சதயம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ட்சத்திர வரிசையில் 24-வதாக வருவது சதய நட்சத்திரம். ராகு பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சதயம் நட்சத்திரம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருப்பீர்கள். அன்புக்கு அடிபணியும் நீங்கள் அதிகாரத்துக்குப் பணியமாட்டீர்கள். உங்களைக் கண்டால் எதிரிகளும் அஞ்சி நடுங்குவர். கடல் கடந்து பயணம் மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். ஆலயப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பு அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பையும் அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். இளம்பருவத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் நீங்கள் பிற்காலத்தில் உயர்ந்த லட்சியத்தை மேற்கொண்டு, அதை அடைவதற்காகப் பாடுபடுவீர்கள். துர்கையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருப்பீர்கள்.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். மற்றவர்களும் அப்படி நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவீர்கள். பல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். சொன்ன வார்த்தையை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். சகோதர சகோதரிகளிடம் பாசத்துடன் நடந்துகொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பெரியோர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வீர்கள். நீதித்துறையில் சிறந்து விளங்குவீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். பேச்சினாலேயே மற்றவர்களைக் கட்டிப்போட்டுவிடுவீர்கள். எப்போதும் பல்துறை வித்தகர்களை உடன் வைத்திருப்பீர்கள். அவர்களின் துணையுடன் அரியப் பல சாதனைகளைச் செய்வீர்கள். 

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…

சதயம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு

சதயம் 1-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பீர்கள். பல துறைகளிலும் விஷயஞானம் உள்ளவர்கள். அதன் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு அவர்கள் மனப்பாங்கின்படி கவுன்சலிங் கொடுத்து அவர்களைத் தேற்றுவீர்கள். ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் விடாமல் முயற்சி செய்து சாதித்துவிடுவீர்கள். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். அவர்கள் சொல்லும் வாக்கைத் தெய்வ வாக்காக மதித்து நடப்பீர்கள். இல்லாதவர்களுக்கு உங்களிடம் இருப்பதைக் கொடுத்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள். நட்புக்கு மரியாதை தருவீர்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் நாசூக்காகச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள்.

சதயம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி

சதயம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள், மற்றவர்களுக்கு உழைப்பதற்காகவே பிறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். பயம் என்பதே இன்னதென்று அறியாதவர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உள்ளத்தில் அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாது. எனவே, மற்றவர்கள் உங்களைக் கல்நெஞ்சம் கொண்டவர் என்று சொல்லக்கூடும். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்த மாட்டீர்கள். படிப்பை விட விளையாட்டுகளில்தாம் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். இளம்பருவத்திலேயே பெரிய குடும்ப பாரத்தைச் சுமக்க நேரிடும். பெற்றோர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். எப்படியும் வாழ்க்கையில் முன்னேறியே ஆகவேண்டும் என்று துடிப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சதயம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி

சதயம் 3-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் நலனுக்காகப் போராடுபவர்களாக இருப்பீர்கள். குழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முடிந்ததை மட்டுமே செய்வீர்கள். முடியாத காரியங்களில் தலையிடமாட்டீர்கள். சுயநலம் இல்லாதவர்கள். எந்த நெருக்கடியான நிலையிலும் மற்றவர்களிடம் உதவிக் கேட்காமல், நீங்களே சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்து சாதனை படைப்பீர்கள். சேமிப்பைக் கரைத்தாவது மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். மற்றவர்கள் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்த பிறகே ஏற்றுக்கொள்வீர்கள். நல்லது கெட்டது பகுத்தறிந்து செயல்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்யும்.

சதயம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு

சதயம் 4-ம் பாதத்துக்கு அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ பக்தி மிக்கவர்களாக இருப்பீர்கள். பெற்றோர்களைத் தெய்வமாக மதிப்பீர்கள். அவர்களின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். இளைய சகோதரிகளிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்வீர்கள். `சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதுபோல் பொறுமையின் சிகரமாகக் காணப்படும் நீங்கள், கோபம் வந்துவிட்டால் பூகம்பமாகப் பொங்கியெழுவீர்கள். தன்மானத்துக்கும் சுயகௌரவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நவீன ரக ஆடைகளையும் நகைகளையும் அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். முகத்தில் ஒரு தேஜஸ் காணப்படும். மற்றவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டீர்கள். கடினமான காரியங்களையும் சவாலாக ஏற்று செய்து முடிப்பீர்கள். தொண்டு நிறுவனங்கள் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, ஆஞ்சநேயர்

அணியவேண்டிய நவரத்தினம்: கோமேதகம்
வழிபடவேண்டிய தலங்கள்: கதிராமங்கலம், நாமக்கல்

 

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top