பூராடம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் பூராடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே சுக்கிர தசை வருவதால், அதற்கு உரியப் பலன்கள் தந்தைக்குக் கிடைக்கும். பூராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர தசை பல வருடங்களுக்கு நடைபெறும் என்பதால், அனைத்து வசதி வாய்ப்புகளையும் இளமையிலேயே பெற்று மகிழ முடியும். பூராடம்  நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கலை ரசனையை உணர்த்தும் நீண்ட மெல்லிய விரல்களைப் பெற்றிருப்பீர்கள். மேலும் மேலும் கற்கவேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். கோபத்திலும்கூட அழகாகத் தெரிவீர்கள். ஆண்களாக இருந்தால் சற்றே பெண்மையின் நளினம் இழையோடும். பெண்களாக இருந்தால் ஆண்மையின் மிடுக்குடன் காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை போராடியாவது முடித்துக் காட்டுவீர்கள். பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள்.

எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பழகுவீர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். அவர்களின் விருப்பங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். குறிப்பாக தாயிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். அமைதியை விரும்புவீர்கள். இயற்கைக் காட்சிகளை ரசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பீர்கள். புதுப் புது ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக ஆராய்ந்து பார்த்த பிறகே ஒரு முடிவுக்கு வருவீர்கள்.

ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். முயற்சி செய்தால் அந்தத் துறையில் புகழ் பெற்று விளங்க முடியும். ‘ஏக சந்த கிராஹி’ என்று சொல்வதைப் போல் எதையும் ஒருமுறை கேட்டுவிட்டால் உடனே கிரகித்துக்கொள்வீர்கள். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். விடுமுறை என்று வந்துவிட்டால் எங்காவது ஊர் சுற்றக் கிளம்பிவிடுவீர்கள். சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று விரும்புவீர்கள். சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சமூக சேவை செய்வதில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். எந்த வேலையில் ஈடுபட்டாலும் உங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்.

பூராடம் 1-ஆம் பாதம்

நட்சத்திர அதிபதி – சுக்கிரன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – சூரியன்

பூராடம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் உண்மையே பேசுவீர்கள். கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உழைப்பதற்குச் சலித்துக்கொள்ள மாட்டீர்கள். இன்பம் துன்பம் எது வந்தாலும் ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்வீர்கள். எதிலும் மற்றவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதை விரும்பமாட்டீர்கள். சுயமாகச் செயல்படவே விரும்புவீர்கள். மற்றவர் மனம் புண்படும்படி நடந்துகொள்ள மாட்டீர்கள். கடின சித்தம் கொண்டவர்களையும் உங்களுடைய கனிவான வார்த்தைகளின் மூலம் வசப்படுத்திவிடுவீர்கள். அதிகாரப் பதவியில் அமரும் யோகம் உண்டாகும். தந்தைவழியில் உதவிகள் வசதி வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். அடிக்கடி முன்கோபத்தால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பிறகு வருத்தப்படுவீர்கள்.

பூராடம் 2-ஆம் பாதம்

நட்சத்திர அதிபதி – சுக்கிரன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – புதன்

பூராடம் 2-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதியாகக் கன்னியில் உச்சம் பெற்ற புதன் இருப்பதால், சகல விஷயங்களிலும் தெளிந்த அறிவு பெற்றிருப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி சிந்தனை வசப்படுவீர்கள். தன்மானம் மிக்கவர்களாகவும் சுயகௌரவத் துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பீர்கள். பெற்றோரிடம் அதிகப் பிரியம்  வைத்திருப்பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்பீர்கள். பத்திரிகைத் துறையில் முத்திரைப் பதிப்பீர்கள். சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சேவை செய்வீர்கள். வாழ்க்கைத்துணையிடமும் குழந்தைகளிடமும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். அவர்களைக் கடிந்து பேசமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையையே விரும்புவீர்கள். நகைச்சுவையுணர்வுடன் பேசும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள். சுயமாக முன்னேறவேண்டும் என்று நினைப்பீர்கள்.

பூராடம் 3-ஆம் பாதம்

நட்சத்திர அதிபதி – சுக்கிரன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – சுக்கிரன்

‘Born with silver spoon in mouth’ என்று சொல்லும்படி பிறக்கும்போதே வசதியான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். அப்படியே இல்லையென்றாலும். நீங்கள் பிறந்ததும் உங்கள் தந்தைக்கு செல்வங்கள் சேரும். அரியப் பெரிய காரியங்களைச் சாதிக்கவேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள். பல வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும் தன்னடக்கத்துடன் நடந்துகொள்வீர்கள். இசையில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பதக்கமும் பெறுவீர்கள். சமூகநலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காகவே சில காரியங்களைச் செய்வீர் கள்.உங்கள் திருமணம் பெரும்பாலும் காதல் திருமணமாகவே அமையும். வாழ்க்கைத்துணைக்குச் சம உரிமை கொடுத்து நண்பரைப் போல் நடத்துவீர்கள். இயற்கை எழில் நிறைந்த பகுதியில் வசிப்பதை விரும்புவீர்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள்.

பூராடம் 4-ஆம் பாதம்

நட்சத்திர அதிபதி – சுக்கிரன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – செவ்வாய்

தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எல்லோரிடமும் கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். வீர சாகசங்களைச் செய்வதில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பீர்கள். சொத்துகளை வாங்கிக் குவிக்கவேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள். தேசத்துக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது தங்கள் சொத்துகள் அனைத்தையும் விட்டுக் கொடுப்பீர்கள். உயிர்த் தியாகம் செய்யவும் தயங்கமாட்டீர்கள். தவறு செய்பவர்கள் எத்தனைப் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கத் தயங்கமாட்டீர்கள். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அளவோடுதான் பழகுவீர்கள். தன்னைச் சார்ந்தவர்களின் வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையிடம் அன்புடன் இருப்பதைப் போலவே கண்டிப்புடனும் நடந்துகொள்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, அபிராமி அம்பிகை
அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்
வழிபடவேண்டிய தலங்கள்: ஶ்ரீரங்கம், திருக்கடவூர்

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top