– Advertisement –
முக்கனிகளில் ஒன்றாக திகழக் கூடியது தான் பலாப்பழம். இது பலாப்பழ சீசனும் கூட. எங்கு திரும்பினாலும் பலாப்பழம் கிடைக்கும். பலாப்பழ சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் சுவை மிகவும் இனிப்பாக இருக்கும். ஆனால் இதை ஒரு அளவிற்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட கூடாது என்று கூறுவார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பலாப்பழத்தை வைத்து சுவையான முறையில் ஏதாவது ஒன்றை செய்து தர வேண்டும் என்று நினைத்தால் மங்களூரில் பாரம்பரியமாக செய்யக்கூடிய உணவுப் பொருளை செய்து தரலாம். அந்த உணவுப் பொருள்தான் பலாப்பழ இட்லி. என்னது பலாப்பழத்தின் இட்லியா என்று நீங்கள் கேட்பது நன்றாக புரிகிறது. ஆம் பலாப்பழத்தை வைத்து எளிமையான முறையில் இட்லி செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பலாப்பழம் – 10
வெல்லம் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
ஏலக்காய் – 2
பச்சரிசி – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பலாப்பழத்தை கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் இவை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க வேண்டாம். அடுத்ததாக நாம் ஊற வைத்திருக்கும் பச்சரிசியையும் இதனுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
மாவு கெட்டியாக தான் இருக்க வேண்டும். தண்ணியாக இருக்கக் கூடாது. இப்பொழுது இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இதை நாம் செய்வதற்கு நமக்கு வாழை இலை வேண்டும்.
வாழை இலையை சிறிது சிறிதாக நறுக்கி அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த வாழை இலையை அப்படியே மடித்து இட்லி தட்டில் உள்ளே வைத்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் வேகவைத்த பிறகு அதை எடுத்து இலையைத் திறந்து பார்த்தால் மிகவும் சுவையான பலாப்பழ இட்லி தயாராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: மாம்பழ அல்வா செய்முறை
ஒரே மாதிரி இட்லி செய்யாமல் இப்படி பலாப்பழத்தை வைத்து இட்லி செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவதோடு ஏன் இவ்வளவு நாள் இதை செய்து தரவில்லை என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam