மிருகசிரீஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது.

பொதுவான குணங்கள்: எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுதந்திரமானவர்கள்.

மிருகசீரிட நட்சத்திர சிறப்பியல்புகள்: மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் எதிலும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டுவார்கள். தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதை பொறுக்க மாட்டார்கள். வயதில் மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். பள்ளிக்கூட பாடங்களில் ஆர்வம் அதிகமிருக்காது. உலக விடயங்களை கற்றுக் கொள்வதில் பேராவல் இருக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரி கல்விகளை முழுமையாக முடிக்க முடியாத நிலையும் உண்டாகும். எப்போதும் நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்களாக மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரம் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள் ஆவர். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டார்கள். செய்கிற வேலைகளில் ஒழுக்கம், விதிகளை கடைபிடித்து செயல்படுவதல் போன்றவை இருக்கும். எந்த ஒரு விடயத்தையும் ஒரு முறை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ கிரகித்துக் கொள்ளும் மன ஆற்றல் மிக்கவர்களாக மிருகசீரிடம் நட்சத்திர காரர்கள் இருப்பார்கள். சிறப்பான பேச்சாற்றல் இருக்கும். அதன் மூலம் பகைவரையும் நண்பராக்கிக் கொள்வார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் தான் பிறரின் கவனத்திற்குரிய நபர்களாக இருப்பார்கள். பொதுவாகவே மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் நல்ல வசதி மிக்க குடும்பத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். வாழ்வில் எந்த ஒரு கஷ்டம் ஏற்பட்டாலும், அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தங்களின் கடின உழைப்பின் மூலம் அதை விட சிறப்பான நிலைக்கு வந்து விடுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் அவர்களின் விருப்பம் போலவே நடைபெறும். இவர்களுக்கு வருகின்ற வாழ்க்கைத் துணை நல்ல பொருளாதார வசதி நிறைந்த குடும்பத்தில் இருந்து வருபவராகவே இருப்பார். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களை வருத்திக்கொண்டு கடினமாக உழைத்து பொருள் சேர்ப்பார்கள்.

எந்த ஒரு விடயத்திலும் பிறருக்காக விட்டுக் கொடுத்து செல்லும் தன்மை கொண்ட மனப்பான்மை மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். இந்த குணம் காரணமாக உண்மையான நண்பர்களை அதிகம் பெற்றவர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கின்றனர். தன்னால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படக் கூடாது என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு ஏற்படும் வசதி குறைவு, துயரங்கள் போன்றவை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகமலர்ச்சியுடன் இருப்பார்கள். செயல்படுவதில் அதீத வேகம் இருக்கும். அதே நேரத்தில் ஆழமாக சிந்தித்து செயலாற்றும் சிந்தனைத் திறனும் பெற்றவர்களாக மிருகசீரிட நட்சத்திரக்காரர் இருக்கின்றனர்.

மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் அமையும். எனவே, இந்த ராசி அதிபதிகள் சுக்கிரனும், புதனும் ஆவர்.

நான்கு பாதங்களின் குணங்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரம் 1 – ஆம் பாதம்:

அபார தன்னம்பிக்கை, துணிச்சல், எல்லாம் தெரியும் என்ற கர்வம், முடியாத செயல்களையும் முடியும் எனக் கருதி எடுத்துக்கொள்ளும் ஆற்றல், விளம்பரப் பிரியம் போன்றவை பொதுவான குணங்களாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் முதலாவது பாதத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்கு உரிய கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். அழகான கண்களை உடையவர்களாக இந்த பாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். சவால் நிறைந்த காரியங்களை செய்து காட்டுவதில் விருப்பம் அதிகமிருக்கும். மிகுதியான தன்னம்பிக்கையும், எந்த ஒரு விடயத்தையும் துணிந்து செயல்படுத்துகிற தைரியம் அதிகமிருக்கும். தாங்கள் கொண்டிருக்கும் லட்சியத்தை நிச்சயம் அடைந்து விடுவார்கள். எதிலும் இறுதி வரை போராடுவார்கள். ஒரு போதும் பாதியில் விட்டுக்கொடுத்துச் செல்ல மாட்டார்கள். வாழ்வில் எத்தனை எதிரிகள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் தோற்கடிக்கும் தந்திரம் அறிந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் விரும்பி ஈடுபடக்கூடிய எந்த ஒரு துறையிலும் மிகப் பெரும் வெற்றிகளை பெறுவார்கள். பிறரிடம் கைகட்டி வேலை பார்க்கும் உத்தியோகங்களை விரும்ப மாட்டார்கள். சொந்தத் தொழில் செய்து பிறருக்கு வேலை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் மேல் அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பழமையான கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமலும் அதே நேரத்தில் நவீன விடயங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். வழக்கறிஞர் தொழில், அரசியலில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரம் 2 – ஆம் பாதம்: மிருகசீரிடம் நட்சத்திரதின் இரண்டாவது பாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்கும் எத்தகைய தீங்கும் நேரக்கூடாது என நினைப்பார்கள். வாழ்வில் தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றம் பெற வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருப்பார்கள். ஏழை – பணக்காரன் என்கிற வர்க்க பேதம் பார்க்காமல் மனிதர்களின் நல்ல குணத்தையும், உள்ளத்தையும் மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். பொய் அதிகம் பேசமாட்டார்கள். உலகின் அனைத்து விடயங்களை பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை கவனித்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வார்கள். கதை எழுதுதல், கவிதை, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். சுவை மிகுந்த உணவுகளை உண்ணும் விருப்பம் அதிகமிருக்கும். சிறந்த சிந்தனையாற்றல் இருப்பதால் அரசாங்கத் துறையில் ஆலோசக அதிகாரி போன்ற பதவிகளை பெறுவார்கள். மிகுந்த சுயமரியாதை குணம் கொண்டவர்கள். அந்த சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது சொத்து, சுகம், உயர் பதவி என அனைத்தையும் நொடிப்பொழுதில் தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். இறைவன், ஆன்மீகம் போன்ற விடயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் 3 – ஆம் பாதம்: மிருகசீரிட நட்சத்திரத்தில் மூன்றாவது பாதத்தில் பிறந்தவர்கள் மதிநுட்பக்காரகனாகிய புதன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வசீகரமான முக தோற்றம் இருக்கும். எழுத்தாற்றல் திறன் இருக்கும். ஒரு சிலர் எழுத்தாளர்களாக புகழ் பெறுவார்கள். இருப்பதை வைத்துக் கொண்டு மனத்திருப்தியாக வாழும் கலை தெரிந்தவர்கள். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சிறிதும் மனம் கலங்க மாட்டார்கள். இறைவழிபாடு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் மீது பற்று அதிகம் இருக்கும். குடும்பத்தை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் துணிபவர்கள். மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். தாத்தா பாட்டி போன்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் 4 – ஆம் பாதம்: மிருகசீரிட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் எதிலும் உண்மையை கடைப்பிடிப்பார்கள். சிறு வயது வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். யார் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை தட்டிக் கேட்கும் தைரியம் அதிகம் இருக்கும். நகைச்சுவையாக பேசுவார்கள். அதிக அளவில் நண்பர்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் சோர்வடையாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் உத்வேகம் குணம் கொண்டவர்கள். தங்களின் வாழ்க்கை துணையிடம் மிகுதியான அன்பை எதிர்பார்ப்பார்கள். தங்கள் குழந்தைகளை பொறுப்புணர்வோடு வளர்ப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். விவாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். மிகுதியான அதிகாரம் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்த மாட்டார்கள். விஞ்ஞான பூர்வமாக இல்லாத எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுமக்களின் மதிப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திர பொது பரிகாரங்கள்: மிருகசீரிட நட்சத்திரத்தின் 1 மற்றும் 2 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் மாதந்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜையறையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு முன்பு 2 தீபங்கள் ஏற்றி, ஏதேனும் பழம் நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால், அவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். மேலும் வெள்ளிக்கிழமையில் கோயிலில் இருக்கும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கு ஒரு இனிப்பு பண்டத்தை நைவேத்தியம் வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வேதபாராயணங்கள் மேற்கொள்ளும் திருமணமாகாத ஒரு அந்தண இளைஞருக்கு புதிய வேட்டி துணியை தானம் அளிப்பதால் உங்களின் தோஷங்கள் நீங்கும். மிருகசீரிட நட்சத்திரத்தின் 3 மற்றும் 4 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் மாதத்தில் வருகின்ற செவ்வாய்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரக்கூடிய கிருத்திகை, சஷ்டி தினங்களில் முருகப்பெருமான் கோயில்களுக்கு சென்று, முருக பெருமான் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால், வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிவப்பு நிற பேனா, பென்சில் போன்ற பொருட்களை தானம் தருவது சிறப்பு.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்டஎழுத்துகள் : V, K அதிர்ஷ்ட எண் : 3, 6, 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு, வெள்ளி, சாம்பல் நிறம் அதிர்ஷ்டக் கிழமை : செவ்வாய், வெள்ளி அதிர்ஷ்ட ரத்தினம் : பவளம் அதிர்ஷ்ட தெய்வம் : சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top