திருவாப்புடையார் கோவில் வரலாறு: Thiruvappudaiyar

திருவாப்புடையார் கோவில் வரலாறு: Thiruvappudaiyar

Qries

Thiruvappudaiyar Temple History in Tamil

சிவஸ்தலம்
அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில்

இறைவன் பெயர்
ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர், ஆப்பனூர் நாதர், இடபுரேசர் (ரிஷபுரேசர்)

அம்மன் பெயர்
குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம்
வன்னி, கொன்றை

தீர்த்தம்
வைகை, இடபதீர்த்தம்

புராண பெயர்
திருவாப்பனூர், திருஆப்புடையார் கோவில்

ஊர்
செல்லூர்

மாவட்டம்
மதுரை

தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் கோவில்
ஆப்புடையார் கோவில் அமைப்பு
இவ்வாலயத்திற்கு கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிசபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகர் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்திக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பை சோமஸ்கந்த அமைப்பு என்பர். பிரகாரம் சுற்றி வரும்போது தலவிருடசம் வன்னி மரத்தடியில் விநாயகர் தரிசனம் தருகிறார். வள்ளி தெய்வானை அருகிலிருக்க முருகர் மயில் அமர்ந்து காட்சி தருகிறார்.

இத்தலத்தில் கல் சிற்பமாக நடராஜர், சிவகாமி, அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் ஆகியோர் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலாவுருவங்கள் இத்தலத்தின் சிறப்பம்சம். உற்சவர் நடராஜரும் சிவகாமியுடன் உள்ளார். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவாப்புடையார் தல வரலாறு
சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சிவபக்தன். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை வேட்டையாட காட்டிற்குச் சென்ற அரசன் வேட்டையாடிய களைப்பால் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,” என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான்.

களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில் இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உண்மையானால் இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால் உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள்பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது.
ஒருமுறை பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி தவித்தனர். ஆப்புடையார் கோவில் அர்ச்சகர் சிவபூஜைக்காக சிறிது பயிர் செய்து நைவேத்யம் செய்து வந்தார். ஊர் மக்கள் உணவின்றி வாடும் போது இறைவனுக்கு நைவேத்யமா என்று சிலர் அர்ச்சகரை துன்புறுத்தினர். அர்ச்சகர் வருத்தப்பட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அசரீரியாக வைகை ஆற்று மணலை உலையிலிட்டு சமைக்கும் படியும் அது அன்னமாக மாறும் என்றும் அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகரும் அவ்வாறே செய்து ஊர் மக்களின் பசியைப் போக்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு “அன்னவிநோதன்” என்ற பெயர் ஏற்பட்டது.

பிரார்த்தனை: செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர்.
இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும்.
நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தும், அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
Thiruvappudaiyar Temple Festivals
திருவிழா: ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்ன அபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை என மாதந்தோறும் திருவிழா தான். மாசி மகத்தன்று பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
Thiruvappudaiyar Temple Timings
அருள்மிகு திருவாப்புடையார் கோவில் காலை 06:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.

திருவாப்புடையார் கோவிலுக்கு எப்படிப் போவது?
இந்த சிவஸ்தலம் கோவில் மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.
Thiruvappudaiyar Temple Contact Number: +914522530173, 9443676174
Thiruvappudaiyar Temple Address
அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்புடையார் கோவில்,செல்லூர், மதுரை மாவட்டம் – 625002

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top