சந்திரனை அதிபதியாகக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் அஸ்தம் இரண்டாவது நட்சத்திரம். மனோகாரகனான சந்திரனை அதிபதியாகக்கொண்டிருக்கும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான நிலையில் இருப்பீர்கள். இயற்கையெழில் சூழ்ந்த இடங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவீர்கள். தாயின் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் எத்தனை இடையூறுகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து அதை முடிப்பீர்கள். வேத சாஸ்திரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.
சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். அடிக்கடி சுற்றுலா செல்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டீர்கள். எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்படும் நேரத்தில் தியானம் செய்வதில் ஈடுபடுவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பீர்கள்.
இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…
அஸ்தம் 1-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – புதன்; நவாம்ச அதிபதி – செவ்வாய்
கல்வியில் அதிக ஆர்வம்கொண்டிருப்பீர்கள். எந்தச் செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள். சமாதானத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சண்டை என்று வந்துவிட்டால், இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஆன்மிகச் சுற்றுலா செல்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். குடும்பத்தினரிடம் அளவற்ற பாசம் கொண்டிருப்பீர்கள். உறவினர்களின் நலனுக்காக சளைக்காமல் உழைப்பீர்கள். புதுமையை விரும்புவீர்கள். புதுமையாகச் சிந்திப்பீர்கள். பல துறைகளிலும் அனுபவம் பெற்றிருப்பீர்கள். வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்வீர்கள். பிள்ளைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பதுடன், அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிப்பீர்கள்.
அஸ்தம் 2-ம் பாதம்
நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – புதன்; நவாம்ச அதிபதி – சுக்கிரன்
மற்றவர்களை வசீகரிக்கும் அழகான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்கள். அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். இல்லையென்று வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். பல தொழில்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பீர்கள் என்பதால், வேலை இல்லை என்ற சொல்லுக்கே இடம் தர மாட்டீர்கள். உழைப்புக்கு அஞ்ச மாட்டீர்கள். பெற்றோரைக் கடைசி வரை அன்புடன் கவனித்துக்கொள்வீர்கள். அதே நேரம் மனைவி, பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். அவர்களுடைய விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதுப் புது தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்று வருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். தொண்டு நிறுவனங்களில் பங்கேற்று சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.
அஸ்தம் 3-ம் பாதம்
நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – புதன்; நவாம்ச அதிபதி – புதன்
அஸ்தம் மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மிதுன புதன் என்பதால், மாறுபட்ட கோணத்திலும் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உங்களுடைய சிந்தனையும் செயலும் மற்றவர்களை வியப்புறச் செய்யும்படி இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். நண்பர்களின் தராதரத்தை உடனே புரிந்துகொள்வீர்கள். மிகுந்த தெய்வ பக்திகொண்டவர்களாக இருப்பீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே துறுதுறுவென்று காணப்படுவீர்கள். எப்போதோ நடந்தவற்றைக்கூட மறக்காமல் நினைவில் வைத்திருப்பீர்கள். துரோகம் செய்பவர்களைக் கண்டால் தூர விலகி ஓடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளை எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சமூக நலனுக்காகப் பாடுபடுவீர்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள்.
அஸ்தம் – 4-ம் பாதம்
நட்சத்திர அதிபதி – சந்திரன்; ராசி அதிபதி – புதன்; நவாம்ச அதிபதி – சந்திரன்
தாயிடம் அதிக அன்புகொண்டவர்களாக இருப்பீர்கள். தாயின் வார்த்தைகளையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். இரக்க சுபாவம் மிக்கவர்களாகக் காணப்படுவீர்கள். பல விஷயங்களிலும் பரந்த ஞானம் பெற்றிருந்தாலும், அடக்கமாகக் காணப்படுவீர்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அலட்சியமாகக் கடந்துவிடுவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிறு வயதிலிருந்தே கலைகளில் குறிப்பாக இசைக் கலையில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். பெரும்பாலும் அந்தத் துறையிலேயே முன்னேறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பினைப் பெற்றிருப்பீர்கள். உள்ளதை உள்ளபடி பேசுபவர்கள் என்பதால், குறைவான, ஆனால் உண்மையான நண்பர்களையே பெற்றிருப்பீர்கள். எந்த விஷயத்தையும் மிகவும் நுட்பமாக அணுகுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டி ருப்பீர்கள். மகான்களை தரிசித்து ஆசிகளைப் பெறுவதுடன், அவர்களுடைய ஆன்மிகப் பணிகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஶ்ரீகாயத்ரி தேவி, வெங்கடேசப் பெருமாள்
அணிய வேண்டிய நவரத்தினம்: மரகதம்
வழிபட வேண்டிய தலங்கள்: திருப்பதி, திங்களூர்.