சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமையும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகமிருக்கும். மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த தயங்காதவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டீர்கள். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டுவதுடன் அவர்களின் நலனுக்காகப் போராடவும் தயங்கமாட்டீர்கள். உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். மக்களிடையே விழிப்பு உணர்வும் பிரசாரங்களை மேற்கொள்வீர்கள். எப்போதும் இளமைத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். எங்கும் எதிலும் தலைமை ஸ்தானத்தில் இருப்பீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களைப் பல வகைகளிலும் கவர்ந்து விடுவீர்கள். பல கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். உழைத்து சொத்து சேர்க்கவேண்டும் என்று விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். மற்றவர்கள் உங்களிடம் வீண் விவாதத்துக்கு வந்தால், கொஞ்சம்கூட சளைக்காமல் அவர்களுக்குப் பதிலடி தருவீர்கள். தொழிலாளர் நலன் சார்ந்த இயக்கங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்று, அவர்களின் நலன்களுக்காகப் போராடுவீர்கள். எப்போதும் இளைஞர்கள் சூழ்ந்திருக்கக் காணப்படுவீர்கள். உங்கள் நடத்தை, சொல், செயல் ஆகிய அனைத்தும் எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கும். எந்தத் துறையில் இருந்தாலும், மற்றவர்களை மேற்பார்வை யிடும் பொறுப்பில் இருப்பீர்கள். அடிமட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
உத்திராடம் 1-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – குரு
அன்பும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் மேலும் படிக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். புராண, இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், அவை வலியுறுத்தும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதில் உறுதியும் கொண்டிருப்பீர்கள். அபாரமான நினைவாற்றலைப் பெற்றிருப்பீர்கள். ஒருமுறை கேட்டாலே அப்படியே மனதில் பதிய வைத்துக்கொள்வீர்கள். ஆசாரியர்களிடமும், பெரியோர்களிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். புதுப் புது டிசைனில் தங்க நகைகளை அணிந்துகொள்ள விரும்புவீர்கள். கற்ற கல்வி மற்றும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள். தங்கள் விஷயத்தில் மற்றவர்கள் தேவையில்லாமல் தலையிடுவதை விரும்ப மாட்டீர்கள். கணவராக இருந்தால் மனைவியிடமும் மனைவியாக இருந்தால் கணவரிடமும் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவதுடன், அவருடைய ஆலோசனையைக் கேட்ட பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்திராடம் 2-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி
உத்திராடம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சற்று மெதுவாகத்தான் செயல்படுவீர்கள். தந்தையை விடத் தாயிடம் அதிக பாசம் கொண்டிருப்பீர்கள். ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் ஆகியவற்றில் பெயரும் புகழும் பெறுவீர்கள். சில நேரங்களில் படபடப்பாகக் காணப்படுவீர்கள். ஒருவருக்கு நன்மை ஏற்படுமென்றால், அதற்காகப் பொய் சொல்லவும் தயங்கமாட்டீர்கள். வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊடகத் துறையில் பிரபலமாக விளங்குவீர்கள். தந்தையுடன் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். தேவை யில்லாமல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு அதை நிறைவேற்ற முடியாமல் வருத்தப்படுவீர்கள். இளம் வயதிலேயே மற்றவர்கள் வியக்கும்படி எல்லா வசதிகளையும் பெற்றிருப்பீர்கள்.
உத்திராடம் 3-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி
உத்திராடம் 3-ம் பாதத்தில் பிறந்த நீங்கள், சுயமாகச் சிந்திப்பீர்கள். தவறோ சரியோ மனதுக்குச் சரியென்று பட்டதைச் சொல்வீர்கள்; செய்வீர்கள். ஒரே நேரத்தில் பலவிதமாக சிந்தனை செய்வீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி சாமர்த்தியமாகச் செய்வீர்கள். அடிக்கடி கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படுவீர்கள். எதைக் கேட்டாலும் பளிச்சென்று பதில் சொல்வீர்கள். மற்றவர்கள் அறிவுரை சொல்வதை விரும்பமாட்டீர்கள். சிலருக்குக் கல்வியில் தடை ஏற்பட்டு விலகும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் ஏற்படக்கூடும். உங்களிடம் சகஜமாகப் பழகுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். தந்தையுடன் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள்.
உத்திராடம் 4-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு
உத்திராடம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள். பெற்றோர்களிடம் அதிக பாசம் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களுக்கு சேவை செய்வீர்கள். எப்போதும் சோர்வு என்பதே இல்லாமல் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். முகத்தில் எப்போதும் மலர்ச்சி நிலைத்திருக்கும். மற்றவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அதிகப் பாசமும், அவர்கள் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டிருப்பீர்கள். வெளிநாடுகளிலும் நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். அவர்கள் மூலம் ஆதாயமும் அடைவீர்கள்.
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியபகவான், தட்சிணாமூர்த்தி
அணியவேண்டிய நவரத்தினம்: மாணிக்கம்
வழிபடவேண்டிய தலங்கள்: சூரியனார்கோவில், ஆலங்குடி