் ஆத்மன், உண்மையான ‘நீ’. முதல் சப்தம் விழித்திருக்கும் நிலையையும், இரண்டாவது கனவு நிலையையும், மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலையையும், நான்காம் நிலை ஆழ்ந்த அமைதியில் ஜோதியாக ஜொலிக்கும் ‘ஆத்ம சொரூபமான உண்மையான உன்னையும்’ குறிக்கிறது.
நீ கேட்ட கேள்விக்கு விடை இதோ. நீ நேரடியாக உன் புலன்களின் வழியாக உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை, கனவில் நீ உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை. இந்த அனுபவங்களை உணர்விக்கும், ஆத்மஜோதியான ‘நீ’ ஒன்றே உண்மை. ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும்  புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி ஜனக சக்ரவர்த்திக்குப் போதித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் மனித சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. இந்த ‘தன்னிலை உணரும்’ தத்துவத்தை அருளிய அஷ்டாவக்ர மாமுனியையும் அவரது சீடன் ஜனகனையும் இந்த உலகம் என்றென்றும் மறக்க முடியாது.
அஷ்டாவக்ர மஹாகுருவின் உதவியால் ஜனகராஜன் தன்னை, தன் உண்மை சொரூபத்தை உணரமுடிந்தது. அதனால் அவரை இந்த உலகம் அறிந்துகொள்ள முடிந்தது. இதைப்போல பின்னர் வந்த குருமார்கள் ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் போன்றோர் தங்கள் குருமார்களின் உதவியால் தங்களை உணர்ந்ததால் இந்த உலகிற்கு வேத சாராம்ஸங்களைத் தர முடிந்தது. பல தத்துவ போதனைகளைத் தர முடிந்தது. பல பாரம்பரியங்களை உருவாக்க முடிந்தது. அவர்களை இந்த உலகம் மறக்கவேமுடியாது. மனிதகுல சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற இவர்கள் நம் வழிகாட்டிகள்.
இந்த உண்மை நிலையை, ‘தன்னை’ தானே அறிவது சுலபமான காரியம் அல்ல. உணர்வுகளையும், உள்ளத்தையும், எண்ணத்தையும் பிராணத்தையும் அடக்கி, வேத சாஸ்திரங்களில் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை கலந்த முனைப்புடன் முயற்சி செய்யவேண்டும். முன்காலத்தில் இருந்த குரு பாரம்பரியத்தில் குருமார்கள்  தத்துவ போதனைகளை மட்டுமே அளிப்பர். அவைகளை உணர வழிமுறைகளை சொல்லித்தருவர். ஆனால் சீடர்கள் இவைகளை உள்வாங்கி, தாமாகவே முயற்சி செய்து இந்த மெய்ஞான போதனைகளை உணரவேண்டும்.
கடும் தவம் இருக்க நேரிடும். இது சாதாரணமான காரியம் அல்ல. இதற்கு அவர்களின் பயிற்சி, முயற்சி, முனைப்பு, திறமைகளைப் பொறுத்தே பலன் கிட்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். முயற்சி பலன் தராமலும் போகலாம். வாழ்நாளும் முடிந்து போகலாம். அது அந்தக் கால நடைமுறை. ஒரு பிரம்மகுருவின் அருளாசி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் மாண்டூக்கிய உபநிஷத்துக்கு பின் காலத்தில் விளக்கம் அளித்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார்.
ஜனகனைப் போல உண்மைநிலையை உணரத் துடிக்கும் பக்தர்களுக்கு, கிடைக்கரிய இந்த தெய்வீக அருளாசி வழங்கவே காத்திருக்கிறார் பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமிகள்.

Also, read

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top