பொது ராசி பலன் – கும்பம்

ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.

உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு. ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற  துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும்.

கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள்.

இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த  ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும்  மங்களாம்பிகை ஆகும். கும்பராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top