பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை ‘நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான குணங்கள்: திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம் வாழ நினைப்பவர்கள். தாங்கள் விரும்பியதை அடைய முயல்பவர்கள். கடுமையான சொல் பேசுபவர்கள். மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம்: இது குருவின் அம்சம். தைரியசாலிகள். புத்திக்கூர்மையும், ஆராய்ச்சி செய்து புதியன கண்டுபிடிப்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். கோபமும் இருக்கும்; குணமும் இருக்கும். புகழ்ச்சியை விரும்புபவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன் அதிபதி சனி பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்காக எதையும், எப்படியும் பெற முயல்பவர்கள். அநியாயத்தையும் தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: இதன் அதிபதியும் சனி பகவான்தான். இவர்கள் அடிக்கடி கோபப்படுபவர்கள். எந்த வழியிலாவது செல்வத்தை அடைய முயற்சிப்பவர்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்பவர்கள். பிறருடைய அறிவுரையைக் கேட்கமாட்டார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி குரு பகவான். இவர்கள் புத்திசாலிகள். ஆனால் சோம்பேறிகள். கடுமையாக உழைக்க விருப்பமில்லாதவர்கள். குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுபவர்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள்; திட்டமிடாமல் செயல்படுபவர்கள். ஆயில்யம் 4-ம் பாதத்தில் குழந்தைகள் பிறந்தால், பெற்றோர்களுக்கு ஏதாவது கஷ்டம் வரும் என்பதால், இந்த நட்சத்திரத்துக்கு உரிய ‘சந்திர சாந்தி’ எனும் பூஜை செய்வது சம்பிரதாயமான பரிகாரம்.