இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மகம் நட்சத்திரக் கூட்டம். ‘மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. ஒருவரது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சமாக இருக்கின்றன என்பதையும், எந்த கிரகங்கள் பகை அல்லது நீசமாக இருக்கின்றன என்பதையும் வைத்தே பலன்கள் கூற வேண்டும். மகத்தில் பிறந்து ஜகத்தை ஆண்டவர்களும் உண்டு; நாடு நகரம் துறந்து வீதிக்கு வந்து திண்டாடியவர்களும் உண்டு. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன்.
மகம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்: கலைத்திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பமும் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்கவேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள். மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்கள். சிறந்த பேச்சாளிகள், வாதத் திறமை மிக்கவர்கள். பொருள்களிடமும் புருஷர்களிடமும் ஆசையும் பாசமும் மிக்கவர்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது.
மகம் நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி செவ்வாய். பூமி, நிலபுலன்கள் சேர்ப்பதில் ஆசை உள்ளவர்கள். நல்ல தோற்றம் உள்ளவர்கள். பிறரை வசீகரிக்கும் குணங்கள் உள்ளவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். சொத்து சுகங்களில் பற்றுள்ளவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதற்கு உரிய கிரகம் சுக்கிரன். ஆசாபாசங்கள் மிகுந்தவர்கள். இரக்க குணமும், பிறருக்கு உதவும் தன்மையும் இவர்களிடம் இருக்கும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பற்றும் பாசமும் கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் திறமையும், ஈடுபாடும் மிக்கவர்கள். ஆத்திரம் இருக்கும். அனுதாபமும் இருக்கும்.
மகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: விஷ்ணுவை அதிபதியாகக் கொண்ட புதன், இந்தப் பாதத்துக்குத் தலைவன். தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணங்களும் இருக்கும். இனிமையான இல்லறம் அல்லது பற்றில்லாத துறவறம் என்று எல்லைகளுக்கப்பால் சிந்திப்பவர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்.
மகம் நட்சத்திரம் நான்காம் பாதம்: இதன் அதிபதி சந்திரன். சுயநலம் உள்ளவர்கள். கௌரவம், சொத்து சுகங்களை நாடுபவர்கள். பேராசை, பொறாமை, முன்கோபம் இவர்களது முக்கிய குணங்கள். ஆடம்பரத்தில் நாட்டமுள்ளவர்கள். காரியவாதிகள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்துவிடுவார்கள். எப்போதும் முதன்மை ஸ்தானத்தை விரும்புவார்கள்.