பரணி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரம் விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம். இதுவும் மேஷ ராசியில் அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள்.

பரணி நட்சத்திரம் ராசி நாதன் செவ்வாய். இந்த நக்ஷத்திர அதிபதி – சுக்கிரன்

பொதுவான குணங்கள்:

வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அதிகத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் எந்த ஒரு விடயத்திலும் தனித்து செயல்படவே விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பிறருக்கு தானம் தருமம் செய்வதில் விருப்பம் அதிகம் எனவே. தான் கஷ்டப்படுகிற நிலையிலும் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், வாழ்வில் நலிவடைந்தவர்கள் மற்றும் துயருற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் மனிதநேயம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் கொண்டிருப்பார்கள். அவர்களின் இறுதி காலம் வரை நன்கு பராமரிப்பார்கள்.

சில பண்டைய ஜோதிட சாஸ்திர நூல்களில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தானம், தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், மிக பெரிய செல்வந்தர்களாகவும், கலாரசிகர்களாகவும், சமுதாயத்தில் புகழ்பட வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் தாம்பூல பிரியர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடுகிறது. மேலும் சாஸ்திரங்களைச் பற்றி விளக்கம் சொல்பவனாகவும், மிகுந்த மனோதைரியம் உள்ளவனாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் பரணி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் எனவும் கூறுகிறது.

தொடங்கிய எந்த ஒரு காரியத்தையும் அது முடியும் வரை விடாமுயற்சி மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி, புகழ் ஈட்டுவார்கள். பொதுவாகபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனைப் போல் அல்லது அரசனுக்கு நிகரான சுகபோக வாழ்க்கையை வாழ்வார்கள் என சுக்ர நாடி என்கிற பழமையான ஜோதிட சாஸ்திர நூல் குறிப்பிடுகிறது. ‘பரணி தரணி ஆளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரக்காரர்கள் அரசாங்கம் மற்றும் இதர பணிகளிலும் அதிகபட்ச அதிகாரங்கள் பெற்ற பதவியில் அமர்வார்கள். சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சூழ்நிலை மற்றும் மனிதர்களின் தன்மைகளுக்கேற்ப செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தாலும், நடத்தைகளை வெளிப்படுத்தினாலும் அமைதியிழக்காமல் சூழ்நிலையை கச்சிதமாக கையாள்வார்கள்.

கலாரசனை மிகுந்த சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பரணி நட்சத்திரக்காரர்கள் இருப்பதால் இசையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மேலும் ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் தங்களையே மறந்து விடும் அளவிற்கு ஈடுபாடு மற்றும் திறமைகளை கொண்டிருப்பார்கள். நடை,  உடை, பாவனையில் ஒரு தனி தன்மை இருக்கும். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதில் மிகுதியான நாட்டம் உடையவர்களாகவும், விலையுயர்ந்த ஆடம்பர உடைகளை அணிவதில் மிகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். உணவு உண்பதில் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகிய பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகவும் விருப்பமானதாகும்.

பசியை போக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் எந்த ஒரு உணவையும் மிகவும் ரசித்துச் சாப்பிடும் குணம் பரணி நட்சத்திரக்காரர்கள் கொண்டிருப்பார்கள். ருசியான உணவை சமைத்தவர்களைப் பாராட்டவும் செய்வார்கள். குழந்தை பருவத்திலேயே மிகுந்த சாமர்த்தியசாலித்தனம் இருக்கும். ஆசிரியர்கள், மற்றவர்கள் கூறுவதை அப்படியே கேட்காமல், ஆறாம் அறிவால் சிந்தித்து மனதுக்குத் சரியென தோன்றுவதைப் பின்பற்றக் கூடியவர்கள். கல்வியில் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள். எனினும் முதல் தரமான மதிப்பெண்களை பெறாத சராசரி மாணவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதால் தங்களை சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்து கொண்டேயிருப்பார்கள்.

வாழ்வில் எதிர்ப்படும் எந்தப் பிரச்னைகளையும் சுலபமாக எடுத்துக்கொள்வார்கள். வாழ்வில் சோர்ந்திருக்கும் நபர்களுக்கு தங்களின் பேச்சாற்றலால் உத்வேகம் தரும் ஆற்றல் பரணி நட்சத்திரக்கார்களுக்கு உண்டு. வெளியூர், வெளிநாடுகள் போன்றவற்றிற்கு பயணம் செய்வது பரணி நட்சத்திரகாரர்களுக்கு விருப்பமான ஒன்று. கடல், மலை, அருவி, காடுகள், போன்ற இயற்கையின் அற்புதங்களில் மனதை தொலைப்பவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்திலும் பிறருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வார்கள். உயரிய பதவிகளிலிருந்தாலும் பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை சாதுர்யமாக வேலை வாங்குவார்கள். பணியாளர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். மிகுந்த நஷ்டத்தில் இயங்கும் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை லாபகரமானதாக மாற்றும் திறன் பரணி நட்சத்திரக்காரர்களிடம் உண்டு.

காதல் நாயகனான சுக்கிரனுக்குரிய நட்சத்திரம் என்பதால் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமிருக்கும். மனிதர்கள், பணம் அல்லது ஆடம்பர பொருட்கள் என எதையாவது காதலித்து கொண்டேயிருப்பார்கள். குடும்பத்தில் மனைவி, மக்களின் தேவையறிந்து நடந்து கொள்வார்கள். பரணி நட்சத்திரகாரர்களுக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவை வெகு சுலபமாக அமையும். இருபத்தேழு வயதுக்குள்ளேயே பரணி நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலானவர்கள் செல்வ சுகங்களைச் சேர்த்துவிடுவார்கள் பல ஜோதிடர்களின் அனுபவபூர்வமான கருத்தாக இருக்கிறது. 34 முதல் 41 வயதுக்குள் வாழ்வில் மிகுந்த சாதனைகள் செய்வார்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் வணிகவியல், பல் , கண், காது மருத்துவத் துறைகள், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறை ஆகியவற்றில் மிளிர்வார்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் போன்றவற்றை பெறுவார்கள். உடல் பருமன், ஹார்மோன், டான்ஸில் போன்ற உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பொதுவாக பரணி நட்சத்திரக்கர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு.

பரணி நட்சத்திரம் முதல் பாதம்: (இது சூரியனின் அம்சம்)

அழகு, சுகபோகத்தில் பிரியம், எல்லாம் தெரிந்ததாக எண்ணம், நல்ல பேச்சுத் திறமை, எதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம், கோபதாபம், பொறுமையில்லாத குணம் ஆகியவை முக்கிய இயல்புகள்.

பரணி நட்சத்திரம் 2-ம் பாதம்: (இது புதனின் அம்சம்)

குடும்ப வாழ்க்கையில் பற்று, பணம் சேர்ப்பதில் விருப்பம், ஆடை அணிகலன்களில் ஆசை, இசை ஆர்வம், திருப்தியில்லாத மனப்பான்மை ஆகியவை இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின் குண இயல்புகள்.

பரணி 3-ம் பாதம்: (சுக்கிரன் இதன் அம்சம்)

உற்சாகம், மகிழ்ச்சி, புத்திகூர்மை, அபார ஞாபக சக்தி, ஜெயிக்கும் எண்ணம், பிறரை நம்பாத தன்மை போன்றவை இயல்புகளாக அமையும்.

பரணி நட்சத்திரம் 4-ம் பாதம்: (செவ்வாயின் அம்சம்)

தலைமை தாங்கும் தன்மை, அலங்காரத்திலும் ஆடம்பரத்திலும் விருப்பம், சலனமான சிந்தனை, சுயமாக முடிவெடுக்க முடியாத தயக்கம், பொறாமை, நன்றி இன்மை போன்றவை.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top