அனுஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

னிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், கவர்ச்சியான தோற்றம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பீர்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாகக் காணப்படுவீர்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டுமென்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாக இருப்பீர்கள். அமைதியையே எப்போதும் விரும்புவீர்கள். ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சுயமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக இருப்பீர்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டீர்கள்.

பலருக்கும் அவர்களுடைய துன்பத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் நீங்கள், உங்கள் பிரச்னைகளை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டீர்கள். பல நல்ல காரியங்களில் உங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பல விஷயங்களிலும் ஞானம் பெற்றவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்வதை விரும்புவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விரும்பப்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வீர்கள். கலை, இலக்கியத்துறையில் புகழ் பெற்று விளங்குவீர்கள். அரசாங்கத்திடமிருந்து பரிசும் பாராட்டும் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதனால் மனம் சோர்ந்து போய்விட மாட்டீர்கள். எந்த பேதமும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். உங்களில் சிலர் அரசியலிலோ அல்லது ஆன்மிகத்திலோ ஈடுபட்டு மனித சமூகத்துக்கு நன்மை செய்வீர்கள்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…

அனுஷம் 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி: சூரியன்

எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எதையும் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். இல்லையென்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். அடிக்கடி யாகங்களும் பூஜைகளும் செய்வதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். தாய், தந்தையிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். நண்பர்களிடம்கூட ஒரு எல்லைக்குள்தான் பழகுவீர்கள். அரசியல்வாதி, அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பைப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு ஆன்மிகத்திலோ அல்லது அரசியலிலோ பிரபலமடையும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் எப்படியும் உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள்.

அனுஷம் 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – புதன்

வாழ்க்கையில் எப்போதும் இன்பமே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சுவையில்கூட இனிப்பையே அதிகம் விரும்புவீர்கள். தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எப்படிப்பட்ட கடினமான காரியமாக இருந்தாலும் சாதுர்யமாகப் பேசி சாதித்துவிடுவீர்கள். நிறையப் படிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். வயதான பிறகும்கூட எதையேனும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று தங்குவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். ஜோதிடக் கலையில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். மனதில் எந்த பேதமும் இல்லாமல் அனைவருடனும் சகஜமாகப் பழகுவீர்கள். இசையை ரசிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத்துணையை அதிகம் நேசிப்பீர்கள். ஆணாக இருந்தால் பெண் நண்பர்களையும், பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களையும் அதிகம் பெற்றிருப்பீர்கள். எந்த நிலையிலும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள்.

 அனுஷம் 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – சுக்கிரன்

சுக்கிரனை நவாம்ச அதிபதியாகக்கொண்டிருக்கும் நீங்கள், கவர்ச்சிகரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அன்புடன் நடந்துகொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதை அடைய சலிக்காமல் உழைப்பீர்கள். மிகவும் சாந்தமாகப் பேசுவீர்கள். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பீர்கள். பள்ளி, கல்லூரிப் பருவத்தில் துறுதுறுப்பாக இருப்பீர்கள். நவீன ரக ஆடை, ஆபரணங்களை வாங்க நிறைய செலவழிப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள். நண்பர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். எந்தத் துறையில் பணியில் இருந்தாலும், அந்தத் துறையில் முக்கியமான இடத்தில் இருப்பீர்கள். வீண் சண்டைக்குப் போக மாட்டீர்கள். வந்த சண்டையை விட மாட்டீர்கள். மனதில் எப்போதும் நல்ல விஷயங்களைச் சிந்தித்தபடி இருப்பீர்கள்.

அனுஷம் 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – சனி; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – செவ்வாய்

அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். இனிமையாகப் பழகவும் பேசவும் செய்வீர்கள். ஆனால், கோபம் வந்துவிட்டால், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள். குடும்பத்தினரிடம் அதிக அன்புகொண்டிருப்பீர்கள். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதை விரும்புவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சம உரிமை கொடுப்பீர்கள். இது நல்லது, இது கெட்டது என்று பகுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் திறமையைப் பெற்றிருப்பீர்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் அதிகம் பேசாமல் ஒதுங்கி இருப்பீர்கள். தேவை என்று வருபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாவிஷ்ணு, முருகப் பெருமான்
அணியவேண்டிய நவரத்தினம்: நீலக் கல்
வழிபடவேண்டிய தலம்: நவதிருப்பதிகளில் ஒன்றான வரகுணமங்கை, திருப்பரங்குன்றம்.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top