– Advertisement –
‘மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம்.
திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும் பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும் பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து வந்தார். கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை, வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.
– Advertisement –
உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை. ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே போயிருந்தது.
நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்களை அனுப்பி மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார்.சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு உறக்கமில்லாமல், இரவு முழுவதும் தூங்காமல் திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி, இரவு முழுவதும் பதிகம் பாடி உருகினார்.
– Advertisement –
இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில் உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, ‘நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்’ என்று கூறி மறைந்தார்.
இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய செந்தில் வேலன், ‘கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்’ என்று கூறி மறைந்தார்.
– Advertisement –
அப்போது செந்தூரின் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார் கனவில் செந்திலாண்டவர் தோன்றி, ‘என்னுடைய பக்தன் மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான். நாளை காலையில் சண்முகவிலாஸத்து உண்டியலைத் திறந்து அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனது கடனை அடைத்துவிடுங்கள்’ எனக் கூறிச் சென்றார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி மூவர் மட்டுமல்ல ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.
– Advertisement –