மூலம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

கேதுவின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம் மூலம். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்று சொல்வது உண்டு. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் இதில் உண்மை இல்லை. ‘ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்’ என்று சொல்வதுதான் சரி. ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சந்திரன் தனுசு ராசியில் இருக்கும். அப்படி தனுசு ராசியில் இருக்கும் சந்திரனை மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் இருக்கும் குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு நாடாளும் யோகம் ஏற்படும். அதேபோல் மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதுதான் சரி.

அனுமனின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெற்றோரையும் பெரியோர் களையும் மதித்து நடப்பீர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள். பொறுமையின் சிகரமாகத் திகழ்வீர்கள். ஆனால், அநியாயம் செய்பவர்களைக் கண்டால் பொங்கி எழுவீர்கள். நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆன்மிக சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். கல்வி யறிவும் சிறந்த பேச்சாற்றலும் பெற்றிருப்பீர்கள். இளம் பருவத்திலேயே சுக்கிர தசை வந்துவிடு வதால், கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டாகும். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு, வாகனம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்று வாழ்வீர்கள். பணியிடத்தில் நிர்வாகத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்வீர்கள். சித்தர் பீடங்க ளுக்குச் சென்று தியானம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். மனம் போல் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.

வாழ்க்கைத்துணையும், குழந்தைகளும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்திலும், அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் அமைத்துத் தரவேண்டும் என்பதிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பீர்கள். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். எப்படிப்பட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்

மூலம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – கேது; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – செவ்வாய்

மூலம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் துணிந்து நின்று சமாளிப்பீர்கள். துன்பங்களும் சோதனைகளும் ஏற்பட்டாலும் கலங்காமல் சமாளித்து மீண்டு வருவீர்கள். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் பெற்றிருப்பீர்கள். நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள். தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். தாய் தந்தையிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வீர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட மாட்டீர்கள். அப்படியே உணர்ச்சிவசப்பட்டாலும் உடனே சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையிடமும் பிள்ளைகளிடமும் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். அதே நேரம் அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் தயங்க மாட்டீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவீர்கள். செலவு செய்வதில் கணக்குப் பார்த்துச் செய்வீர்கள்.

மூலம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – கேது; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – சுக்கிரன்

2-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி ரிஷப சுக்கிரன். இதில்  பிறந்த நீங்கள் சமயோசிதமாக நடந்துகொள்வீர்கள். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதுப்புது ரகங்களில், டிசைன்களில் ஆடைகளையும் ஆபரணங்களையும் வாங்கிக் குவிப்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். அதற்கேற்ற வசதியும் வந்து சேரும். எதிரிகளைக் கூட மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பீர்கள். பல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பில் முதலாவதாக இருப்பீர்கள். மற்றவர்களிடம் அளவுக்கதிகமான இரக்கம் காட்டுவீர்கள். தந்தைவழியில் சொத்துகள் இருந்தாலும் சுயமாக உழைத்து மேலும் சொத்து சேர்ப்பீர்கள். பெற்றோரையும் பெரியோரையும் மதித்து நடப்பீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள்.

மூலம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – கேது; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – புதன்

சிறந்த கல்வியறிவும் பல துறைகளில் பரந்த ஞானமும் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களை எளிதில் நம்பிவிட மாட்டீர்கள். அதேபோல் மற்றவர்கள் சொல்வதையும் கேட்க மாட்டீர்கள். உங்களுக்குச் சரியென்று பட்டதையே செய்வீர்கள். வாதம் செய்வதில் வல்லவராக இருப்பீர்கள். எப்போதும் படித்துக்கொண்டே இருப்பீர்கள். மனோதத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களின் மனதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வதில் சமர்த்தராக இருப்பீர்கள். சிறு வயதில் அடிக்கடி ஏமாற்றங்களுக்கு ஆளாகவும் நேரிடும். உடன்பிறந்தவர்களாக இருந்தாலும் ஒரு எல்லையுடன்தான் அவர்களுடன் உறவாடுவீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்கும் பிள்ளைகளுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படச் செய்வீர்கள்.

மூலம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – கேது; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – சந்திரன்

மூலம் 4-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சந்திரன். எப்போதும் சிரித்த முகத்துடன் அமைதியின் உருவமாக இருப்பீர்கள். எதையும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் தோல்வியே வரக்கூடாது என்று நினைப்பீர்கள். பல துறைகளிலும் தேர்ந்த அறிவு பெற்றிருப் பீர்கள். அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள். அதிகாரப் பதவியில் அமரும் யோகம் உண்டு. எப்போதும் சமாதானமாக இருக்கவே விரும்புவீர்கள். ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். செல்வம் சேர்ப்பதிலும் செல்வாக்குடன் இருக்கவேண்டும் என்பதிலும் துடிப்பாக இருப்பீர்கள். இயக்கங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு ஏற்படும். தாயிடம் அதிக அன்பும் மரியாதையும் கொண்டிருப்பீர்கள். பிள்ளைகளை அரவணைத்துச் செல்வீர்கள் என்பதால், அவர்களும் உங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், ஆஞ்சநேயர்

அணியவேண்டிய நவரத்தினம்: வைடூரியம்

வழிபடவேண்டிய தலங்கள்: பிள்ளையார்பட்டி, நாமக்கல்

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top