திருவோணம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ந்திரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் திருவோணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லோரிடமும் இரக்கம் காட்டுவீர்கள். மனிதாபிமானம் மிக்கவர்களாக இருப்பீர்கள். ‘கோபம் இருக்குமிடத்தில் குணமும் இருக்கும்’ என்பதற்கேற்ப கோபப்பட்டாலும், உடனே மறந்து மன்னித்து விடுவீர்கள். எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பீர்கள். தாயிடம் அன்பும் தெய்வ பக்திக்கும் மேலான பக்தியும் கொண்டவர்களாக இருப்பீர்கள். கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் மிக்கவர்கள். இருக்கும் இடம் முதல் உடுத்தும் உடை வரை மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். செலவு செய்வதில் கணக்கு வழக்கு பார்த்தாலும், மற்றவர் களுக்கு உதவி செய்வதில் கணக்குப் பார்க்க மாட்டீர்கள்.

எங்கு சென்றாலும் நம் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் கௌரவமும் புகழும் பெறுவீர்கள். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க மாட் டீர்கள். லட்சியத்தை அடைவதில் எத்தனை குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் சோர்வில்லாமல் முன்னேறி குறிக்கோளை அடைவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள்கூட நெருக்கடியில் இருக்கும் போது வலியச் சென்று உதவி செய்யும் மனம் கொண்டவர்கள். கலை, இலக்கியங்களில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பீர்கள். கற்பனை வளம் மிக்கவர்களாக, கதை, கவிதை எழுதுவதில் திறமையுள்ளவர்களாக இருப்பீர்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். இசை மற்றும் ஓவியங்களை ரசிப்பதுடன் அந்தக் கலைஞர்களை ஆதரிக்கவும் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பீர்கள். பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பீர்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பீர்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவீர்கள். 

திருவோணம் 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – செவ்வாய்

திருவோணம் முதல் பாதத்துக்கு அதிபதி மேஷ செவ்வாய். இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் துறுதுறுவென்று காணப்படுவீர்கள். சிந்தனையில் தெளிவும் செயலில் உறுதியும் உள்ளவர்களாக இருப்பீர்கள். கொண்ட லட்சியத்தை அடைவதில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் உறுதியாக இருந்து சாதிப்பீர்கள். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரின் அன்பும் ஆதரவும் தடையில்லாமல் பெற்றிருப்பீர்கள். ஓய்வின்றி உழைப்பதற்குச் சளைக்கமாட்டீர்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். புதுப் புது ஆடை, ஆபரணங்களை வாங்கி அணிந்துகொள்வதை விரும்புவீர்கள். குடும்பத்தை நேசிக்கும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்துகொள்வீர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களாக இருப்பீர்கள். திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். திருமணத்தைப் பொறுத்தவரை பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமாகவே இருக்கும்.

திருவோணம் 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சுக்கிரன்

தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பீர்கள். முடியாது என்று சொல்லும் காரியங்களைக் கூட சாமர்த்தியமாகப் பேசி முடித்துக் காட்டுவீர்கள். அடிக்கடி கோயில்களுக்குச் சென்று வழிபடுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லும்படி தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பயணம் செய்பவர்களாக இருப்பீர்கள். புது ஆடைகளையும் ஆபரணங்களையும் வாங்குவதில் பணம் செலவழிப்பீர்கள். மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக ஆடம்பரமாகச் செலவு செய்பவர்களாக இருப்பீர்கள். பொறுமையாக இருக்கும் நீங்கள், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதைப் போல் கோபத்தில் பொங்கி எழவும் செய்வீர்கள். முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் ஆலோசனையைக் கேட்டே முடிவெடுப்பீர்கள். குடும்பத்துக்காக சுகங்களைத் தியாகம் செய்பவர்களாக இருப்பீர்கள்.

திருவோணம் 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – புதன்

இந்த பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பீர்கள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவீர்கள். பணத்துக்கு மதிப்பு தரமாட்டீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பெற்றோரைத் தெய்வமாக நினைத்துப் போற்றுவீர்கள். பகைவர்க்கும் இரங்கும் மனம் கொண்டிருப் பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாது என்று சொல்லும் வேலைகளைக் கூட எளிதாகச் செய்து முடிப்பீர்கள். ஆனாலும் தான் செய்ததாக நினைக்காமல் கடவுள் அருளால் செய்ததாகக் கூறுவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும் எளிமையாக இருக்கவே விரும்புவீர்கள். சமூக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். இன்பம் துன்பம் எதையும் சமமாக நினைப்பீர்கள். கடந்து வந்த பாதையை மறக்கமாட்டீர்கள். பிள்ளைகளுக்குத் தரமான கல்வி வழங்கவேண்டும் என்பதற்காக பெரும் பணம் செலவு செய்யவும் தயங்கமாட்டீர்கள்.

திருவோணம் 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சந்திரன்

இந்தப் பாதத்தில் பிறந்த உங்களுக்கு நவாம்ச அதிபதியாகச் சந்திரன் இருப்பதால், அழகான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். அமைதி தவழும் முகத்துடன் காணப்படுவீர்கள். கற்பனைக்கு காரகத்துவம் வகிப்பவர் சந்திரன் என்பதால், அடிக்கடி கற்பனையுலகில் சஞ்சரிப்பீர்கள். புதுப் புது சிந்தனைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். மற்றவர்களை ஏமாற்றி லாபம் அடைய விரும்பமாட்டீர்கள். கஷ்டப்படுபவர்களுக்கு ஓடிச் சென்று ஆறுதல் சொல்வீர்கள். மற்றவர் களுடன் பகிர்ந்து உண்ணவேண்டும் என்று நினைப்பீர்கள். சண்டையை விட சமாதானத்தை விரும்புவீர்கள். மற்றவர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஓடிச் சென்று சமாதானம் செய்யத் துடிப்பீர்கள். சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். கலைத்துறையில் குறிப்பாக திரைப்படத் துறையில் பணமும் புகழும் பெறுவீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, வெங்கடேச பெருமாள்

அணியவேண்டிய நவரத்தினம்: முத்து
வழிபடவேண்டிய தலங்கள்: திருப்பதி, திங்களூர்

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top