சித்திரை நட்சத்திரம் பொதுவான குணங்கள்

செவ்வாய் பகவானை அதிபதியாகக்கொண்ட இரண்டாவது நட்சத்திரம் சித்திரை. இதன் முதல் இரண்டு பாதங்கள் புதனை அதிபதியாகக்கொண்ட கன்னி ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் சுக்கிரனை அதிபதியாகக்கொண்ட துலாம் ராசியிலும் இடம்பெறும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மிகுந்த தைரியசாலியாக இருப்பீர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். உதவி என்று வருபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். சொல்ல வந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நினைப்புடனும் சொல்வீர்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் சற்று சோர்வு அடைவீர்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கொண்ட கொள்கையிலிருந்து விலகிச் செல்ல மாட்டீர்கள். பட்டப் படிப்பு படித்திருந்தாலும், படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. காதலித்து திருமணம் செய்துகொள்வீர்கள்.  வாழ்க்கைத் துணையை அதிகம் நேசிப்பவர்களாக இருப்பீர்கள். எந்தக் காரியத்திலும் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைக் கேட்டே செயல்படுவீர்கள். உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள். நீங்களாக மற்றவர்களிடம் சண்டைக்குப் போக மாட்டீர்கள். ஆனால், வந்த சண்டையை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள்.

பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு காட்டும் அதே நேரத்தில், அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்க மாட்டீர்கள். கற்பனைத் திறன் அதிகம் பெற்றிருப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பீர்கள். `அளவான குடும்பம், அன்பான வாழ்க்கை’ என்று சொல்லத்தக்க வாழ்க்கையைப் பெற்றிருப்பீர்கள். புதுப் புது ஆடை, ஆபரணங்களை அணிவதில் விருப்பம் கொண்டிருப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அடிக்கடி பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கவலைப்படுவீர்கள். `சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது’ என்று சொல்வார்கள். இப்படிப் பொதுவாக சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தையின் ஜனன ஜாதகத்தில் லக்னம், ராசி ஆகியவற்றுக்கு 9-ம் வீட்டுக்கு உரிய கிரகம் வலுக்குன்றியிருந்து, சூரியனும் பகை, நீச்சம் பெற்றிருந்தால் மட்டுமே தந்தைக்கு கெடுதல் ஏற்படும். எனவே, சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தந்தைகள் அனைவருமே கஷ்டப்படுவார்கள் என்று சொல்ல முடியாது.

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…

சித்திரை 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: சூரியன்

நவாம்ச அதிபதியாக சூரியனைக்கொண்ட நீங்கள் சாதுர்யமாகப் பேசிக் காரியம் சாதிப்பவர்களாக இருப்பீர்கள். படித்த படிப்புக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத வேலையைச் செய்வீர்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவீர்கள் என்பதாலும், இனிமையாகப் பேசத் தெரியாது என்பதாலும் குறைவான நண்பர்களையே பெற்றிருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.குடும்பத்தினரின் எதிர்கால நன்மையைப் பற்றி சிந்தித்துச் செயல்படுவீர்கள். பிடிவாத குணம் இருந்தாலும்கூட அவசியமான நேரத்தில் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவும் தயங்க மாட்டீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று வருவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். தாயின் வார்த்தைகளை வேத வாக்காக மதித்து நடப்பீர்கள். புதுமையை விரும்புவீர்கள்; புதுமையாகச் செயல்படுவீர்கள்.

சித்திரை 2 – ம் பாதம்

நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: புதன்

நவாம்ச அதிபதியாக புதனைக்கொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்கள் விரும்பும்படி நடந்துகொள்வீர்கள். உடல்நலனில் அக்கறைகொண்டவராக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பவர்களாக இருப்பீர்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருப்பீர்கள் என்பதால், எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தெய்வ பக்தி மிகுந்தவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்குப் புரியும்படி தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசுவீர்கள். எந்த வேலையையும் அரைகுறையாக முடிப்பதை விரும்ப மாட்டீர்கள். ‘செய்வன திருந்தச் செய்’ என்றபடி செய்யும் செயலை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க மாட்டீர்கள். வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்படியும் நிறைவேற்றி முடிப்பீர்கள். உங்கள் சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்ட காரியங்களை மட்டுமே செய்வீர்கள். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். ஒருவரைப் பார்த்த உடனே அவருடைய குணநலன்களை எடைபோட்டு விடுவீர்கள். உங்களுக்குள் திறமைகள் இருந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளத் தயங்குவீர்கள்.

சித்திரை 3 – ம் பாதம்

நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி புதன்; நவாம்ச அதிபதி: சுக்கிரன்

நவாம்ச அதிபதியாக சுக்கிரனைக் கொண்ட நீங்கள், புதுமையான சிந்தனைகொண்டவர்களாக இருப்பீர்கள். சமூகத்தில் மற்றவர்களால் போற்றிப் புகழப்படுவீர்கள். செல்வாக்கு மிகுந்தவராக இருப்பீர்கள். `எல்லாமும் எல்லோருக்கும்’ என்ற பொதுவுடைமைச் சிந்தனைகொண்டிருப்பீர்கள். சமூக நலனில் அதிக அக்கறைகொண்டவர்களாக இருப்பீர்கள். கலைத்துறையில் புகழுடன் விளங்குவீர்கள். விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்களாக இருப்பீர்கள். ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டு அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவீர்கள். ஒரு வேலையில் ஈடுபடுவதற்கு முன்னர், அந்தச் செயலினால் ஏற்படும் பின்விளைவுகளை நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு முக்கியத்துவமும் முழு சுதந்திரமும் கொடுப்பீர்கள். அவருடைய ஆலோசனையைக் கேட்ட பிறகே முடிவெடுப்பீர்கள்.

சித்திரை 4 – ம் பாதம்:

நட்சத்திர அதிபதி: செவ்வாய்; ராசி அதிபதி: புதன்; நவாம்ச அதிபதி: செவ்வாய்

மனஉறுதி அதிகம் கொண்டவர்களாக இருப்பீர்கள். எதிரிகள் அஞ்சுகிற அளவுக்கு வீரமும் விவேகமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகம்கொண்ட நீங்கள், பெரியவர்களிடம் அதிக மரியாதைகொண்டவர்களாக இருப்பீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கும்வரை ஓய மாட்டீர்கள். கல்வியில் அதிக ஆர்வம்கொண்டவர்களாக இருப்பீர்கள். சிலருக்குக் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக படிப்பு பாதியில் தடைப்படவும் வாய்ப்பிருக்கிறது. பெற்றோர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். ஒழுக்கமாக நடந்துகொள்வதுடன் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்ப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகக் கடுமையாக உழைப்பீர்கள். வாழ்க்கைத்துணையை மதித்துப் போற்றுபவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையின் அடித்தளத்தில் இருந்தாலும்கூட உங்களுடைய தீவிரமான உழைப்பின் காரணமாக உயர்ந்தநிலையை அடைந்துவிடுவீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு,
அணியவேண்டிய நவரத்தினம்:  பவளம்,
வழிபடவேண்டிய தலங்கள்: வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு.

இது பொது கணிப்பு ஆகும்.
துல்லியமான கணிப்பை பெற
கீழே தேர்ந்தெடுக்கவும்

Scroll to Top