– Advertisement –
உணவே மருந்து என்னும் அடிப்படையில் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை நாம் பூண்டு குழம்பாக வைத்துக் கொடுத்தாலும் சரி, வேறு எதிலாவது சேர்த்து கொடுத்தாலும் சரி அதன் வாடைக்கு பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் பூண்டு சாதம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பூண்டை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமசீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. பூண்டை அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், கீழ் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு குழி கரண்டி
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – ஒரு கப்
முந்திரி – 10
கருவேப்பிலை – 2 கொத்து
புதினா – சிறிதளவு
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
வடித்த சாதம் – ஒரு கப்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அது நன்றாக காய்ந்ததும் அதில் எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றை சேர்த்து குறைந்த தீயில் வைத்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பூண்டு கருகக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இதில் பொடியாக ஒடித்த முந்திரி, கருவேப்பிலை, புதினா, நீள வாக்கில் கீரிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு தண்ணீர் ஊற்றாமல் மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
– Advertisement –
இரண்டு நிமிடம் கழித்து அதை திறக்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய பச்சை வாடை அனைத்தும் முற்றிலும் நீங்கி இருக்கும். இப்பொழுது ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி வடித்த சாதம் ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பூண்டு வாசமே இல்லாத மிகவும் சுவையான பூண்டு சாதம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைல் ஆனியன் ரவா தோசை செய்முறை
நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம் நம்முடன் இருப்பவர்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள். முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam