பூரம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும்.

பொதுவான குணங்கள்: நுண்கலைகளான ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில் ஈடுபாடும் திறமையும் இருக்கும். கலைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். பேராசை, புகழாசை, பொருளாசை கொண்டவர்கள். ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். தங்கள் புகழையே பேசிக்கொண்டிருப்பவர்கள். தான தர்மங்கள் செய்து அதனால் புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.

பூரம் நட்சத்திரம் முதல் பாதம்: இதன் அதிபதி சூரியன். திறமைசாலிகள். நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள். பேச்சுத்திறமை மிக்கவர்கள். எதையும் எதிர்த்துப் போராடி, எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். உடல் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: இதன் அதிபதி புதன். நல்ல கல்வியும் திறமையும் இருந்தாலும், அடிக்கடி தோல்வியைச் சந்திப்பார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற பாகுபாடு கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவார்கள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்த்து, பிறரைச் சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: சுக்கிரன் இதன் அதிபதி. ஆசாபாசம் மிக்கவர்கள். ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். பேராசை மிக்கவர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தன் சுகத்தையும், முன்னேற்றத்தையும் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்.

பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம்: செவ்வாய் இதன் அதிபதி. அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள். பணத்தைச் சேர்த்த வேகத்தில் செலவழித்து விட்டுக் கஷ்டப்படுபவர்கள். திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை இருக்காது. தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, அதனால் பெயரும் புகழும் பாதிக்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் பக்தியுடன் முருகனை வழிபட்டால், துயரங்கள் நீங்கும்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top