மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று சுப பலன்கள் நிறைந்த நன்னாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் கிட்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது உகந்த தருணம். புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். புத்திர பாக்கியம் வேண்டி காத்திருப்போருக்கு நன்மைகள் உண்டாகும். காரியத் தடைகள் யாவும் நீங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். முக்கியமான சந்திப்புகள் அல்லது நியமனங்கள் இருப்பின், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்றடைவது நலம். காலதாமதத்தால் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தினத்தில் சோம்பல் தன்மையினை அறவே தவிர்த்து, செயலாற்ற நன்மைகள் கூடும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று மனநிறைவும், அமைதியும் நிறைந்த நாளாக இருக்கும். தெளிந்த சிந்தனையுடனும், நிதானத்துடனும் செயல்படுவீர்கள். பகைவர்களையும் மன்னிக்கும் பெருந்தன்மை கூடும். அகத்தில் பக்குவம் அடையும் அரிய நாள். புதுமையான அனுபவங்கள் ஏற்படும். இறை வழிபாட்டில் ஈடுபடுவது உங்கள் மனதை மேலும் தெளிவுறச் செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மனக் குழப்பங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற எண்ணங்களால் அன்றாடப் பணிகளில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது உத்தமம். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்குத் துணை நிற்கும். மனசாட்சிக்கு மாறாகச் செயல்படாமல், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது சிறந்தது.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி நிலைபெறும். உறவுகளிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் அகலும். இரவுப்பொழுதில் நிம்மதியான உறக்கம் கிட்டும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று பேராசை எண்ணம் மேலோங்கலாம். விரைவாகச் செல்வம் ஈட்டவும், வாழ்வில் முன்னேறவும் சிலர் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகலாம். ஆயினும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும், குறுக்குப்பாதையிலும் ஈடுபடக்கூடாது. எந்நிலையிலும் நேர்மையுடன் இருங்கள், சுபமே நிகழும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி மேலோங்கும். தனது கடமைகளைச் செவ்வனே செய்து, பிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பீர்கள். தேவைக்கேற்ப தன வரவு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருமடங்காகும். வீட்டிற்குத் தேவையான ஆபரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலக் குறைபாடுகள் நீங்கும். வீண் விரயச் செலவுகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளால் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிட்டும். தேவைக்கேற்ப தன வரவு சீராகும். கடன் சுமை வெகுவாகக் குறையும். கணவன்-மனைவிக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்லிணக்கம் கூடும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று நலமான நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகள் இனிதே நடந்தேறும். கொடுத்த வாக்குகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். வீண் விரயச் செலவுகள் கட்டுக்குள் வரும். வருமானம் பெருகி, சேமிப்பும் இருமடங்காகும். இறைவனுக்கு நன்றிகள் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். புதிய விஷயங்களை எளிதில் கற்றுத் தேருவீர்கள். நற்பெயரும், புகழும் உண்டாகும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்புகள் வந்து சேரும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் நன்மைகள் கிட்டும்.
கும்பம்
கும்ப ராசியினர் இன்று காரியங்களில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள். பொறுமையுடன் அணுகி, வேகத்தை விட விவேகத்தால் காரியங்களைச் சாதிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்பட்டு, பிறர் வியக்கும் வண்ணம் சாதனை படைப்பீர்கள். இத்தினத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். அலைச்சல் இன்றி, தேவையான உணவு, போதுமான ஓய்வு என இந்நாள் சௌகரியம் நிறைந்ததாக அமையும். நிதி நிலை சீரடையும். கடன் சுமை குறைந்து, மன அமைதி உண்டாகும். உங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றுவீர்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


