அசுவினி நட்சத்திர கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய்.
பொதுவான குணங்கள்: புத்தி கூர்மை, வடிவான தோற்றம், ஆடை ஆபரணங்கள் அணிவதில் ஆசை, பாசம், நேசம், கோபதாபங்கள். உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கை, துணிச்சல், தர்ம சிந்தனை, பயமின்மை, எதையும் வேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படுதல், தற்பெருமை, கர்வம், தவறான முடிவெடுத்தல் – சாதிக்கும் தன்மை, பிடிவாதம் போன்றவை.உயரிய மன உறுதியும் உடல் வலிமையும் ஒருங்கே கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை சிறப்பாக முடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். கூர்மையான அறிவாற்றலும் சிந்தனை திறனும் இருக்கும். இந்த நட்சத்திரக்காரர்களின் கண்களில் எப்போதும் பிறரை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எதிலும் முதலிடத்தில் இருக்க விரும்புவீர்கள். எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்த பிறகே ஏற்றுக்கொள்வார்கள். நெருக்கமான நண்பர்கள் என ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள். பல மொழிகளை கற்றறியும் திறன் இருக்கும். செய்கின்ற பணிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள். இவர்களை தேடி உயரிய பதவிகள் வரும்.
தங்களின் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் அதிகம் ஈடுபாடிருக்கும் ஈடுபடுவீர்கள். தீர்க்காயுள் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே விரும்புவீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சேர்ந்து சிறப்பான சாதனைகள் புரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அஸ்வினி தேவர்கள் தேவலோக மருத்துவர்கள் என்பதால் ஒரு சிலர் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குவார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் மற்றும் அவர்களுடைய உழைக்கும் சக்தி மற்றும் கவனம் முழுவதையும் வேலையில் அல்லது விளையாட்டு போன்ற தான் ஈடுபட்டு கொண்டிருக்கும் துறையில் செலுத்தி வெற்றிபெறுவார்கள். எதிலும் வேகமாக செயல்பட துடிப்பவர்கள் (கார், பைக்கில் மிக வேகமாக செல்வது இவர்களுக்கு பிடிக்கும்). தீயணைப்பு, அறுவை சிகிச்சை மருத்துவம், மாந்திரிகம், ஆராய்ச்சி போன்ற துறையில் ஆர்வம் மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதாவது ஒரு செயலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள். அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பது என்பது இவர்களுக்கு ஒத்துவராது.
அசுவினி முதல் பாதம்: (இது செவ்வாய் கிரகத்தின் அம்சம்)
குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப் பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும் பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய குணங்கள். அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறுபவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ அதிக செலவு செய்தாலும் பிறருக்கு எந்நேரத்திலும் உதவுவார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.
நட்புக்கு எப்போதும் மிகுந்த மரியாதை தருவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். மேலும் இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் கடின உடல் உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்,எந்த ஓர வஞ்சனையும் கர்வமும் கொள்ளாமல் பக்க விளைவுகளை நினைத்துபார்க்காமல் தன்னை சார்ந்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க போராடும் மனப்பான்மை மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மனப்பான்மை கொண்டவர்கள், சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு சண்டை போடுவது மற்றும் தன்னை சுற்றி பிரச்னை உண்டாக்குவது அல்லது பிரச்சனைகளை ரசிப்பது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
அசுவினி 2-ம் பாதம்: (சுக்ரனின் அம்சம்)
கலையில் ஈடுபாடு, பணம் சேர்ப்பதில் ஆர்வம், சிற்றின்ப ஈடுபாடு, புகழில் விருப்பம் போன்ற குணங்கள் இருக்கும். அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களைக் கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவார்கள். மிக சிறந்த உயர் கல்வி கற்கும் யோகம் இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு. அதிகளவில் நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே வசதியான சொந்த வீடு, வாகன வசதிகள் போன்றவை அமையும். இந்த அஸ்வினி 2 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. தங்களின் குழந்தைளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்.
இந்த பாதத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து நிதானமாக செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்..பிறருக்கு உதவி செய்யும் போது கூட அனைத்து விளைவுகளையும் நிதானமாக யோசித்து செய்பவர்கள் ஆனால் ஒரு செயலை செய்ய ஆரம்பித்து விட்டால் அதை எப்படியும் வெற்றியுடன் முடித்துவிட சதா யோசித்து கொண்டே இருப்பார்கள். நல்ல வழியில் மட்டுமே இவர்களின் செயல்பாடு இருக்கும். சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு யோசிக்கும் திறமை நன்கு இருந்தாலும் அது அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருக்காது. சிலர் தீய வழிகளில் கூட தங்கள் கவனத்தை செலுத்த நேரிடும்.
அசுவினி 3-ம் பாதம்: (புதனின் அம்சம்)
கல்வி, தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, உடல் சுகம், சாமர்த்தியம், தலைமை தாங்கும் திறமை இதற்குரிய தனிக் குணங்கள். அஸ்வினி 3 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்லவனுக்கு நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும் இருப்பார்கள். அனைவரும் உங்களை விரும்பும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். தங்களின் சிறந்த பேச்சாற்றலால் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து கொள்வார்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமிருக்கும். பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை தரக்கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தை பற்றியும் அறிவுபூர்வமாக வாதம் செய்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பலர் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்புவார்கள். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு மருத்துவம், உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற உடல்நலம் சார்ந்த அறிவுரைகளை கூறுவார்கள் , விளையாட்டு மற்றும் வீரதீர செயல்களில் தங்களை ஈடுபடுத்தி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தை சொல்லும் மனப்பான்மை கொண்டவர்கள். பிற்காலத்தில் பலவிதமான அனுபவங்கள் மூலம் தொழில் துவங்கும் சாத்தியம் இவர்களுக்கு உண்டு.தாய் அல்லது தாய் போன்றவர்கள் மூலம் நல்ல அறிவுரைகள் கிடைப்பது மற்றும் தாயின் ஆதரவு இவர்களுக்கு அதிகம் இருக்கும். சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு மேற்கூறிய பலன்கள் முழுவதுமாக சரியாய் அமைந்து விடுவதில்லை. இதற்கு எதிர்மாறான குனங்களும் அமைவதுண்டு.
அசுவனி 4-ம் பாதம்: (இந்தப் பாதத்திற்கு சந்திரன் அதிபதி)
உணர்ச்சிவசப்பட்டு வாழ்பவர், தார்மிகச் சிந்தனை உள்ளவர், திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். இவர்களை சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். விலை உயர்ந்த நவீன ரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அழகிய உடலமைப்பு இருக்கும். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் மற்றும் முக கவர்ச்சி இருக்கும். பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.
அதிக தெய்வ பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு புதிய விடயத்தையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமிருக்கும். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் தங்கள் சுய அறிவை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். அதே நேரம் தங்கள் அறிவை மிகுந்த ஈடுபாட்டுடன் எதிலும் உபயோகித்து அந்த செயலில் வெற்றி காண்பவர்கள், அதே நேரம் அந்த செயலில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் அதை நினைத்து அதிகம் வருந்துவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகம் கிடைத்திருக்கும் எனவே எதிலும் தாய்மை பண்புடன் செயல்படுவார்கள்.