கேட்டை நட்சத்திரம் பொதுவான குணங்கள்

புதனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் கேட்டை. ‘கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழியே உண்டு. கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். மன தைரியம் மிக்கவர்களாக இருப்பீர்கள். இயல்பிலேயே நல்ல குணங்களைப் பெற்றிருப்பீர்கள். ஆனாலும், அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு அதற்காக வருத்தப்படச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பீர்கள். எப்போதும் முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் துடிப்புடன் செயல்படுவீர்கள். அதே நேரத்தில் சில நேரங்களில், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கேற்ப கிடைத்த அளவில் மனத் திருப்தி அடைந்துவிடுவீர்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றிப் பெருமை பேசுவீர்கள். அடிக்கடி எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் விரக்தியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல் சுயமாகத் தொழில் செய்து பணம் ஈட்டுவீர்கள்.

உறவினர்களால் ஏமாற்றத்துக்குள்ளாகி வருத்தப்படுவீர்கள். மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்க மாட்டீர்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்களாக இருப்பீர்கள். நிறைய புத்தகங் களை வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள். அமைதி விரும்பியாக இருப்பீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்பும் நீங்கள், சண்டை நடக்கும் இடத்திலிருந்து உடனே விலகிவிடுவீர்கள். மற்றவர்களின் மனப்பாங்கை அறிந்து பேசுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.  உங்களிடம் இருப்பதை யாரேனும் கேட்டால் சற்றும் தயங்காமல் உடனே கொடுத்துவிடுவீர்கள். வருங்காலத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடன் பாசத்துடன் இருப்பதைப் போலவே கண்டிப்புடனும் நடந்துகொள்வீர்கள். தெய்வ பக்தி மிக்கவர்களாக இருப்பீர்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…

கேட்டை 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – புதன்; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – குரு

எப்போதும் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலநேரங்களில் விளையாட்டுத்தனமாக நடந்துகொள்வீர்கள். உழைப்பதற்குச் சளைக்க மாட்டீர்கள். மற்றவர்களுக்காகப் பாடுபடுவீர்கள். உணவு விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டீர்கள். உங்கள் அணுகுமுறை மற்றவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தரும். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அடிக்கடி கோயில்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். நண்பர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை அமைவதற்காக பெரும் முயற்சி எடுத்து சாதிக்கவும் செய்வீர்கள்.

கேட்டை 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – புதன்; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – சனி

நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். குடும்பப் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வீர்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப் பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பீர்கள். முன்கோபத்தால் அடிக்கடி மற்றவர்களின் மனதைப் புண்படுத்திவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்பீர்கள். எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. கல்வியறிவு இல்லையென்றாலும் சிறந்த சிந்தனையாளராக இருப்பீர்கள். எந்த வேலையையும் திருத்தமாகச் செய்ய நினைப்பீர்கள். எப்போதும் நண்பர்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். தந்தையின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

கேட்டை 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – புதன்; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – சனி

கேட்டை மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதியாக இருப்பவர் கும்ப சனி ஆவார். பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவீர்கள். எப்போதும் சாந்தமாக இருப்பீர்கள். சண்டை சச்சரவுகளைக் கண்டால் விலகிவிடுவீர்கள். விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும் கல்வியில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். செய்ய நினைத்த காரியத்தை எப்படியும் செய்து முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து சாதிக்கவும் செய்வீர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புவீர்கள். மற்றவர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பின்னால் நின்று முதுகில் குத்துபவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவீர்கள். ஆடு, மாடு போன்றவற்றைப் பிரியமுடன் வளர்ப்பீர்கள். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசமாட்டீர்கள். உள்ளத்தில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவீர்கள். சமைத்த உணவுகளை விட இயற்கை உணவுகளையே அதிகம் விரும்பி உண்பீர்கள்.

கேட்டை 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – புதன்; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – குரு

அன்பும் கனிவும் மிக்கவர்களாக இருப்பீர்கள். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவீர்கள். ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராகப் பேசுவீர்கள். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். வெளியிடங்களில் உங்கள் குடும்பத்தைப் பற்றி பெருமையாக பேசுவீர்கள். பெற்றவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படை யாகப் பேசி நடந்துகொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். எப்போதும் தனிமையில் இருப்பதையே விரும்புவீர்கள். ஆன்மிக அறிஞர்களின் தொடர்பு உங்கள் மனதைப் பண்படுத்தும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். வீடு, வாகனம் என்று அத்தனை வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீலட்சுமி வராகப் பெருமான், ஶ்ரீமுருகப்பெருமான்
அணியவேண்டிய நவரத்தினம்: மரகதப் பச்சை
வழிபடவேண்டிய தலங்கள்: ஶ்ரீமுஷ்ணம், குன்றக்குடி

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top