சுவாதி நட்சத்திரம் பொதுவான குணங்கள்

ராகு பகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக வருவது சுவாதி.

துலாம் ராசியில் இடம் பெறும் சுவாதி நட்சத்திரம் மிகவும் பிரகாசமான நட்சத்திரம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பு மனமும் இரக்க சுபாவமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் அளவுக்கு இளமைத் தோற்றமும் அழகும் கொண்டிருப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். பல துறைகள் சம்பந்தப்பட்ட நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதன் காரணமாக பல துறைகளிலும் விவாதிக்கும் திறமை பெற்றவர்களாகத் திகழ்வீர்கள். பல நூல்களைப் படித்திருந்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உங்களுக்குப் பூரணமாக இருக்கும். உதவி என்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டீர்கள். அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவற மாட்டீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தை எப்படியாவது முடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல் செயல்படுவீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் தனித்துவத்துடன் தெரிவீர்கள். நீதி, நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மற்றவர்களுக்குச் சொல்வதைப் போலவே நீங்களும் நடந்துகொள்வீர்கள்.

மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இது நல்லது, இது கெட்டது என்று பகுத்துப் பார்த்து நடந்துகொள்வீர்கள். எங்கும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். கலைகளை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் மன உறுதியை இழக்க மாட்டீர்கள். தன்மானத்துக்கும் சுயகௌரவத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் சாமர்த்தியமாகத் தீர்த்துவிடுவீர்கள். மனைவி, பிள்ளைகளிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். வயதான பிறகும்கூட விளையாட்டுப் பிள்ளையாக நடந்துகொள்வீர்கள். குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவீர்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளைக் கூட கவர்ந்து விடுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக இரவு பகல் பாராமல் உழைப்பீர்கள். உறவினர்களிடம் அன்புடன் நடந்துகொள்வீர்கள். சுவையான உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடுவீர்கள். உங்கள் சுதந்திரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டீர்கள்.

இனி பாத வாரியான பலன்களைப் பார்ப்போம்…

சுவாதி 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – குரு

சுவாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் மன உறுதி மிக்கவர்களாகவும், துணிச்சலுடன் செயல்படுபவர்களாகவும், அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பீர்கள். எப்போதும் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பைப் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். நிறைய படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பல பட்டங்களைப் பெற்றுப் பிரகாசிப்பீர்கள். எவ்வளவுதான் படித்திருந்தாலும், கொஞ்சம்கூட கர்வம் இல்லாமல் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். எப்போதும் எளிமையான, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவீர்கள். சிறியவர்களிடமும் மரியாதையுடன் பழகுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். விவாதம் என்று வந்துவிட்டால் வெற்றி உங்களுக்குத்தான் என்று சொல்லும்படி வெளுத்துக் கட்டுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள்.  தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சுவாதி 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – சனி

சுவாதி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அனைவரிடமும் எந்த ஒரு பேதமும் பார்க்காமல் அன்பு செலுத்திப் பழகுவீர்கள். உங்களுடைய நடைமுறை மற்றும் அணுகுமுறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும். அதனால், எவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவில் இருந்தாலும் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள். தெய்வ பக்தி மிகுந்து காணப்படுவீர்கள். எந்தச் செயலிலும் தெய்வ அனுக்கிரகத்தை நம்பி ஈடுபடுவீர்கள். அதன் காரணமாக காரியத்தில் வெற்றியும் பெறுவீர்கள். தாய், தந்தையை கடைசி வரை மகிழ்ச்சியுடன் போற்றிப் பாதுகாப்பவர்களாக இருப்பீர்கள். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அன்புடன்  அரவணைத்துச் செல்வீர்கள். எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்வீர்கள். விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கத் தயங்கமாட்டீர்கள்.

சுவாதி 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – சனி

குடும்பத்தினரிடம் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். தங்கள் குடும்பம் ஒழுக்கமாகவும், நேர்மையுடனும் நடந்துகொண்டால் போதும் என்று நினைப்பீர்கள். ஒரு விஷயத்தை ஒட்டியும் வெட்டியும் பேசுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் செய்த உதவியை மறக்க மாட்டீர்கள். அவர்களுக்கு பிரதியுபகாரம் ஏதேனும் செய்துவிடவேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள். எதிலும் போட்டி இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகே திருமணம் செய்துகொள்வது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

சுவாதி 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி – ராகு; ராசி அதிபதி – சுக்கிரன்; நவாம்ச அதிபதி – குரு

உறவினர்களிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். தாயிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். குழந்தைப் பருவத்தில் எப்போதும் தாயின் அருகிலேயே இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வீர்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும், தான் நினைப்பதுதான் சரியென்று பிடிவாதமாக இருப்பீர்கள். ஆடம்பரமாக வாழவேண்டுமென்று விரும்புவீர்கள். தெய்வப் பணிகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காக சொத்து சேர்க்க கடுமையாக உழைப்பீர்கள். தன்னை யாரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்று அடிக்கடி ஆதங்கப்படுவீர்கள். வீடு நிறைய விருந்தினர்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். உங்களில் சிலர், அதிகம் உழைக்காமலேயே வசதி வாய்ப்புகள் ஏற்படவேண்டுமென்று நினைப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்புவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஶ்ரீலட்சுமி நரசிம்மர்

அணிய வேண்டிய ரத்தினம்: கோமேதகம், நீலக்கல்

வழிபட வேண்டிய தலங்கள்: பரிக்கல், சோளிங்கர்

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top