ரேவதி நட்சத்திரம் புதனின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் இரக்க சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் அழகான தோற்றம் கொண்டிருப்பீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். பல மொழிகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையையும் சமயோசித அறிவால் சமாளித்துவிடுவீர்கள். நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். மற்றவர்களும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். ‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்று விரும்புவீர்கள். வயதை கணித்துச் சொல்லமுடியாதபடி இளமையான தோற்றம் பெற்றிருப்பீர்கள். அனுபவ அறிவு அதிகம் பெற்றிருப்பீர்கள். வாழ்க்கையில் பிரச்னைகளுடன் கஷ்டப்படுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வீர்கள். பார்வையாலேயே மற்றவர்களை வசியப்படுத்திவிடுவீர்கள்.
இனி நட்சத்திரவாரியான பலன்களைப் பார்ப்போம்
ரேவதி 1-ம் பாதம்:
ரேவதி நட்சத்திரம் முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி தனுசு குரு. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள். மற்றவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள். கொண்ட கொள்கையிலும் எடுத்த முடிவிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். பிதுரார்ஜித சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பீர்கள். ஆணாக இருந்தால் பெண் நண்பர்களும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகம் பெற்றிருப்பீர்கள். ஆனாலும் வரம்பு மீறமாட்டீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டவேண்டும் என்று விரும்புவீர்கள். அனுபவ அறிவால் மற்றவர்களை வழிநடத்துவீர்கள். புதுப்புது சிந்தனைகள் உங்கள் மனதில் எழுந்தபடி இருக்கும். இனிமையான பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவீர்கள்.
ரேவதி 2-ம் பாதம்:
ரேவதி 2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதியாக இருப்பவர் மகரத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனி. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள், துறுதுறுவென்று இருப்பீர்கள். சோம்பல் என்பதே உங்களுக்குப் பிடிக்காது. பெற்றோர்களிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பீர்கள். அவர்களை கடைசி வரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். யாருக்காகவும் பெற்றோர்களை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். பிள்ளைகளைப் பலரும் போற்றும்படி வளர்க்கவேண்டும் என்று நினைப்பீர்கள். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்யத் தயங்கமாட்டீர்கள். சிந்தனையிலும் செயலிலும் உறுதியாக இருப்பீர்கள். அடிக்கடி கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படுவீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழக்க மாட்டீர்கள்.
ரேவதி 3-ம் பாதம்:
ரேவதி 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி கும்ப சனி. தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையில் எதிர்ப்படும் அத்தனை துன்பங்களிலிருந்தும் தெய்வ நம்பிக்கை உங்களைக் காப்பாற்றிவிடும். அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவீர்கள். அதிகாரத்துக்கும் அந்தஸ்துக்கும் அடிபணியமாட்டீர்கள். எதிரிக்கும் இரக்கம் காட்டும் குணமுள்ளவர்கள். பெரிய சாதனைகளைச் செய்தாலும் தன்னடக்கத்துடன் காணப்படுவீர்கள். ரகசியங்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் கட்டிக் காப்பீர்கள். புதுப்புது டிசைனில் ஆடைகள், நகைகள் வாங்குவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவீர்கள். எப்போதும் இனிமையாகப் பேசுவீர்கள். கோபத்தில்கூட கடுமையான சொற்களைப் பேசமாட்டீர்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் அல்லது நிறுவனம் அமைத்து மற்றவர்களுக்கு முதலாளியாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள்.
ரேவதி 4-ம் பாதம்:
ரேவதி நட்சத்திரம் 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மீன குரு. தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆரவாரமில்லாத அமைதியான வாழ்க்கையை விரும்புவீர்கள். ஏழைகளுக்கு முடிந்த அளவுக்குச் சேவை செய்வீர்கள். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். எது நடந்தாலும் நல்லதற்குத்தான் என்று நினைத்து அமைதியாக இருப்பீர்கள். மனிதநேயம் மிக்கவர்கள். பெற்றோர், வாழ்க்கைத் துணை, பிள்ளைகளிடம் பாசம் கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அறிமுகம் பெற்றிருப்பீர்கள். அன்புக்குக் கட்டுப்படுவீர்கள். நீதி நியாயத்துக்காகப் போராடுவீர்கள். தொண்டு நிறுவனங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள் வீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகமும் பெற்றிருப்பீர்கள். கோயில் திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையின் அடித்தட்டில் பிறந்தவர்களாக இருந்தாலும் எப்படியாவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்துவிடுவீர்கள்.
வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி