உத்திரட்டாதி நட்சத்திரம் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். போலி வேஷம் போடுவது உங்களுக்கு அறவே பிடிக்காது. எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பீர்கள் என்பதால், உங்களிடம் ஒரு வார்த்தை வாங்குவதுகூட கடினமாக இருக்கும். அறிஞர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். பயணங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். உங்களிடம் இருக்கும் ஆன்மிக நாட்டத்தின் காரணமாக நீங்கள் செல்லும் ஊர்களில் இருக்கும் கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பல விஷயங்களையும் அறிந்திருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாகப் பழகுவீர்கள். உங்களில் சிலருக்கு வேத சாஸ்திரங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும்.
இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்
உத்திரட்டாதி 1-ம் பாதம்:
உத்திரட்டாதி முதல் பாதத்துக்கு சிம்மத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சூரியன் ஆவார். இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள், அன்புக்குக் கட்டுப்படுவீர்கள். அதிகாரம் செய்வதை விரும்ப மாட்டீர்கள். உண்மையாக நடந்துகொள்வீர்கள். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் அவர்களைத் திருத்தப் பார்ப்பீர்கள். முடியாவிட்டால் அவர்களை விட்டு விலகிவிடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பல விஷயங்களைச் செய்வதை விட ஒரு விஷயத்தைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்து மற்றவர்களின் கவனத்தைக் கவர்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். மற்றவர்கள் உதவி என்று வந்தால் தயங்காமல் உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் சொல்லும் விஷயங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். வாழ்க்கைத்துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பாக நடந்துகொள்வீர்கள்.
உத்திரட்டாதி – 2-ம் பாதம்:
உத்திரட்டாதி 2-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி கன்னியில் உச்சம் பெற்ற புதன். தொன்மையான கலாசாரம், பண்பாடு ஆகியவற்றிலிருந்து விலக விரும்ப மாட்டீர்கள். பள்ளியில் படிக்கும் போதே போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். மனைவிக்குச் சம உரிமை கொடுப்பீர்கள். அவருடைய திறமையைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துவீர்கள். தேசப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதுடன் நீங்களும் அதன்படியே நடந்துகொள்வீர்கள். உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயத்தை மற்றவர்களிடம் திணிக்கமாட்டீர்கள். புகழ்ச்சியை விரும்பமாட்டீர்கள். தொடங்கிய வேலை முடியும்வரை அதிலேயே கவனமாக இருந்து செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பிள்ளைகளிடம் நண்பர்களைப் போல் பழகுவீர்கள். அவர் களுடைய கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். உங்கள் திறமைகளை சமயம் வரும்போது வெளிப்படுத்துவீர்கள்.
உத்திரட்டாதி – 3-ம் பாதம்:
உத்திரட்டாதி 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். சிறு வயது முதலே துருதுருவென இருப்பீர்கள். எப்போதும் எதையேனும் செய்துகொண்டே இருப்பீர்கள். எதைச் செய்தாலும் அதை எப்படி மாறுபட்ட வகையில் செய்யலாம் என்று சிந்தித்துச் செய்வதால், செய்யும் செயல் சிறப்பான முறையில் இருப்பதுடன், மற்றவர்களின் கவனத்தையும் எளிதில் கவரும். அன்பா கவும் ஆறுதலாகவும் பேசி மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்படுவீர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்பீர்கள். இயற்கையெழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்று வருவதை விரும்புவீர்கள். கற்பனைத் திறன் அதிகமிருக்கும். கலைகளை ரசிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் இருக்கும். உடன்பிறந்தவர்களை நேசிப்பீர்கள். அவர்களுக்காக எதையும் செய்வீர்கள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். சிலர் எழுத்துத் துறையில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி – 4-ம் பாதம்:
உத்திரட்டாதி 4-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி விருச்சிக செவ்வாய். அறிவாற்றல் மிக்கவர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கண்கள் செவ்வரியோடுக் காணப்படும். அடிக்கடி கோபப் படுவீர்கள். ஆனால், உடனே அமைதிக்கு மாறிவிடுவீர்கள். நல்ல குணங்களைப் பெற்றிருப் பீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மதிப்பதுடன் அதன்படியே நடந்துகொள்வீர்கள். ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டு வீர்கள். பெற்றோரிடமும், மனைவி, பிள்ளைகளிடமும் அன்பும் கனிவுமாக நடந்துகொள் வீர்கள். ஊர்ப்பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதில் துடிப்பாகச் செயல்படுவீர்கள். எப்போதும் எதையேனும் சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். பிள்ளைகள் தவறு செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பீர்கள். அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்கமாட்டீர்கள்.
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர், விநாயகர்