பொது ராசி பலன் – துலாம்

அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.

நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான். உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள்.

பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி.

அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும்.

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள்.

ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.

 

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top