விசாகம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்

குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காவது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவீர்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மன அடக்கமும் புலனடக்கமும்கொண்டிருப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பீர்கள். கொண்ட கொள்கைகளில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பீர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மிகவாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பீர்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவீர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியும் பேசுவீர்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நட்புகொண்டிருப்பீர்கள். அடிக்கடி தேசாந்திரியாக ஊர்சுற்றக் கிளம்பிவிடுவீர்கள்.

பெற்றோர்களிடம் அளவற்ற பாசம் கொண்டிருப்பதைப்போலவே மனைவி, பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களுடன் இருப்பதில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் சுகத்துக்காகப் பாடுபடுவீர்கள். சில நேரங்களில் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வீர்கள். மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இயல்பிலேயே பெற்றிருப்பீர்கள். எத்தனை பெரிய இழப்புகள் ஏற்பட்டாலும் மனதளவில் சிறிதும் கலக்கம்கொள்ள மாட்டீர்கள். மற்றவர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். பல வழிகளிலும் பொருளீட்டும் வாய்ப்பைப் பெற்றிருப்பீர்கள். அரசாங்க விருதுகளையும் பாராட்டுகளையும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்

விசாகம் 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – குரு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – செவ்வாய்

விசாகம் முதல் பாதத்தின் நவாம்ச அதிபதி  செவ்வாய். அன்பும் இரக்க மனமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் துன்பத்தில் கலங்கி நிற்பதைக் கண்டு பொறுக்க மாட்டீர்கள். உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடி பேசுவீர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வீரமும் விவேகமும் சேர்ந்து பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் செய்யும் தீமைகளைக் கண்டு பொறுக்க மாட்டீர்கள். உதவி என்று வருபவர்களுக்கு தாராளமாகக் கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால், சிலரை நம்பி ஏமாந்துவிட்டு பிறகு அதற்காக வருத்தப்படுவீர்கள். கிராமிய விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றி பெற்று, பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். படிப்பைப் பொறுத்தவரை சுமாரான மாணவராகத்தான் இருப்பீர்கள். சகோதரர்களிடம் அளவற்ற அன்புகொண்டிருப்பீர்கள். நட்புக்காக எதையும் இழக்கத் துணிவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு சம உரிமையும் முழுச் சுதந்திரமும் கொடுப்பீர்கள்.

விசாகம் 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – குரு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – சுக்கிரன்

மற்றவர்களைக் கவரும் தோற்றம்கொண்டிருப்பீர்கள். பேச்சிலேயே மற்றவர்களை ஈர்த்துவிடுவீர்கள். உயரிய லட்சியங்களைக்கொண்டவர்களாக இருப்பீர்கள். இலக்கியங்களில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். கதை, கவிதைகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். புதுப் புது ஆடை, அணிகலன்களை வாங்கி அணிந்துகொள்வதில் மிகுந்த விருப்பம்கொண்டிருப்பீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அன்பும் ஆதரவும் பெற்றவர்களாக இருப்பீர்கள். ஏழைகளிடம் இரக்கம்கொள்வீர்கள். உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். இசை, நடனக் கலைகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். அடிக்கடி தின்பண்டங்களை தின்றபடி இருப்பீர்கள். எங்கிருந்தாலும் அந்த இடத்தில் செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்காகக் கடுமையாக உழைக்கவும் செய்வீர்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கொள்கையைவிட்டுத் தர மாட்டீர்கள்.

விசாகம் 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – குரு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – புதன்

விசாகம் 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதியாக இருப்பவர் வித்யாகாரகனான புதன்.  எனவே, இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். படிப்பதிலும் பட்டங்கள் வாங்குவதிலும் ஆர்வமுடன் இருப்பீர்கள். எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். எப்போதும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவீர்கள். வாழ்க்கையின் அடித்தட்டிலிருந்து மேல்நிலைக்கு வந்த பிறகும், கடந்த காலத்தை மறக்க மாட்டீர்கள். உங்களுடைய வித்தியாசமான அணுகுமுறை மற்றவர்களால் பாராட்டப்படும்படி இருக்கும். அனைவரிடமும் மரியாதையுடன் பழகுவீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர்களாக இருப்பீர்கள். நினைத்தை முடிக்கும் ஆற்றல்கொண்டவர்களாக இருப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக விலகிவிடுவீர்கள்.

விசாகம் 4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – குரு; ராசி அதிபதி – செவ்வாய்; நவாம்ச அதிபதி – சந்திரன்

அனைவரிடமும் அன்பும் கருணையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள். ஆழ்ந்த சிந்தனையும், அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தும் ஆற்றலும்கொண்டவர்களாக இருப்பீர்கள். விதவிதமான சென்ட் வகைகளைப் பயன்படுத்துவதை விரும்புவீர்கள். எதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பெரிய கூட்டத்திலும் தனித்துத் தெரிவீர்கள். கலை, இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பேச்சுத் திறமையால் மற்றவர்களைக் கவர்ந்துவிடுவீர்கள். பழங்காலப் பொருள்களைச் சேகரித்து பொக்கிஷமாக பாதுகாப்பதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். `நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று சொல்லும் வகையில் அழகும் பண்புகளும்கொண்ட வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்:         ஶ்ரீமுருகப்பெருமான்

அணியவேண்டிய நவரத்தினம்:   கனக புஷ்பராகம்

வழிபடவேண்டிய தலங்கள்:         திருச்செந்தூர், எட்டுக்குடி. 

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top