பொது ராசி பலன் – சிம்மம்

உங்கள் ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை.

சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாக வும் இருக்கவேண்டும் என்றே விரும்புவீர்கள்.

இந்த ராசிக்கு 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருவதால், பணத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால், கையில் தங்காதபடி செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணமே பளிச்சென்று பேசுவீர்கள்.

சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 4-ம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கும் செவ்வாயே வருகிறார். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

அவர்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு. 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்துக்கும் குரு அதிபதியாக இருப்பதால் நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள்.

6 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், உங்களுடைய வாழ்க்கைத்துணை திறமைமிக்கவராக இருப்பார். படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. பெரும்பாலும் சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும். பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும்வரை காத்திருந்து சேருவீர்கள். சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார்.

சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாகக் குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்கமுடியாதபடி விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணா மலை தலம் விளங்குவதாக ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.

ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top