தமிழ் வருடப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில மாதம் ஏப்ரல்-13 அல்லது 14-ம் தேதியன்று வருகின்றது. ஆண்டுக்கு இருமுறை சூரியன் நேர்கிழக்கே உதித்து, உச்சி வேளையில் அதே நேர்கோட்டைக் கடந்து, மாலையில் அதே நேர்கோட்டில் மறைகிறான். அதாவது. ஆதவன் பூமத்திய ரேகையில் பயணிக்கிறான். அவ்வாறு சூரியன் பயணிக்கும் ஒரு நாள் சித்திரையிலும், மற்றொரு நாள் ஐப்பசியிலும் வருகிறது. இவ்விரண்டு நாட்களையுமே விஷு புண்ணிய காலம் என்று போற்றுகின்றனர். சித்திரையில் வரும் விஷு நாளையே புத்தாண்டுத் தொடக்கமாக கொண்டாடுகின்றோம்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு
சித்திரை மாதத்தில் வசந்தகாலம் எனும் இளவேனில் காலம் தொடங்குகிறது. மாந்தளிர் செழித்து, வேப்பம்பூ பூத்துக்குலுங்கும் காலம் .மனித வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் கலந்தே இடம் பெறுகின்றன. அதாவது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மையை உணர்த்துவது போல அன்றையதினம் சமையலில் ஆறு சுவை உணவை சாப்பிடுகின்றனர். அதில் வேப்பம்பூ, பச்சடியே இருக்கும். அன்றைய தினம் புத்தாடை உடுத்திக்கொண்டு ஆலயங்களுக்கு சென்று இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு உற்றார் உறவினர்கள். நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதை மரபாக கொண்டிருக்கின்றனர்.
தமிழ் பஞ்சாங்கம்
தமிழ் பஞ்சாங்கம் வானவியல் முறையில் கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு நாளில் இல்லத்தோறும் புதுப் பஞ்சாங்கத்திற்குப் பூஜைகள் செய்கின்றனர். திருக்கோயில்களில் பஞ்சாங்க வல்லுனர்கள் பஞ்சாங்கத்தைப் படித்து புத்தாண்டுப் பலன்களை விளக்குகின்றனர். அப்பொழுது குறிப்பாக மழையின் பருவம், கந்தாய பலன்களில் லாப – நஷ்டநிலை ஆகிய விபரம் பற்றி விளக்குகின்றனர்.
பிற மாநிலத்தில் புத்தாண்டு
தெலுங்கு மொழி மக்களும், கன்னட மொழி மக்களும் இதே அறுபது ஆண்டுகளை கணக்கில் கொண்டாலும் பங்குனி கடைசியில் வரும் அமாவாசை தினத்தையே புத்தாண்டு துவக்கமாக கொள்கின்றனர். அதை யுகாதி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் இதை கொண்டாடுகின்றனர்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam